ஆடி, கியா எலக்ட்ரிக் காரெல்லாம் ஓரம் நில்லுங்கப்பா - இந்திய எலக்ட்ரிக் கார் எல்லாத்தையும் தூக்கி சாப்பிட வருது
முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் பிராவைக் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய டீசர் படம் ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாக கடந்த சில வருடங்களாகவே கூறி வருகிறோம். இருப்பினும் தற்போதைக்கு எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கையே உயர்ந்து வருகிறது.

மற்றப்படி எலக்ட்ரிக் கார்களை வாங்குவது நம் மக்களிடையே இன்னமும் ஆரம்ப கட்ட நிலையிலேயே உள்ளது. இதற்கு முக்கிய காரணம், சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை ஆகும். டாடா மோட்டார்ஸ் மட்டுமே தற்போதைக்கு பட்ஜெட் விலையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறது.

மற்ற எம்ஜி, ஹூண்டாய் மற்றும் பிஒய்டி பிராண்ட்களில் இருந்து எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டாலும் அவற்றின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் விரைவில் இணைய உள்ள எலக்ட்ரிக் கார் தான் பிராவைக் டைனாமிக்ஸ் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். ஏனென்றால், இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரும் கண்கவரும் தோற்றத்தில் பிரீமியம் தரத்திலான தயாரிப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படத்தில் தெளிவாக காண முடியும். பிராவைக்கின் இந்த முதல் எலக்ட்ரிக் கார் ஆனது மேற்கூரையை பெரும்பான்மையாக சன்ரூஃப்-களால் பெற்றுள்ளது. பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான பிராவைக் டைனாமிக்ஸ் இந்த புதிய டீசர் படத்துடன் காரை பற்றிய மேலும் ஒரு முக்கிய விபரத்தையும் வெளியிட்டுள்ளது.

அதாவது, இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் எலக்ட்ரிக் மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக சுமார் 402 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளியிடும் எனவும், இத்தகைய அதிகப்பட்ச ஆற்றலை இந்த கார் பெங்களூரின் யெலஹன்கா சாலைகளில் வெளிப்படுத்தி உள்ளது எனவும் பிராவைக் டைனாமிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பெங்களூர் நிறுவனம் ஆரம்பத்தில் தனது முதல் எலக்ட்ரிக் காராக எக்ஸ்டிங்க்ஷன் எம்கே1 என்ற எலக்ட்ரிக் செடான் காரை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வந்தது. ஆனால் அதன்பின் தனது முடிவை மாற்றிக்கொண்ட பிராவைக் நிறுவனம் இந்திய மக்களின் இரசனைக்கு ஏற்ப, முதலாவதாக இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரை சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் வருகிற நவம்பர் 25ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில் தான் தற்போது இந்த காரை மக்களிடம் மேலும் கொண்டு சேர்க்கும் விதமாக டீசர் படம் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், டாப்-ஆங்கிளில் எடுக்கப்பட்ட இந்த படம் தான் வெளிவந்துள்ள புதிய பிராவைக் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் முதல் தெளிவான படம் ஆகும்.

இந்த எலக்ட்ரிக் காரின் மேற்கூரையில் பெரிய அளவிலான பனோராமிக் சன்ரூஃப்-கள் வழங்கப்பட்டு இருக்க, காரின் ஷோல்டர் லைன்கள் நன்கு பரந்த அளவில் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் பருத்த உடலமைப்பிற்கு ஏற்ப பெரிய அளவிலான சக்கரங்களும், அவற்றிற்கு மேலாக அகலமான சக்கர ஆர்ச்சுகள் வழங்கப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.

இவற்றுடன் காரின் பின்பக்கத்தில் முழு அகலத்திற்கும் வழங்கப்பட்டுள்ள மெல்லிய எல்இடி டெயில்லைட் பார்-உம் நமது கண்களை வசீகரிக்கிறது. இதனால் முன்பக்கத்திலும் இதற்கேற்ப எல்இடி ஹெட்லைட்களை எதிர்பார்க்கலாம். பிராவைக்கின் இந்த முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் அதிகப்பட்சமாக 402 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலில் இயங்கக்கூடியதாக இருக்கும் என்று ஏற்கனவே கூறிவிட்டோம்.

கிட்டத்தட்ட இதற்கு இணையான இயக்க ஆற்றலை விற்பனையில் இருக்கும் வால்வோவின் எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரும் கொண்டுள்ளது. ஆனால் கியா இவி6 எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் கிடைக்கும் இயக்க ஆற்றலை காட்டிலும் இது டபுள் மடங்கு ஆகும். இவ்வளவு ஏன், உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ள ஆடி இ-ட்ரான் எலக்ட்ரிக் காரில் கூட 402 பிஎச்பி வரையில் இயக்க ஆற்றல் கிடைப்பதில்லை.

முன்னதாக, முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் 500கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கும் என கூறி பிராவைக் டைனாமிக்ஸ் நிறுவனம் நம் அனைவரையும் மலைக்க வைத்திருந்தது. அதாவது, இந்த காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 500கிமீ வரையில் பயணிக்க முடியுமாம்.


Click it and Unblock the Notifications








