அரசு துறையாக இருந்தாலும் பழைய டப்பாக்களை உருட்டி கொண்டு செல்ல முடியாது... அதிரடி ஆப்பு வைத்த நிதி அமைச்சகம்!
அரசு துறையாக இருந்தாலும் பழைய இத்துப்போன வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என அனைத்து அமைச்சகங்களுக்கும் நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகையால், தற்போது பயன்பாட்டில் இருக்கும் 15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய அரசு வாகனங்கள் விரைவில் ஸ்கிராப் செய்ய அனுப்பப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
நாட்டில் தகுதியற்ற வாகனங்களின் இயக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. சிலர் லாபத்திற்காக பழைய வாகனங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவை எப்போது வேண்டுமானாலும் பேராபத்தை ஏற்படுத்தலாம். ஆம், பழைய வாகனங்கள் எப்போது பிரேக் ஃபெயிலியர் ஆகும் என்பதே நமக்கு தெரியாது. குறிப்பாக, அவற்றால் எப்போது வேண்டுமானாலும் விபத்துகள் ஏற்படலாம். இந்த மாதிரியான சூழலே பழைய வாகனங்களைச் சுற்றி நிலவுகின்றது. இதுமட்டுமில்லைங்க சுற்றுச் சூழலுக்கும் அவை மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன.

காற்று மாசடைவதில் முக்கிய பங்களிப்பை பெட்ரோல், டீசல் வாகனங்கள் கொண்டிருக்கின்றன. அதிலும், பழைய வாகனங்களின் பங்களிப்பு இதில் மிகப் பெரியதாக உள்ளது. பழைய வாகனங்களில் இருந்து வெளிவரும் அதிகப்படியான கார்பனினாலேயே காற்று மிக மோசமாக மாசடைகின்றது. எனவேதான் அரசு பழைய வாகனங்களின் இயக்கத்திற்கு எதிராக போர் கொடியைத் தூக்க தொடங்கியிருக்கின்றது. நாட்டில் 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகள் பழைய டீசல் வாகனங்களின் இயக்கத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை தனி நபர்களுக்கு மட்டும் இல்லை அரசு துறைகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. சமீபத்தில் அரசு சார்பில் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய பொதுப் போக்குவரத்து பேருந்துகளை பயன்பாட்டில் இருந்து அப்புறப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது இந்த உத்தரவே அனைத்து அமைச்சகங்களும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, அனைத்து அமைச்சகங்களும் 15 ஆண்டுகள் பழைய வாகனங்களைப் பயன்பாட்டில் இல்லாததை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாசுபாட்டைக் குறைத்தல் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை நிதி ஆயோக் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து செலவின துறை வெளியிட்டுள்ளது. எனவே வெகு விரைவில் அனைத்து அமைச்சங்களிலும் பயன்பாட்டில் இருக்கும் பழைய ஆபத்தான வாகனங்கள் அப்புறப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றிற்கு பதிலாக புதிய வாகனங்கள் அந்த இடத்தில் நிரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நிரப்பப்படும் வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருக்க வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. ஏனெனில் அண்மைக் காலங்களாக மத்திய, மாநில அரசுகள் தங்களிடம் இருக்கும் பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களை அப்புறப்படுத்திவிட்டு, அவற்றிற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களைக் களமிறக்கி வருகின்றன. இவை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது மற்றும் இயற்கைக்குக்கு நண்பனாக செயல்படும் என்கிற காரணத்திற்காகவும் மின்சார வாகனங்களை அரசுகள் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றன.
ஏற்கனவே நாட்டு மக்களை மின்சார வாகனங்களை பயன்படுத்த அரசுகள் ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. இதற்காக வரி சலுகை, மானியம் போன்றவை அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, மின் வாகன பயன்பாட்டிற்கு தடை கல்லாக இருக்கும் அடிப்படை அத்தியாவசிய குறைபாடுகளைப் போக்கும் பணியிலும் அரசு ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய பங்காகும் மின் வாகன பயன்பாட்டிற்கு மாறும் செயல்பாட்டையும் அது மேற்கொண்டு வருகின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக மும்பை போன்ற பிரபல நகரங்களில் மின்சார பேருந்துகளை அரசுகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றன. இதுதவிர சில மாநில அரசுகள் தங்களின் காவல்துறை மற்றும் முக்கிய அதிகாரிகளின் பயன்பாட்டிற்கு மின்சார வாகனங்களையே வாங்கத் தொடங்கியிருக்கின்றன. ஏன், அரசின் முக்கிய பதவியில் இருக்கும் சில மூத்த அதிகாரிகள்கூட தங்களின் சொந்த பயன்பாட்டிற்காக மின்சார வாகனங்களையே வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். இதுமட்டுமில்லைங்க, நாட்டின் பாதுகாப்பு துறையிலும் மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
எனவே புதிய அறிவிப்பால் வெளியேற்றப்பட இருக்கும் பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக புதிய மின்சார வாகனம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படலாம் என யூகிக்கப்படுகின்றது. இல்லையெனில் புதிய மாசு உமிழ்வு பொருந்த பெட்ரோல் வாகனத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். பொது மக்களிடத்தில் இருப்பதைப் போலவே அரசாங்கங்கத்திடமும் அதிகளவில் பழைய வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆகையால், காற்று மாசடைவதில் அரசு வாகனங்களின் பங்களிப்பும் அதிகளவில் உள்ளது. இந்த நிலையிலேயே காற்று மாசுபடுவதைத் தவிர்க்கும் விதமாக இந்த முன்னோடி முயற்சியை நிதி அமைச்சகம் கையில் எடுத்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








