புதிய அவதாரம் எடுக்கிறது பிரீமியர் பத்மினி... பாக்கறவங்க எல்லாம் கண்ணு வைக்கற அளவுக்கு மாத்தியிருக்காங்க!
இந்தியாவின் வாகன மாடிஃபிகேஷன் தொழில்துறையில் மிகவும் பிரபலமாக இருப்பது டிசி2 (DC2). எம்பிவி ரக கார்கள், எஸ்யூவி ரக கார்கள் போன்றவற்றை மாடிஃபிகேஷன் செய்வதில், அவர்கள் மிகவும் புகழ் பெற்றவர்கள். சாதாரணமாக இருக்க கூடிய ஒரு காரை, மிகவும் சொகுசானதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் மாற்றி விடுவார்கள்.
கடந்த காலங்களில் டொயோட்டா இன்னோவா (Toyota Innova) உள்பட பல்வேறு கார்களை டிசி2 நிறுவனம் சொகுசு வாகனங்களாக மாற்றியுள்ளது. இந்த சூழலில், ஒரு காலத்தில் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த பிரீமியர் பத்மினி (Premier Padmini) காருக்கு, டிசி2 நிறுவனம் தற்போது புதிய அவதாரம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர் ஒருவருக்காக டிசி2 நிறுவனம் இதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அவர்களின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்கள் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனேகமாக டிஜிட்டல் முறையில் கற்பனையாக உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது பணிகள் முடிந்த பிறகு கார் இப்படிதான் இருக்கும் என்பதை காட்டுவதற்காக அவர்கள் இந்த புகைப்படங்களை உருவாக்கியிருக்கலாம். எனவே பிரீமியர் பத்மினி கார் இறுதி வடிவம் பெறும்போது, ஒரு சில மாற்றங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிசி2 நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை வைத்து பார்க்கையில், பிரீமியர் பத்மினி காரின் பாக்ஸி டிசைன் சற்றே ஆல்டர் செய்யப்பட்டிருப்பது தெரியவருகிறது. அதன் உண்மையான தன்மையை இழக்காமல், அதிக கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்துள்ளனர். அத்துடன் இந்த காரின் பானெட் பகுதியையும் ரீ-டிசைன் செய்துள்ளனர். முன் பக்க க்ரில் அமைப்பில் கூடுதல் கவர்ச்சிக்காக க்ரோம் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் இரு பக்கமும், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் பானெட் மற்றும் க்ரில் அமைப்பில் லோகோ, பேட்ஜ் ஆகியவை எதுவும் இல்லை. அத்துடன் முன் பக்க பம்பரும் ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உண்மையான பிரீமியர் பத்மினி காருடன் ஒப்பிடும்போது பக்கவாட்டு பகுதி வித்தியாசமாக உள்ளது. அதேபோல் ஜன்னல்களும், வீல் ஆர்ச்களும் பெரிதாக தெரிகின்றன. உண்மையான பிரீமியர் பத்மினி காரில், ஸ்டீல் ரிம்கள்தான் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கே ஸ்போக் வீல்களை கொடுத்துள்ளனர்.
அத்துடன் முன் பக்க பம்பரை போல், பின் பக்க பம்பரும் ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், கார்களின் வெளிப்புறம் மட்டுமல்லாது, உட்புறத்தை மாடிஃபிகேஷன் செய்வதற்கும் டிசி2 நிறுவனம் புகழ் பெற்றது. எனவே பிரீமியர் பத்மினி காரின் உட்புறத்தையும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் மாடிஃபிகேஷன் செய்ய முடிவு செய்திருக்கலாம். ஆனால் மாடிஃபிகேஷன் பணிகளுக்கு பிறகு வெளிப்புறம் எப்படி இருக்கும்? என்ற புகைப்படங்கள் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன.
இருப்பினும் உட்புறம் எப்படி வடிவமைக்கப்படும்? என்று நம்மால் ஓரளவிற்கு யூகிக்க முடியும். பொதுவாக பிரீமியர் பத்மினி காரின் இன்டீரியர் மிகவும் எளிமையாக இருக்கும். அதை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மிகவும் மாடர்ன்-ஆக மாற்றி விடுவார்கள் என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். அதாவது பிரீமியம் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, ஆம்பியண்ட் லைட்கள் மற்றும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளுடன் அட்டகாசமாக மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதன் உட்புறம் எப்படி இருக்கும்? என்ற புகைப்படங்களும் டிசி2 நிறுவனத்திடம் இருந்து விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் தற்போது வெளியாகியுள்ள வெளிப்புற புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளன. சாலையில் வந்தால், அனைவரையும் திரும்பி பார்க்க வைக்க கூடிய வகையில் இந்த கார் காட்சியளிக்கிறது. டிசி2 நிறுவனத்தின் வரலாற்றில் மற்றொரு மைல்கல் என்றுதான் இந்த பிரீமியர் பத்மினி காரின் டிசைனை நாம் வர்ணிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








