எல்லாருக்கும் பிடிச்ச கருப்பு கலர்ல அட்டகாசமாக இருக்குது... ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் கோஸ்ட் வெளியீடு!
ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனம் அதன் பிளாக் பேட்ஜ் கோஸ்ட் (Black Badge Ghost) காரை இந்தியாவில் வெளியீடு செய்துள்ளது. இந்த லக்சூரி கார் குறித்த முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல சொகுசு உற்பத்தி நிறுவனம் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce), அதன் பிளாக் பேட்ஜ் கோஸ்ட் (Black Badge Ghost) எனும் அட்டகாசமான லக்சூரி காரை இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் ஸ்பெஷல் எடிசன் தயாரிப்பாகும். அதாவது, வழக்கமான கோஸ்ட் கார் மாடலைக் காட்டிலும் அதிக சிறப்பு வசதிகள் மற்றும் கவர்ச்சி அம்சங்கள் பலவற்றை தாங்கிய பதிப்பாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தகைய ஓர் தயாரிப்பையே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சிறப்பு ஆப்ஷனாக, அவர்கள் விரும்பும் வசதிகளை தனி பயனாக்க திட்டத்தின்கீழ் வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இன்னும் பல சிறப்பு வசதிகளை சேர்த்து வழங்கும் திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆகையால், வழக்கமான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்பு வாய்ந்த ஓர் வாகனமாக இச்சிறப்பு பதிப்பு காட்சியளிக்கின்றது. இது அதிக திறனை வெளிப்படுத்தக் கூடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 12 சிலிண்டர், 48 வால்வுகள் அடங்கிய எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 591 பிஎச்பி பவரை 5,250 மற்றும் 5,270 ஆர்பிஎம்மில் வெளியேற்றும். இதேபோல், 900 என்எம் டார்க்கை 1,700 மற்றும் 4,000 ஆர்பிஎம்மிலேயே வெளியேற்றும்.

வழக்கமான கோஸ்ட் காரில் 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்ஜின் பயன்படுத்துகின்றது. இந்த மோட்டார் மேலே பார்த்ததைக் காட்டிலும் 29 பிஎச்பி மற்றும் 50 என்எம் டார்க் திறனை குறைவாக வெளியேற்றும். ஆகையால், தற்போது வெளியீடை பெற்றிருக்கும் பிளாக் பேட்ஜ் கோஸ்ட் அதிக திறனை வெளிப்படுத்தக் கூடிய செடான் கார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இக்காரின் எஞ்ஜினில் ரீ-கேலிபரேடட் இசட்எஃப் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது காரின் அனைத்து வீல்களுக்கும் இயங்கு திறனை வழங்கும். கூடுதலாக, நான்கு வீல் ஸ்டியரிங் அம்சமும் பிளாக் பேட்ஜ் கோஸ்ட் காரில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த காரின் கியர் ஸ்டால்கில் புதிய லோ பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஸ்போர்ட் மோடிற்கு இணையான திறனை வெளிப்படுத்த உதவும். இந்த பட்டனை பிரஸ் செய்வதன் வாயிலாக அதிக திறன் வெளிப்பாடு மட்டுமின்றி சிறந்த வேகமான கியர் மாற்றத்தையும் பெற முடியும்.

ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் கோஸ்ட் கார் வெறும் 4.7 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனைக் கொண்டுள்ளது. எஞ்ஜின் திறனை போலவே இக்காரில் இட வசதியும் பாரிய அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. 5,546 மிமீ நீளம், 2,148 மிமீ அகலம் மற்றும் 1,571 மிமீ உயரத்தில் பிளாக் பேட்ஜ் கோஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வீல் பேஸ் 3,295 மிமீ நீளம் ஆகும். இக்காரின் ஒட்டுமொத்த எடை 2,490 கிலோவாக இருக்கின்றது.

பிளாக் பேட்ஜ் கோஸ்ட் காரின் சிறப்பம்சங்கள்:
வழக்கமான கோஸ்ட் காரிடம் இருந்து மாறுபட்டு காட்சியளிக்க வேண்டும் என்பதற்கு பல்வேறு புதிய சிறப்பு வசதிகளை இக்காரில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் சேர்த்திருக்கின்றது. அந்தவகையில் முற்றிலும் கருப்பு நிறத்தால் இக்கார் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காரின் முகப்பு பகுதியில் இருக்கும் ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டசிக்கு கூட கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, சில ஹைலைட்டான அம்சங்களுக்கு பெயிண்டை பயன்படுத்துவதற்கு பதிலாக ஒளிரக் கூடிய எலெக்ட்ரோலைட்டைப் பயன்படுத்தியுள்ளது. இது வழக்கமான குரோம் பூச்சை ரீ-பிளேஸ் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இத்துடன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சப்ஸ்ட்ராட்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதன் பின்னர் கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் அனைத்து பாகங்களும் கைகளால் பாலிஷ் செய்யப்பட்டு கண்ணாடி கருப்பிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இது காரின் தோற்றத்தை வேற லெவல் கவர்ச்சிக்கு எடுத்துச் சென்றிருக்கின்றது. அதேநேரத்தில், தங்களின் பிளாக் பேட்ஜ் கோஸ்ட் காரை தங்களுக்கு பிடித்த நிறங்களில் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளும் ஆப்ஷனையும் ரோல்ஸ் ராய்ஸ் வழங்க இருக்கின்றது.

ஆனால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கருப்பு பெயிண்ட் ஸ்கீமையே அதிகம் தேர்வு செய்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், தங்கள் நிறுவனம் பயன்படுத்தும் இந்த கருப்பே உலகின் மிக அடர் கருப்பு என தெரிவித்துள்ளது. நிறுவனம் 45 கிலோ பெயிண்டை வாகனத்திற்கு பயன்படுத்துகின்றது.

இக்காரில் 21 அங்குல வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கார்பன் பைபர் பேனலைக் கொண்டுள்ளது. வெளிப்புறத்தைப் போலவே காரின் உட்புறமும் அதிக சிறப்புகள் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. தனித்துவமான நிற பூச்சு காரின் உட்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கார்பன் மற்றும் உலோகத்தால் ஆனா பேனலைக் கொண்டு உட்புறம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதன் தோற்றத்தை மேலும் கவர்ச்சியானதாக மாற்றும் வகையில் டைமண்ட் டிசைன் அதில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், மிக அதிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கக் கூடிய இருக்கைகள், சேம்பைன் பாட்டில் கூலர், இருக்கைகளை பட்டனிலேயே அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








