வெறும் 3 கார்களுடன் இந்தியாவில் போராடிவரும் ரெனால்ட்!! கடந்த ஜனவரி மாத விற்பனை 8 ஆயிரம் யூனிட்கள்!
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வலுவாக கால்பதிக்க போராடிவரும் வெளிநாட்டு கார் பிராண்ட்களுள் ரெனால்ட்டும் ஒன்றாகும். கடந்த 2022 ஜனவரி மாதத்தில் அதிகளவில் பயணிகள் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களுள் இந்த பிரெஞ்சு கார் பிராண்ட் 7வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த மாதத்தில் மொத்தமாக ரெனால்ட் பிராண்டில் இருந்து 8,119 கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2021 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் வெறும் 1 சதவீதம் மட்டுமே குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் தற்போதைய விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் 90 யூனிட்கள் மட்டுமே அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இதில் இருந்து கடந்த 1 வருடமாக இந்தியாவில் ரெனால்ட் கார்களின் விற்பனை பெரிய அளவில் எந்தவொரு மாற்றத்தையும் அடையாததை அறிய முடிகிறது. இருப்பினும், ரெனால்ட்டின் கடந்த ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கையை 2021 ஜனவரி உடன் ஒப்பிட்டோமேயானால், 32% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 6,130 ரெனால்ட் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

உள்நாட்டில் ரெனால்ட் நிறுவனம் தற்சமயம் கிகர், டிரைபர், க்விட் மற்றும் டஸ்டர் என நான்கு விதமான மாடல்களை சந்தைப்படுத்தி வருகிறது. இதில் கிகர் ரெனால்ட்டின் விற்பனையில் நம்பகமான மாடலாக உருவெடுத்து வருகிறது. ஏனெனில் இந்த 5-இருக்கை எஸ்யூவி கார் புத்தம் புதிய மாடர்ன் ரெனால்ட் காராக கடந்த 2021ஆம் ஆண்டில் தான் வெளியீடு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு அறிமுகத்திற்கு பிறகு, நடப்பு 2022ஆம் ஆண்டில் இருந்து கிகரின் விலைகள் ரூ.14,000இல் இருந்து ரூ.29,000 வரையில் வேரியண்ட்களை பொறுத்து அதிகரிக்கப்பட்டாலும், இந்த எஸ்யூவி காரின் விற்பனை குறைச்சொல்ல முடியாத அளவிற்கு சிறப்பானதாக கடந்த மாதத்தில் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 2022 ஜனவரியில் மொத்தம் 3,053 ரெனால்ட் கிகர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது விலை ஏற்றத்திற்கு முந்தைய 2021 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 44.21% அதிகமாகும். ஏனென்றால், அந்த மாதத்தில் கிகரின் விற்பனை எண்ணிக்கை 2,117 என பதிவாகியது. 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடனான கிகர் எஸ்யூவி காரின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.79 லட்சத்தில் இருந்து ரூ.8.88 லட்சங்கள் வரையில் உள்ளன. அதுவே டர்போ என்ஜின் உடன் இந்த காரின் விலை ரூ.8.33 - ரூ.10.23 லட்சங்களாகும்.

உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளில் கிகர் ஐந்திற்கு 4 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. இதுவும் இதன் விற்பனைக்கு பெரிதும் உதவியாக உள்ளது. இந்த வரிசையில் கிகருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ரெனால்ட்டின் எம்பிவி காரான டிரைபர் 2,722 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. அதுவே 2021 ஜனவரியில் மொத்தம் 4,082 டிரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

அதேபோல் கடந்த டிசம்பர் மாதத்தில் 2,901 டிரைபர் கார்களை ரெனால்ட் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் ரெனால்ட் கிகரின் விற்பனை எண்ணிக்கை வருடம்-வருடம் மற்றும் மாதம்-மாதம் ஒப்பிடுகையில் முறையே 33.82% மற்றும் 6.17% குறைந்துள்ளது. 2019 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட டிரைபரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.69 லட்சம் - ரூ.8.25 லட்சம் ஆகும்.

இந்த இரு மாடல்கள் தவிர்த்து, கடந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனையான மற்றொரு ரெனால்ட் மாடல் க்விட் ஹேட்ச்பேக் ஆகும். ஆகையால் இதுதான் இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தை பிடித்துள்ளது. க்விட் கார்களின் இந்த விற்பனை எண்ணிக்கை 2021 ஜனவரி மாதத்தை (3,791 யூனிட்கள்) காட்டிலும் 38.17% குறைவு என்றாலும், கடந்த டிசம்பர் மாததுடன் ஒப்பிடுகையில் சுமார் 121.97% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 1,056 க்விட் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இவற்றை தவிர்த்து ரெனால்ட் இந்திய சந்தையில் சந்தைப்படுத்தி வந்த டஸ்டர் எஸ்யூவி மாடல் கடந்த ஜனவரி மாதத்தில் 1 யூனிட் கூட விற்பனை செய்யப்படவில்லை. 2021 ஜனவரியிலும் வெறும் 336 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்த டஸ்டரின் விற்பனை எண்ணிக்கை கடந்த ஆண்டு இறுதி மாதத்தில் 56 யூனிட்களாக பதிவாகியது. ஆனால் கடந்த மாதத்தில் முற்றிலுமாக பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளது. இதனால் டஸ்டரின் தயாரிப்பை ரெனால்ட் நிறுத்தி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








