இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவன கார்களின் விற்பனை கடும் சரிவு... இந்த அளவுக்கு கம்மி ஆயிருச்சா?
இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவன கார்களின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரெனால்ட் (Renault) நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாக 6,568 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் 11,043 கார்களை விற்பனை செய்திருந்தது. எனவே கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு பிப்ரவரியில் ரெனால்ட் இந்தியா நிறுவன கார் விற்பனை 40.5 சதவீதம் குறைந்துள்ளது.

வருடாந்திர ஒப்பீட்டை போல், மாதாந்திர ஒப்பீட்டிலும் ரெனால்ட் நிறுவனம் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி மாதம் ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் 8,119 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 6,568 ஆக குறைந்துள்ளது. இது 19.1 சதவீத வீழ்ச்சியாகும்.

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ரெனால்ட் கார் என்ற பெருமையை ட்ரைபர் (Renault Triber) பெற்றுள்ளது. இது ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்க கூடிய எம்பிவி ரக கார் ஆகும். நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ரெனால்ட் நிறுவனம் 2,397 ட்ரைபர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை 3,553 ஆக இருந்தது. இது 33 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்த பட்டியலில் ரெனால்ட் கைகர் (Renault Kiger) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் 3,226 கைகர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 2,247 ஆக குறைந்துள்ளது. இது விற்பனையில் ஏற்பட்டுள்ள 30 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்த பட்டியலில் ரெனால்ட் க்விட் (Renault Kwid) மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்திய சந்தையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 1,924 ரெனால்ட் க்விட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை 3,927 ஆக இருந்தது. இது விற்பனையில் ஏற்பட்டுள்ள 51 சதவீத வீழ்ச்சியாகும்.

ரெனால்ட் நிறுவனம் க்விட் காரின் 2022 மாடலை வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எனவே வரும் மாதங்களில் ரெனால்ட் க்விட் காரின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

இதற்கிடையே நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ரெனால்ட் நிறுவனம் ஒரு டஸ்டர் (Renault Duster) காரை கூட விற்பனை செய்யவில்லை. அதன் விற்பனை எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரெனால்ட் நிறுவனம் 337 டஸ்டர் கார்களை விற்பனை செய்திருந்தது. ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் காரை தற்போது இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து விலக்கிவிட்டது.

இதன் காரணமாகவே அதன் விற்பனை எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருக்கிறது. இருப்பினும் டஸ்டர் காரின் புதிய வெர்ஷனை ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த புதிய வெர்ஷன் வெகு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

ரெனால்ட் டஸ்டர் காரானது, மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த செக்மெண்ட்டில் தற்போது, ஸ்கோடா குஷாக், ஹூண்டாய் கிரெட்டா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், கியா செல்டோஸ் உள்ளிட்ட கார்கள் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. ரெனால்ட் டஸ்டரின் புதிய வெர்ஷன் விற்பனைக்கு வரும்பட்சத்தில், இந்த கார்களுக்கு கடும் போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இதற்கிடையே இந்திய சந்தையில் ரெனால்ட் மட்டுமல்லாது, பல்வேறு நிறுவனங்களின் கார் விற்பனையும் தற்போது குறைந்துள்ளது. செமி கண்டக்டர் சிப்களுக்கான பற்றாக்குறைதான் இதற்கு காரணம். செமி கண்டக்டர் சிப்களுக்கான பற்றாக்குறையால் கார்களின் உற்பத்தி குறைந்து, விற்பனையும் சரிவடைந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








