அடேங்கப்பா... இந்தியாவில் இத்தனை எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கா? மத்திய அமைச்சர் சொன்ன பதிலால் ஆச்சரியம்!
இந்தியாவில் எத்தனை எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளது? என்ற விபரம் வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த வாரம் வரை ஒட்டுமொத்தமாக 10,60,707 எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் 1,742 பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் செயல்பாட்டில் உள்ளன. நாடாளுமன்றத்தில் இந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமடைந்து வரும் நிலையில், இந்த புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன.

மாநிலங்களவையில் எழுத்து பூர்வமாக வழங்கிய பதிலில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் 19ம் தேதி வாஹன் 4 தரவுகளின்படி, இந்தியாவில் 10,60,707 எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கின்றன.

அத்துடன் மார்ச் 21ம் தேதி நிலவரப்படி, 1,742 பொது சார்ஜிங் ஸ்டேஷன்களும் இந்தியாவில் இயங்கி வருகின்றன. இவ்வாறு அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இதுதவிர மற்றொரு கேள்விக்கும் அமைச்சர் நிதின் கட்காரி பதில் அளித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் இயங்கி கொண்டுள்ள டோல் பிளாசாக்களின் (Toll Plazas) எண்ணிக்கை நமக்கு தெரியவந்துள்ளது.

இதன்படி இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 816 டோல் பிளாசாக்கள் செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், ராஜஸ்தான் மாநிலத்தில் 122 டோல் பிளாசாக்கள் இயங்கி வருகின்றன.

அதே சமயம் உத்தர பிரதேச மாநிலத்தில் 90 டோல் பிளாசாக்கள் இயங்கி கொண்டுள்ளன. அதே நேரத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் 77 டோல் பிளாசாக்கள் செயல்பட்டு வருகின்றன. இவைதான் அதிக டோல் பிளாசாக்கள் உள்ள மாநிலங்கள் ஆகும். முன்னதாக வெகு சமீபத்தில்தான் டோல் பிளாசாக்கள் தொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வெளியிட்டிருந்தார்.

60 கிலோ மீட்டர்களுக்கும் குறைவான இடைவெளிகளில் செயல்பட்டு வரும் டோல் பிளாசாக்கள் மூடப்படும் என்பதுதான் அந்த அதிரடியான அறிவிப்பு. நாடாளுமன்றத்திலேயே அமைச்சர் நிதின் கட்காரி இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பு வாகன உரிமையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பொது சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் தற்போது நமக்கு தெரியவந்துள்ளன. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு தற்போது ஊக்குவித்து வருகிறது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரியே இந்த விஷயத்தில் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது, மாற்று எரிபொருட்களில் இயங்கும் அனைத்து வகையான வாகனங்களின் பயன்பாட்டையும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஊக்குவித்து வருகிறார். இதன் மூலம் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைக்க வேண்டும் என்பது அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் மத்திய அரசின் விருப்பம்.

அதேபோல் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க வேண்டும் என்ற திட்டமும் இதில் அடங்கியுள்ளது. மத்திய அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் நமது போக்குவரத்திற்கான முக்கிய பங்களிப்பை செய்யவுள்ளன என்பது உறுதி.

பொதுமக்கள் மத்தியில் ஆர்வமும், விழிப்புணர்வும் அதிகரித்து கொண்டே வருவதால், இந்தியாவில் தற்போது தொடர்ச்சியாக பல்வேறு எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகமாக வருகின்றன. தற்போதைய நிலையில் டாடா, ஹூண்டாய், எம்ஜி போன்ற ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன.

ஆனால் எதிர்காலத்தில் கியா, மாருதி சுஸுகி போன்ற பல்வேறு நிறுவனங்களும் இந்திய சந்தையில் தங்களது எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளன. கியா நிறுவனத்தின் இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் கார் நடப்பாண்டே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications








