இந்தியாவை விட்டு வெளியேறும் மற்றுமொரு கார் நிறுவனம்... இனி இந்த விலை குறைவான கார்களை நம்மால் வாங்கவே முடியாது!
இந்தியாவை விட்டு வெளியேறுவதாக மற்றுமொரு கார் உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

நிஸான் நிறுவனத்தின் முயற்சியால் 2013 ஆம் ஆண்டில் மீண்டும் புத்துயிர் பெற்றது டட்சன் நிறுவனம். இந்நிறுவனத்தின் வாயிலாக பட்ஜெட் வாகன விரும்பிகளை அதிகளவில் கவர நிஸான் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இதனடிப்படையில் மலிவு விலை கார் மாடல்கள் சிலவற்றை நிறுவனம் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்தது.

ஆனால், அவற்றிற்கு போதுமான வரவேற்புக் கிடைக்காத காரணத்தினால் தற்போது நாட்டை விட்டு டட்சன் நிறுவனத்தை வெளியேற்றுவதாக நிஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் ஒரு சில நிறுவனங்கள் மாதத்திற்கே பல ஆயிரம் யூனிட்டு புதிய வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றன.

அதேவேலையில், குறைவான விலையில் கார்களை விற்பனைக்கு வழங்கும் டட்சன் நிறுவனத்தின் தயாரிப்புகளோ ஆண்டிற்கே ஆயிரக்கணக்கில்தான் விற்பனையாகின்றன. சென்ற 2021ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாகவே 4,296 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது. இதுமாதிரியான வரவேற்பு இல்லாததைக் காரணம் காட்டியே டட்சன் நிறுவனம் தற்போது நாட்டை விட்டு வெளியேறுகின்றது.

ஆகையால், இனி வரும் காலங்களில் டட்சன் நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்தியாவில் வாங்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. நிறுவனம் ஏற்கனவே அதன் கார் மாடல்கள் சிலவற்றின் உற்பத்தி பணிகளை நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனத்தின் சென்னை தயாரிப்பு ஆலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டட்சன் புத்துயிர் பெற்று முதல் முறையாக களமிறங்கிய நாடாக இந்தியா இருக்கின்றது. இந்த நிலையில், துரதிரஷ்டவசமாக அதன் வெளியேற்றத்தை சந்திக்கும் முதல் நாடாகவும் இந்தியா மாறியிருக்கின்றது. நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த நிலையில் இந்த முடிவை கார் உற்பத்தி நிறுவனம் எடுத்திருக்கின்றது. 2019ம் ஆண்டு முதலே உற்பத்தி நிறுத்தம் திட்டத்தை டட்சன் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

நிறுவனத்தின் வெளியேற்றத்தால் 9 ஆண்டு கால டட்சன் இந்திய பயணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் நிறுவனம் அதன் உற்பத்தி பணிகளை நிறுத்துகின்றது. இந்தியாவில் டட்சன் நிறுவனம் கோ (Go), கோ பிளஸ் (Go Plus) மற்றும் ரெடி கோ (Redi-Go)ஆகிய மாடல்களை விற்பனைக்கு வழங்கி வந்தது.

இவை அனைத்தின் உற்பத்தி பணிகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. இப்பணி நிறுத்தப்பட்டிருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கான விற்பனைக்கு பிந்தைய சேவையை தொடர்ந்து வழங்கும் என தெரிவித்துள்ளது. அதாவது, டட்சன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சர்வீஸ், உத்தரவாத சேவைகள் மற்றும் உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக வழங்குவோம் என தெரிவித்துள்ளது.

டீலர்கள் வாயிலாக இந்த சேவை தடையின்றி வழங்க வழிவகை செய்திருப்பதாக நிஸான் கூறியுள்ளது. நிஸான் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கிய முதல் தயாரிப்பாக 'கோ' இருக்கின்றது. 2014ம் ஆண்டிலேயே இக்கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த கார் மாடலின் ஆரம்ப விலையே ரூ. 3.12 லட்சம் மட்டும்தான். அதிகபட்சமாக ரூ. 3.69 லட்சம் வரையில் இக்கார் விற்பனைச் செய்யப்பட்டது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

இத்தகைய குறைவான விலையில் கார்களை விற்பனைக்கு வழங்கியும் நிறுவனத்தால் இந்தியாவில் வளர்ச்சியைக் காண முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமான ஓர் செய்தியாக இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக டட்சன் கோ ப்ளஸ் எனும் மாடலை 2015ம் ஆண்டில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இது ஓர் மலிவு விலை எம்பிவி ரக காராகும். ஆனால், சிறப்பம்சங்கள் இக்காரில் சற்று குறைவு என்பதால் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்க அது தவறிவிட்டது.

இதற்கு அடுத்தபடியமாக மாருதி சுஸுகி செலிரியோவிற்கு போட்டியளிக்கும் வகையில் நிறுவனம் ரெடி-கோ மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. உயரமான தோற்றம் கொண்ட ஹேட்ச்பேக் கார் மாடல் இதுவாகும். இதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் கோ மற்றும் கோ பிளஸ் ஆகிய இரு மாடல்களிலும் நிறுவனம் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனையும் 2019ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.

இதுபோன்ற பன்முக நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரும் இந்நிறுவனத்தின் எந்தவொரு தயாரிப்பும் பெரியளவில் இந்தியர்களைக் கவரவில்லை. குறிப்பாக, பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இக்கார்கள் மிகக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றன. ஆகையால், என்னதான் இவற்றின் விலை குறைவாக இருந்தாலும் இந்தியர்கள் டட்சன் கார்களை வாங்க முன் வரவில்லை. இதன் விளைவு தற்போது நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








