என்னது இந்தியாவை விட்டு ஹோண்டா வெளியே செல்கிறதா? என்ன சொல்கிறார் ஹோண்டா சிஇஓ
ஜெனரல் மோட்டார்ஸ் & ஃபோர்டு மோட்டாரை தொடர்ந்து ஹோண்டாவும் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என வதந்திகள் வெளியாகி வந்த நிலையில், அவற்றை நிராகரிக்கும் விதமாக ஹோண்டா சிஇஓ அசத்தலான பதிலினை அளித்துள்ளார்.

ஓர் நாட்டு சந்தையில் எதிர்பார்த்த அளவிற்கு பெரியதாக விற்பனை கிடைக்கவில்லை என்றால் அந்த நாட்டை விட்டு குறிப்பிட்ட நிறுவனங்கள் வெளியேறி செல்வதை இதற்குமுன் பார்த்துள்ளோம். இந்திய சந்தையில் இருந்து கூட கடந்த காலங்களில் முன்னணி அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு வெளியேறியுள்ளன.

இந்த வகையில் உலகளவில் பிரபலமான ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா கார்ஸும் இந்திய சந்தையில் இருந்து நடையை கட்ட உள்ளதாக வதந்திகள் சமீப காலமாக பரவி வந்தன. குறிப்பாக, ஃபோர்டின் வெளியேற்றத்திற்கு பிறகு இந்த பேச்சு சற்று அதிகமாகவே எழ துவங்கியது. ஏனெனில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் கார்கள் விற்பனையும் பெரியதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.

ஆனால் இதுபற்றி பேசிய ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், சிஇஓ-வுமான டகுயா டிசுமுரா, நிறுவனம் இந்தியாவில் அதன் சந்தையை விரிவுப்படுத்த எதிர்நோக்கி உள்ளதாகவும், இந்தியாவை விட்டு செல்வதற்கான எந்தவொரு வாய்ப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் வெற்றிகளை சந்திக்காததற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று, காம்பெக்ட் எஸ்யூவி காரை விற்பனை செய்யாதது ஆகும்.

ஏனெனில் இந்திய சந்தையில் கடந்த சில வருடங்களாக எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட்டே விரிவடைந்து வருகிறது. அதிலிலும் குறிப்பாக அளவில் சற்று சிறிய காம்பெக்ட் எஸ்யூவி காரை வாங்கவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதனாலேயே இந்த பிரிவில் குறைந்தது ஒரு மாடலையாவது கொண்டிருக்க வேண்டும் என அனைத்து முன்னணி பிராண்ட்களும் உறுதியுடன் உள்ளன.

இந்தியாவில் நீண்ட வருடங்களாக தயாரிப்புகளை விற்பனை செய்துவரும் ஹோண்டாவில் இருந்தும் டபிள்யூ.ஆர்-வி என்ற ஒரு சப்-காம்பெக்ட் எஸ்யூவி உள்ளது. ஆனால் இதன் விற்பனை ஆரம்பத்தில் இருந்தே பெரியதாக பதிவானது இல்லை. இதனால் இந்திய வாடிக்கையாளர்களின் இரசனைக்கும், இந்திய சாலைகளின் தரத்திற்கும் ஏற்ற புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த ஹோண்டா தயாராகி வருகிறது.

கடந்த 2021-22 நிதியாண்டில் மொத்த பயணிகள் கார்கள் விற்பனையில் பெரும்பாலானவை எஸ்யூவி உடலமைப்பை கொண்டவை என்கிற விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால்தான் வலிமையான எஸ்யூவி கார்கள் வரிசையை கொண்ட கியா, ஹூண்டாய் & டாடா போன்ற நிறுவனங்கள் கணிசமான எண்ணிக்கையிலான விற்பனையை பார்த்து வருகின்றன, ஹோண்டாவால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.

2015இல் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் விற்பனை செய்த பயணிகள் கார்கள் எண்ணிக்கை 1,92,059 ஆகும். மொத்த பயணிகள் கார்கள் விற்பனை எண்ணிக்கையில் இது கிட்டத்தட்ட 7.26 சதவீதமாகும். ஆனால் கடந்த ஆண்டில் 90 ஆயிரத்திற்கு குறைவான எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்து, மொத்த விற்பனையில் 3%-க்கும் குறைவான சந்தை பங்கை ஹோண்டா கார்ஸ் கொண்டுள்ளது.

அதாவது வெறும் 5 வருடங்களில் இத்தகைய சரிவை ஹோண்டா கண்டுள்ளது. இதற்கு கியா, எம்ஜி போன்ற புதிய பிராண்ட்களின் வருகை மற்றும் டாடா மோட்டார்ஸ் & மஹிந்திரா போன்ற உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி உள்ளிட்டவற்றை காரணமாக கூறினாலும், இத்தனை வருடங்களில் இந்தியாவில் பயணிகள் கார்கள் விற்பனையை அதிகரிப்பதற்கு ஹோண்டா கார்ஸ் நிறுவனம் பெரியதாக எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.


Click it and Unblock the Notifications








