ரத்தன் டாடாவின் நானோ எலெக்ட்ரிக் கார்... ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்ளோ கிலோ மீட்டர் ஓடும் தெரியுமா?
ரத்தன் டாடாவின் நானோ எலெக்ட்ரிக் கார் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. தற்போதைய நிலையில் இங்கு அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் திகழ்கிறது. நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார் என மொத்தம் 2 எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்த சூழலில் டாடா நானோ அடிப்படையில் ஒரு எலெக்ட்ரிக் கார் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரா இவி (Electra EV) நிறுவனம் இந்த டாடா நானோ எலெக்ட்ரிக் காரை உருவாக்கியுள்ளது. இதில் விசேஷம் என்னவென்றால், டாடா நானோ எலெக்ட்ரிக் காரை, எலெக்ட்ரா இவி நிறுவனம், ரத்தன் டாடாவிற்கு வழங்கியுள்ளது.

டாடா நானோ எலெக்ட்ரிக் காருடன் ரத்தன் டாடா இருக்கும் புகைப்படங்களும் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களில் நாம் காணும் டாடா நானோ எலெக்ட்ரிக் காரானது, அதன் பெட்ரோல் மாடலை போன்றே உள்ளது. இது தற்போதும் 4 டோர், 4 சீட்டர் மாடலாகதான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த டாடா நானோ எலெக்ட்ரிக் காரில், சூப்பர் பாலிமர் லித்தியம் அயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரின் டிரைவிங் ரேஞ்ச், அதாவது ஒரு முறை பேட்டரியை முழுமையாக நிரப்பினால் பயணம் செய்யும் தூரம் 160 கிலோ மீட்டர்களாக இருக்கும் என கூறப்படுகிறது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 10 வினாடிகளுக்கு உள்ளாகவே இந்த கார் எட்டி விடும் என தெரிகிறது.

முன்னதாக டாடா நானோ கார் ரத்தன் டாடாவின் கடும் முயற்சியின் விளைவாகதான் விற்பனைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் அனைவராலும் வாங்க கூடிய வகையில் ஒரு காரை வழங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ரத்தன் டாடா கொண்டு வந்ததுதான் டாடா நானோ. இதை அவரது கனவு கார் என்றும் கூட சொல்லலாம்.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது உலகின் மிகவும் மலிவான கார் என்ற பெருமையை டாடா நானோ தன்வசம் வைத்திருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக டாடா நானோ காரின் விற்பனை சொல்லிக்கொள்ளும்படி நடைபெறவில்லை. ஒரு சில காரணங்களால் டாடா நானோ கார் இந்திய சந்தையில் கடுமையான தோல்வியை சந்தித்தது.

டாடா நானோ காரின் பாதுகாப்பு தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்களும் இந்த தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்து விட்டன. ஆனால் இன்று டாடாதான் மிகவும் பாதுகாப்பான கார்களை விற்பனை செய்யும் இந்திய நிறுவனமாக திகழ்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூன்று கார்கள் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன.

டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ் மற்றும் டாடா பன்ச் ஆகியவைதான் அந்த 3 கார்கள். இதுதவிர டாடா டியாகோ மற்றும் டிகோர் ஆகியவையும் பாதுகாப்பான கார்கள் என பெயரெடுத்துள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் சாலை விபத்துக்களில் இருந்து தனது பயணிகளை பலமுறை காப்பாற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே சமீப காலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை இந்தியாவில் உயர்ந்து கொண்டே வருகிறது. அத்துடன் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இந்தியாவில் தற்போதைய நிலையில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் திகழ்ந்து வருகிறது.

நெக்ஸான் மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார்களை தொடர்ந்து அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. அனேகமாக நடப்பாண்டு இறுதிக்குள்ளாகவே டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலாவது இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விடும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








