டெஸ்லாவிற்கு தண்ணி காட்டும் மத்திய அரசு... இந்தியர்களின் வேலைவாய்ப்பிற்காக அதிரடி முடிவு... என்னனு தெரியுமா?
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழில் தொடங்குவது தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு தனது முடிவில் உறுதியாக உள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று டெஸ்லா. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு டெஸ்லா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அறிமுகமே தேவையில்லை என்னும் அளவிற்கு மிகவும் பிரபலமாக உள்ள டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் இன்னும் எலெக்ட்ரிக் கார் விற்பனையை தொடங்கவில்லை.

இதற்கு இந்திய அரசு விதிக்கும் இறக்குமதி வரி மிகவும் அதிகமாக இருப்பதுதான் காரணம் என கூறப்படுகிறது. இந்தியாவில் இறக்குமதி வரி அதிகமாக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார். எனவே இங்கு எலெக்ட்ரிக் கார் விற்பனையை தொடங்குவதற்கு உதவியாக, இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களின் விலை மிகவும் அதிகம். அப்படி இருக்கும் இறக்குமதி வரியும் அதிகமாக இருந்தால், எலெக்ட்ரிக் கார்களின் விலை இன்னும் அதிகமாக உயர்ந்து விடும். இந்தியா போன்ற சந்தையில் இவ்வளவு அதிக விலை கொடுத்து மக்கள் எலெக்ட்ரிக் கார்களை வாங்குவார்களா? என்ற சந்தேகம் டெஸ்லா நிறுவனத்திற்கு உள்ளது.

மறுபக்கம் இந்திய அரசோ, இந்தியாவில் தொழிற்சாலையை தொடங்க வேண்டும் என டெஸ்லா நிறுவனத்திடம் வலியுறுத்தி வருகிறது. இங்கு தொழிற்சாலையை தொடங்கி எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்தால் மட்டுமே இங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவேதான் இந்தியாவில் தொழிற்சாலையை தொடங்கும்படி டெஸ்லா நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவில் தொழிற்சாலையை தொடங்கினால் மட்டுமே வரி குறைப்பு போன்ற சலுகைகளை பற்றி யோசிக்க முடியும் என மத்திய அரசு கூறியுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகை தொடர்பான இந்திய முடிவில் மத்திய அரசு திட்டவட்டமாக இருப்பது தற்போது மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்களவையில் சிவசேனா உறுப்பினர் விநாயக் பௌராவ் ரவுத் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, கனரக தொழில்துறை இணை அமைச்சர் கிருஷ்ணா பால் குஜ்ஜார் பதில் அளித்தார். இதில் அவர் கூறியிருப்பதாவது: சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு (டெஸ்லா) மானியங்களையோ அல்லது வரிகளில் தளர்வுகளையோ வழங்க முடியாது.

ஏனெனில் அவர்கள் தங்களது தொழிற்சாலையை இங்கே அமைக்க விரும்பவில்லை. சீனாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி விட்டு, நமது சந்தையில் லாபம் சம்பாதிக்க முயலும் நிறுவனத்திற்கு நாம் ஏன் சாதகமாக இருக்க வேண்டும்? இதுபோன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான நமது பிரதமரின் பார்வை தெளிவாக உள்ளது.

நீங்கள் உங்கள் பொருட்களை இங்கே விற்பனை செய்ய விரும்பினால், அவற்றை இங்கேயே உற்பத்தி செய்யுங்கள். இவ்வாறு கிருஷ்ணா பால் குஜ்ஜார் தனது பதிலில் தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்திற்கு வரிகளில் என்னவிதமான சலுகைகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது? என விநாயக் பௌராவ் ரவுத் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குதான் அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனம் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு தனது முடிவில் உறுதியாக இருப்பதை நாம் இதன் மூலமாக புரிந்து கொள்ளலாம். மத்திய அரசின் இந்த முடிவிற்கு இந்தியாவில் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் முடிவிற்கு டெஸ்லா நிறுவனம் ஒப்புதல் தெரிவித்தால், இங்கே பலருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதுதான் இதற்கு காரணம்.

இந்தியாவை எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு மத்திய அரசு விரும்புகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை பல மடங்கு அதிகரிக்கவுள்ளது என்பது தற்போதே உறுதியாகி விட்டது.

எனவே இந்தியாவை எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மையமாக மாற்றினால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும். தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் உள்ளது. வரும் காலங்களில் பல்வேறு நிறுவனங்கள் இங்கு எலெக்ட்ரிக் கார் உற்பத்தி மற்றும் விற்பனையை தொடங்கவுள்ளன. இதில் டெஸ்லாவும் ஒன்றாக இருக்குமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications








