விஐபி போல டோல் கட்டாம போகலாம்... தனி நபர் கார்களுக்கான டோல் கட்டணம் ரத்து... எந்த மாநிலத்தில் தெரியுமா?
இந்தியாவில் டோல்கேட் கட்டணம், வாகன உரிமையாளர்களுக்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது.
Recommended Video
இந்த சூழலில், தனி நபர் கார்களுக்கான டோல் கட்டணத்தை இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட மாநில அரசு ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

"ரோடே இல்லா ரோட் டேக்ஸ் வாங்கிறீங்க" என அரசை புலம்பி தள்ளுபவர் நம்மில் பலர் இருக்கின்றனர். இத்தகையோரின் புலம்பல் சத்தம் தற்போது குறிப்பிட்ட ஓர் மாநில அரசுக்கு கேட்டிருக்கும் என தெரிகின்றது. தனி நபர் பயன்படுத்தும் காருக்கான சுங்க வரியை ரத்து செய்யப்போவதாக அந்த மாநில அரசு அறிவித்திருக்கின்றது.

மத்திய பிரதேச மாநில அரசே இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கின்றது. தனி நபர் வாகன உரிமையாளர்களிடம் இருந்து சுங்க வரி வசூலிக்கும் விதியை தகர்த்தெறிய அரசு முடிவு செய்திருக்கின்றது. இதனால், தனிநபர் கார் உரிமையாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர். மேலும், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மாநில அரசை மக்கள் புகழ்ந்து தள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்த விதி மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதிய மற்றும் பழைய நெடுஞ்சாலைகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநில அரசின் கீழ் 200க்கும் அதிகமான சாலைகள் உள்ளன. இங்குள்ள சுங்கச்சாவடிகள் வாயிலாக பல மடங்கு வருமானத்தை மத்திய பிரதேச மாநில ஈட்டி வருகின்றது. பெருமளவிலான வருமானம் வர்த்தக ரீதியாக இயங்கக் கூடிய வாகனங்களிடம் இருந்தே கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால் 100 சதவீத வருமானத்தில் 80 அதிகமான சதவீத வருமானம் வர்த்தக வாகனங்களின் வாயிலாகவே கிடைத்துக் கொண்டிருக்கின்றது. தனி நபர் கார்களின் இயக்கத்தின் வாயிலாக 20 சதவீதத்திற்கும் குறைவான வருவாயே கிடைக்கின்றது. இந்த 20 சதவீத வருவாயை இழக்க தயாராகி இருக்கின்றது, மத்திய பிரதேசம்.

அரசின் முடிவால் இனி மத்திய பிரதேசத்தில் வணிக வாகனங்கள் மட்டுமே சுங்க வரி செலுத்த வேண்டும் என்கிற நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட விஐபிக்களின் வாகனங்களுக்கு சுங்க வரி சலுகை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தனிநபர் கார் பயன்பாட்டாளர்களுக்கும் சுங்க வரி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஐபி வாகனங்கள் தவிர நீதிபதிகள், மத்திய அரசு செயலாளர்கள், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிற பாதுகாப்பு வாகனங்கள் ஆகியவற்றிற்கும் சுங்கச்சாவடி வரி தள்ளுபடி ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்றது. இந்த வரி விலக்கு மத்திய பிரதேசம் மட்டுமின்றி இன்னும் பல மாநில அரசுகள் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

மத்திய அரசு தற்போது பயன்பாட்டில் இருக்கும் சுங்க வரி வசூலிப்பு முறையை வெளியேற்றுவிட்டு, புதிய வகையிலான சுங்க வரி வசூலிப்பை மேற்கொள்ள இருக்கின்றது. ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க வரி வசூலிப்பையே அரசு வெகு விரைவில் நாடு முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதற்கான கட்டமைப்புகளை மேற்கொள்ளும் பணியில் அரசு தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.

இந்த புதிய சிஸ்டம் ஓர் வாகனம் அது பயணிக்கும் தூரம் வரை மட்டுமே கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தை வசூலிக்க உதவும். இதன் பொருள் நீங்கள், நெடுஞ்சாலையை எந்தளவு தூரம் பயன்படுத்துகின்றீர்களோ அதற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். ஆகையால், நெடுஞ்சாலை பயன்பாட்டாளர்களுக்கு இந்த புதிய சிஸ்டம் பெரியளவில் சிக்கனத்தை வழங்க உதவும் என்பது தெரிகின்றது.

ஜிபிஎஸ் அடிப்படையில் சுங்க வரியை வசூலிக்கும் நடைமுறையை ஏற்கனவே பல்வேறு நாடுகள் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த சிஸ்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவும் இச்சிஸ்டத்தை கையிலெடுக்க திட்டமிட்டிருக்கின்றது.
குறிப்பு: பதிவில் வழங்கப்பட்டு உள்ள அனைத்து சுங்க சாவடி படங்களும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








