ஹூண்டாய் நிறுவனத்திற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு... இன்னும் பகிரங்கமான மன்னிப்பு தேவை!
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதால் ஹூண்டாய் நிறுவனத்திற்கு எதிர்ப்பு வலுக்க தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கின்றது பிரபல கார் உற்பத்தி நிறுவனம், ஹூண்டாய் (Hyundai). தென்கொரியாவை தாயகமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் இந்நிறுவனம், இந்தியாவில் மிக வலுவான சந்தையைக் கொண்டிருக்கின்றது.

நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனமாக இது விளங்குகின்றது. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய கருத்து வெளியாகியிருப்பது நிறுவனத்திற்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகையால், இந்த விவகாரத்தில் கார் உற்பத்தி நிறுவனம் மன்னிப்பு கோரியிருக்கின்றது.

இத்துடன், தென்கொரியா அரசும் இந்த விவகாரத்தில் வருத்தம் தெரிவித்திருக்கின்றது. காஷ்மீர் பிரிவினை வாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 5ம் தேதி அன்று 'காஷ்மீர் ஒற்றுமை தினம்' அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதையொட்டியே பாகிஸ்தானில் உள்ள ஹூண்டாய் கார் விற்பனையாளர் ஒருவர் ஆதரவான கருத்தை தெரிவித்தார்.

"காஷ்மீர் சகோதரர்களின் தியாகத்தை நினைவு கூருவோம், அவர்களின் சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்" என்ற சர்ச்சையான கருத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தது. இது ஒட்டுமொத்த நாட்டிற்குமே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

விற்பனையாளர் ஒருவர் வெளியிட்ட சர்ச்சை கருத்து ஒட்டுமொத்த நிறுவனத்தையுமே பாதிக்கச் செய்திருக்கின்றது. ஆகையால், இந்த விவகாரத்தில் விற்பனையாளர் வெளியிட்ட கருத்திற்கு ஹூண்டாய் நிறுவனம் மன்னிப்பு கோரியது. மேலும், இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கருத்தல்ல, விற்பனையாளரின் தனிப்பட்ட கருத்தே ஆகும். பிராண்டை பயன்படுத்தி அவர்கள் இவ்வாறு செய்திருப்பது வேதனையளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோருகின்றோம் என தெரிவித்தது. ஆனால், இது போதுமானதாக இல்லை என இந்திய அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. இதுகுறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், சேதத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தெளிவான மன்னிப்புக் கேட்டு, தற்போது நிலவிக் கொண்டிருக்கும் கஷ்டமான சூழலை ஹூண்டாய் நிறுவனம் அழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சமூக வலைதளங்கள் வாயிலாகவே ஹூண்டாய் நிறுவனம் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோரியது. இது சற்று தாமதமாகவே வெளியிடப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இதற்கு முன்பாகவே இந்தியர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெருத்த கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. இதன் விளைவாக ஹூண்டாய் மற்றும் அதன் தாய் நிறுவனமான கியா தயாரிப்புகளை முழுமையாக புறக்கணிக்க கோரிக்கை விட தொடங்கினர்.

இதன் பின்னரே இரு நிறுவனங்களும் அடுத்தடுத்தாக மன்னிப்பு கோரும் பதிவுகளை பதிவேற்றின. ஹூண்டாய் பாகிஸ்தான் பதிவைத் தொடர்ந்து கியா பாகிஸ்தானும் இதேபோன்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த விவகாரம் இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் வகையில் இருப்பதாக அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இதை அவ்வளவு லேசாக எடுத்துக் கொள்ள கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆகையால்இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் ராஜ்யசபாவில் பேசிய பியூஷ் கோயல், இப்பிரச்னையில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவும், மன்னிப்பு கோருவது மிக வலுவானதாகவும் இருக்க வேண்டும் என ஹூண்டாய் நிறுவனத்திற்கு அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், பாகிஸ்தானில் இயங்கிக் கொண்டிருக்கும் கேஎஃப்சி, பிஸ்ஸா ஹட் மற்றும் கியா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இதே மாதிரியான ஓர் பதிவை வெளியிட்டிருக்கின்றன. ஆனால், முதலில் ஹூண்டாய் நிறுவனம் இதுமாதிரியான ட்வீட்டை பதிவிட்டதனால் பலர் இந்நிறுவனத்தை குறி வைத்து தாக்க தொடங்கியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








