ரொம்ப ஃபேமஸான கார் மாடலாச்சே!.. ரெனால்ட் டஸ்டர் கார் உற்பத்தி பணிகள் நிறுத்தமா? இதோ முழு தகவல்!
ரெனால்ட் நிறுவனம், அதன் பிரபலமான கார் மாடல் ஒன்றின் உற்பத்தியை இறுதிக்குக் கொண்டு வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரெனால்ட் நிறுவனத்தின் மிக முக்கியமான கார் மாடல்களில் ஒன்று டஸ்டர். இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்தக் காரின் உற்பத்தி பணியையே நிறுவனம் இறுதிக்குக் கொண்டு வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்காரை நிறுவனம் முதன் முதலாக 2012ம் ஆண்டிலேயே விற்பனைக்குக் கொண்டு வந்தது.

ஆரம்பத்தில் இக்காருக்கு நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்தது. இதனைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் எந்தவொரு அப்டேட்டையும் காரில் நிறுவனம் வழங்கவில்லை. குறிப்பாக, பெரியளவில் மாற்றங்கள் எதுவும் இந்த காரில் வழங்கப்படாத காரணத்தினால் இக்காரின் மீதான ஆர்வம் நுகர்வோர்கள் மத்தியில் படிபடியாக குறைய தொடங்கியிருக்கின்றது.

இதன் விளைவாக விற்பனையும் தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்து வருகின்றது. மேலும், புதுமுகங்களினால் போட்டியும் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாக தற்போது இக்காரின் உற்பத்தியை நிறுத்த ரெனால்ட் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இது தற்காலிகமானதே என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் டஸ்டர் எனும் பெயரில் விற்பனைச் செய்யப்பட்டு வரும் இக்கார், புதிய தலைமுறையாக டாசியா டஸ்டர் எனும் பெயரில் மிக விரைவில் அறிமுகமாக இருக்கின்றது. இது 2023ம் ஆண்டிற்குள் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்வே புதிய அம்சங்களுடனம் இந்தியாவிலும் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழைய தலைமுறைக்கு வரவேற்புக் குறைந்து வருவதன் காரணத்தினாலேயே அதன் உற்பத்தியை நிறுத்திவிட்டு, இப்புதிய தலைமுறையைக் கொண்டு வர இருப்பதாக கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்றாம் தலைமுறை டஸ்டர் நிறுவனத்தின் சிஎம்எஃப்-பி பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கப்பட்டு வருகின்றது.

இது மின் மயமாக்கலை ஆதரிக்கும் தளம் ஆகும். ஆகையால், மூன்றாம் தலைமுறை டஸ்டர் ஹைபிரிட் அல்லது பிளக்-இன் ஹைிபிரிட் தொழில்நுட்ப வசதியுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏன் மின்சார காராகவும் இது விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமின்றி புதிய டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களும் இதில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் ரெனால்ட் வெளியிடவில்லை. மிக விரைவில் அதுகுறித்த தகவலை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் ரெனால்ட் டஸ்டர் ரூ. 9.86 லட்சம் முதல் ரூ. 14.25 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதுவே, நிறுவனத்தின் விலை உயர்ந்த காராகவும் காட்சியளிக்கின்றது. விரைவில் உற்பத்தி நிறுத்தப்பட இருப்பதால் ரெனால்ட் கார் விற்பனையாளர்கள் டஸ்டர் எஸ்யூவி காரை அதிக சலுகையில் விற்க தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ. 2 லட்சம் வரையில் சலுகை வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. ஒரு சில விற்பனையாளர்கள் மட்டுமே இச்சலுகை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. ரெனால்ட் டஸ்டர் காரில் மிகவும் டீசண்டான வகையில் சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் உயர்நிலை வேரியண்டில் தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், சாவியில்லா நுழைவு மற்றும் வெளியேறுதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றது.

இதுமட்டுமின்றி, உயரத்தை அட்ஜெஸ்ட் செய்கின்ற வகையில் இருக்கை, தானாகவே மடித்துக் கொள்ளும் வசதிக் கொண்ட ஓஆர்விஎம், க்ரூஸ் கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட், 7 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார்-ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது) உள்ளிட்ட பன்முக அம்சங்களும் இந்த காரில் இடம் பெற்றுள்ளன.

Source: Zigwheels
இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் ரெனால்ட் டஸ்டர் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கிறது. முதல் எஞ்ஜின் அதிகபட்சமாக 106 பிஎஸ் மற்றும் 142 என்எம் டார்க்கையும், இரண்டாவது எஞ்ஜின் 156 பிஎஸ் மற்றும் 254 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டவை ஆகும்.


Click it and Unblock the Notifications








