இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் எத்தனை கார்களை சேல்ஸ் பண்ணீருக்கு தெரியுமா? அடேங்கப்பா... இத்தனை லட்சமா?
இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனம் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் (Renault) நிறுவனம் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 8 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்திருப்பதாக ரெனால்ட் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டுதான் ரெனால்ட் நிறுவனத்திற்கு குறிப்பிடத்தகுந்த ஆண்டாக அமைந்துள்ளது. இத்தனைக்கும் 2021ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பிரச்னை தலைவிரித்தாடியது. இதன் காரணமாக உதிரி பாகங்கள் சப்ளையிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இருந்தாலும் 2021ம் ஆண்டை தங்களது குறிப்பிடத்தகுந்த ஆண்டாக ரெனால்ட் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் ரெனால்ட் நிறுவனத்தின் மிக முக்கியமான சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இதுகுறித்து ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான வெங்கட்ராம் மாமிலபல்லே (Venkatram Mamillapalle) கூறுகையில், ''இந்தியாவில் 8 லட்சம் கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இது தனித்துவமான பயணம். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில், வலுவான அடித்தளத்தை நிறுவியுள்ளோம்'' என்றார். இந்தியாவில் தற்போதைய நிலையில் க்விட், டஸ்டர், ட்ரைபர் மற்றும் கைகர் உள்ளிட்ட கார்களை ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில் டஸ்டர் தவிர மற்ற அனைத்து கார்களின் விற்பனையும் சிறப்பாக உள்ளது.

வரும் காலங்களில் இன்னும் பல்வேறு கார்களை ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அத்துடன் இந்திய சந்தையில் தனது டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான முயற்சிகளிலும் ரெனால்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக வரும் காலங்களில் ரெனால்ட் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம்.

இந்திய சந்தையில் வரும் காலத்தில் வழக்கமான ஐசி இன்ஜின் கார்களை விட எலெக்ட்ரிக் கார்கள்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்த போகின்றன. எனவே ரெனால்ட் நிறுவனமும் இங்கு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனமாக திகழும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த பாணியைதான் பின்பற்றி வருகிறது. அதாவது ஏற்கனவே விற்பனையில் உள்ள கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களைதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக அறிமுகம் செய்து கொண்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் மற்றும் டிகோர் ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார்களும் ஏற்கனவே விற்பனையில் உள்ள அதன் ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள்தான். இதே பாணியில் க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கவில்லை. வரும் காலங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை படிப்படியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம்.

ஏனெனில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால்தான் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையும் அதிகமாக இருக்கும் என்பது ரெனால்ட் நிறுவனத்தின் எண்ணம் என தெரிகிறது. அத்துடன் எலெக்ட்ரிக் கார்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் குறைவான விலையில் வழங்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

ஆனால் தற்போதைய நிலையில் லித்தியம் அயான் பேட்டரியின் அதிகப்படியான விலை உள்ளிட்ட காரணங்களால் எலெக்ட்ரிக் கார்களின் விலையும் அதிகமாக இருக்கிறது. எனினும் வரும் காலங்களில் லித்தியம் அயான் பேட்டரியின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது எலெக்ட்ரிக் கார்களின் விலையும் குறையும். எனவே இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்களின் அறிமுகத்தை அப்போது நாம் பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications








