இப்பவே ஹூண்டாய், எம்ஜிக்கு தொட நடுங்க ஆரம்பிச்சிருக்கும்! அட்டகாசமான காரின் டீசரை வெளியிட்ட பெங்களூரு நிறுவனம்
பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரவைக் நிறுவனம் அதன் புதுமுக எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காரின் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. எம்ஜி இசட்எஸ் இவி மற்றும் ஹூண்டாய் கோனா இவிக்கு போட்டியாக விரைவில் இந்தியாவில் வெளியீட்டைப் பெற இருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் 'டெஸ்லா' என்று கூற முழு தகுதியைக் கொண்ட நிறுவனமாக பிரவைக் (Pravaig) இருக்கின்றது. பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனமே இது ஆகும். இப்போதே இந்திய மின் வாகனத்துறையில் துளிர் விட்டு வளர ஆரம்பித்திருக்கின்றது, பிரவைக்.

இந்நிறுவனம் இதுவரை ஒரு கார் மாடலைகூட இந்தியாவிலோ அல்லது வேறு உலக நாடுகளிலேயோ விற்பனைக்குக் கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், இந்த நிறுவனத்தை இந்தியாவின் டெஸ்லாவாக வாகன உலகின் ஜாம்பவான்கள் கருதத் தொடங்கியிருக்கின்றனர். இதற்கு நிறுவனம் முன்னதாக வெளியீடு செய்த எக்ஸ்டிங்க்சன் எம்கே1 (Extinction MK1) எனும் கார் மாடலே காரணமாக இருக்கின்றது.

முற்றிலும் மாறுபட்ட ஸ்டைல் மற்றும் நம்ப முடியாத லக்சூரி அம்சங்களைக் கொண்ட காராக இந்த வாகனத்தை பிரவைக் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. குறிப்பாக இது ஓர் அதிக ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் கார் என்பது கூடுதல் சிறப்பாக இருக்கின்றது. இந்த மின்சார காரில் ஓர் முழுமையான சார்ஜில் 504 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 96 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை வெறும் முப்பதே நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, மிக சூப்பரான வேக திறனை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார்களையே இக்காரில் பிரவைக் பயன்படுத்தியிருக்கின்றது.

அதன் டாப் ஸ்பீடு மணிக்கு 196 கிமீ ஆகும். மேலும், இது வெறும் 5.4 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இதுமாதிரியான சூப்பரான வசதிகளைக் கொண்ட காரை உருவாக்கியிருக்கின்ற காரணத்தினாலேயே பிரவைக் நிறுவனத்தை இந்தியாவின் டெஸ்லா என பலர் அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே பிரவைக் நிறுவனம் தற்போது புதுமுக கார்குறித்த டீசர் படம் ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றது. இந்த டீசர் நிறுவனத்தின் புதிய தயாரிப்பின் வருகையை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. வெளியாகியிருக்கும் டீசரை வைத்து பார்க்கையில் இது ஓர் எஸ்யூவி ரக காராக இருக்கும் என்பதை எங்களால் யூகிக்க முடிகின்றது.

மேலும், ஏற்கனவே நிறுவனம் வெளியீடு செய்த எக்ஸ்டிங்க்சன் எம்கே1 காரில் இருந்து பல மடங்கு மாறுபட்ட பின்பக்கத்துடன் புதிய வாகனம் உருவாக்கப்பட்டிருப்பதையும் இந்த டீசர் நமக்கு தெரியப்படுத்துகின்றது. இந்த வாகனம் எம்கே1 மின்சார காரை போலவே அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில், ஓர் முழு சார்ஜில் 500 கிமீ ரேஞ்ஜ் திறன் அக்-காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புதுமுக காரை பிரவைக் நிறுவனம் வரும் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியீடு செய்யும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த மாதத்தில் இன்னும் சில நிறுவனங்கள் தங்களின் புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியீடு செய்ய திட்டமிட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இவற்றின் வரிசையில் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரவைக் நிறுவனமும் தற்போது இணைந்திருக்கின்றது. பிரவைக் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரின் வருகை குறித்த எந்தவொரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும், பிரவைக்கின் இப்-புதிய வருகை குறித்த இந்திய மின் வாகன பிரியர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகத் தொடங்கியிருக்கின்றது. இந்த புதிய வாகனத்தின் வருகை ஹூண்டாய் கோனா இவி, எம்ஜி இசட்எஸ் இவி மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும்.

பிரவைக் நிறுவனம் எம்கே1 எலெக்ட்ரிக் காரை மிகுந்த ஆடம்பர வசதிகள் கொண்ட காராக உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், இது மிக மிக அதிக விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அதிக விலை காரணத்தினால் நிறுவனம் எம்கே1 எலெக்ட்ரிக் காரை முதலில் வாடகை மற்றும் சாஃபர் (chauffeur) போன்ற சேவை நிறுவனங்கள் மட்டுமே விற்பனைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. தலைநகர் டெல்லி, பெங்களூரு என ஒவ்வொரு நகரங்களாக படிப்படியாக இந்த மின்சார கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பு: படங்கள் சில உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








