இந்தியாவில் கெத்து காட்டிய நிஸான் நிறுவனம்... ஏற்றுமதியிலும் மாஸ் பண்ணியிருக்காங்க... கலக்குங்க!
நிஸான் நிறுவனம் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி என இரண்டிலும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நிஸான் இந்தியா நிறுவனம் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் ஒட்டுமொத்தமாக 8,906 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது விற்பனையில் 29 சதவீத வளர்ச்சியை நிஸான் இந்தியா நிறுவனம் பதிவு செய்துள்ளது. உள்நாட்டு விற்பனையை விட நிஸான் நிறுவனத்தின் ஏற்றுமதிதான் அதிகம் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய சுவாரஸ்யமான விஷயம் ஆகும்.

நிஸான் இந்தியா நிறுவனம் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் 3,283 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு 5,623 கார்களை நிஸான் இந்தியா நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி என ஒட்டுமொத்தமாக பார்த்தால் நிஸான் இந்தியா நிறுவனம் 8,906 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

ஏற்றுமதி என்ற வகையில் மட்டும் பார்த்தால் நிஸான் இந்தியா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது 71 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிஸான் நிறுவனத்தின் கார் என்றால், அது மேக்னைட்தான். இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ரெனால்ட் கைகர் உள்ளிட்ட கார்களுடன் நிஸான் மேக்னைட் போட்டியிட்டு வருகிறது. இந்த செக்மெண்ட்டில் போட்டி அதிகரித்து கொண்டே வருவதையடுத்து, நிஸான் நிறுவனம் சமீபத்தில் மேக்னைட் காரில் அதிரடியான அப்டேட் ஒன்றை செய்துள்ளது.

அது ரெட் எடிசன் ஆகும். நிஸான் மேக்னைட் காரின் ரெட் எடிசன் நடப்பாண்டு ஜூலை மாத மத்தியில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேக்னைட் ரெட் எடிசன் மாடல்களின் ஆரம்ப விலையை நிஸான் இந்தியா நிறுவனம் 7.86 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடனும் நிஸான் மேக்னைட் ரெட் எடிசன் கிடைக்கும். இதன் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சிவப்பு வண்ண அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலை நிஸான் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

நிஸான் மேக்னைட் ரெட் எடிசன் மாடலில் ஏர் ப்யூரிஃபையர், ஆம்பியண்ட் மூட் லைட்டிங் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் தற்போது போட்டி வலுவாகி கொண்டே வருகிறது.

மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய 2 நிறுவனங்களும் முறையே அப்டேட் செய்யப்பட்ட புதிய பிரெஸ்ஸா மற்றும் வெனியூ ஆகிய கார்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. இந்த 2 புதிய மாடல்களும் பல்வேறு விதங்களிலும் மேம்படுத்தப்பட்டுள்ளதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதன் காரணமாக மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வெனியூ ஆகிய 2 கார்களும் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்ய தொடங்கியுள்ளன. அதேபோல் ஹூண்டாய் நிறுவனம் வெனியூ காரின் என் லைன் மாடலையும், கியா நிறுவனம் சொனெட் காரின் எக்ஸ் லைன் மாடலையும் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன.

அதேபோல் மஹிந்திரா நிறுவனம் தற்போது எக்ஸ்யூவி300 காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக இந்த புதிய மாடலின் அதிகாரப்பூர்வ டீசரை மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

எனவே மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி போட்டி அதிகரித்து கொண்டே வருவதன் காரணமாகவும், பண்டிகை காலத்தை முன்னிட்டும்தான் நிஸான் நிறுவனம் மேக்னைட் காரின் ரெட் எடிசன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மேக்னைட் காரின் விற்பனை உயர்வதற்கு இந்த ரெட் எடிசன் மாடல் உதவி செய்யும் என நிஸான் நிறுவனம் எதிர்பார்க்கிறது.


Click it and Unblock the Notifications








