2022இல் விற்பனைக்கு வரவுள்ள டாப் 5 எஸ்யூவி கார்கள்!! இவற்றையும் பார்த்துவிட்டு கார் வாங்கும் பிளானை போடுங்க!
எஸ்யூவி உடலமைப்பை கொண்ட நிமிர்ந்த, கம்பீரமான கார்களை வாங்குவது இந்தியாவில் கடந்த சில வருடங்களில் ட்ரெண்டாக மாறிவிட்டது. இந்த வகையில் புதியதாக எஸ்யூவி காரினை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? உங்களுக்காகவே இந்தியாவில் அடுத்ததாக விற்பனைக்குவர உள்ள முக்கிய 5 எஸ்யூவி கார்களை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ
இந்திய சந்தையில் நீண்ட வருடங்களாக பெரியதாக அப்டேட்டை பெறாத எஸ்யூவி கார்களுள் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ ஆகும். இருப்பினும் இப்போதும் இந்த மஹிந்திரா தயாரிப்பினை ஒரு பக்கம் மக்கள் வாங்கி கொண்டுதான் இருக்கின்றனர். இருந்தாலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் விதமாக புதிய தலைமுறை ஸ்கார்பியோவை மஹிந்திரா அறிமுகப்படுத்த உள்ளது.

இதன் அறிமுகத்தினை வருகிற 2022 ஜூன் மாதத்தில் எதிர்பார்க்கிறோம். புதிய தலைமுறையில் ஸ்கார்பியோவின் என்ஜின், சேசிஸ் மற்றும் உட்புற & வெளிப்புற தோற்றம் என மொத்த வாகனமும் அப்டேட் செய்யப்பட உள்ளது. இதனால் தற்போதைய ஸ்கார்பியோவை காட்டிலும் புதிய வெர்சன் அளவில் பெரியதாக, அதிக உட்புற இடவசதி உடன் எதிர்பார்க்கபடுகிறது.

புதிய தலைமுறை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா
இரண்டாம் தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவி அடுத்த 2022 ஏப்ரல் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த தகவல்கள், பிரிவில் நிலவும் போட்டியை எதிர்க்கொள்ளும் விதமாக 360 கோண கேமிரா, தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் சன்ரூஃப், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி பிரோகிராம் மற்றும் 6 காற்றுப்பைகள் உள்ளிட்டவற்றை இந்த புதிய மாடல் பெற்றுவரவுள்ளதாகவும் கூறுகின்றன.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிலும் வழக்கமான அதே 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் என்ஜின் தான் வழங்கப்பட வாய்ப்புள்ளது என்றாலும், டிரான்ஸ்மிஷனுக்கு இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் புதிய 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட உள்ளதாம். அத்துடன் வலிமையான ஹைப்ரீட் தொழிற்நுட்பமும் புதிய விட்டாரா பிரெஸ்ஸாவில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீப் மெரிடியன்
அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான கார் பிராண்டான ஜீப்-இல் இருந்து அடுத்ததாக இந்தியாவில் களமிறக்கப்பட உள்ள 7-இருக்கை எஸ்யூவி கார் தான் மெரிடியன் ஆகும். தற்போதைய ஜீப் காம்பஸின் 6 & 7-இருக்கை வெர்சனாக கொண்டுவரப்படும் இது இந்திய ஷோரூம்களை வருகிற மே மாதத்தில் இருந்து வந்தடைய துவங்கும் என்று இதுவரையில் வெளியாகியுள்ள தகவல்கள் கூறுகின்றன.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு காம்பஸின் அதே 2.0 லிட்டர் மல்டிஜெட்2 டீசல் என்ஜின் தான் புதிய மெரிடியனிலும் வழங்கப்பட வாய்ப்புள்ளது என்றாலும், இந்த டீசல் என்ஜின் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக திருத்தியமைக்கப்பட்டு பொருத்தப்படலாம். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, மெரிடியனின் அதிகப்பட்ச என்ஜின் ஆற்றல் 187 பிஎச்பி ஆக இருக்கும். இதனுடன் மேனுவல் & ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.

புதிய தலைமுறை ஹூண்டாய் டக்ஸன்
ஹூண்டாய் டக்ஸனும் விரைவில் புதிய தலைமுறை அப்கிரேடினை பெறவுள்ளது. ஆனால் அறிமுக தேதி குறித்து எந்தவொரு தகவலும் தற்போது வரையில் வெளியாகவில்லை. முன்பக்கத்தில் பாராமெட்ரிக் க்ரில் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்களுடன் 2022 டக்ஸன் பிராண்டின் புதிய உணர்வுப்பூர்வமான டிசைன் மொழியில் வடிவமைக்கப்பட உள்ளது.

உட்புறத்தில் புதிய டக்ஸன் அதிநவீன ஸ்மார்ட்போன் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் இரட்டை-திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பினை பெற்றுவரவுள்ளது. ஆனால் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு தற்போதைய டக்ஸனின் அதே 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டர்போ டீசல் என்ஜின் தேர்வுகள் தான் கொடுக்கப்படும்.

புதிய மாருதி, டொயோட்டா நடுத்தர-அளவு எஸ்யூவிகள்
ஜப்பானிய கார் பிராண்ட்களான சுஸுகி மற்றும் டொயோட்டா கூட்டணியில் இருப்பது தெரிந்த விஷயமே. இவை இரண்டும் இந்தியாவில் புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களை தனித்தனி பிராண்ட்களில் அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. நடப்பு 2022ஆம் ஆண்டின் 2ஆம் பாதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த எஸ்யூவிகள் ப்ளாட்ஃபாரம், என்ஜின்கள் உள்பட பெரும்பான்மையான பாகங்களை ஒன்றோடு ஒன்று பகிர்ந்து கொள்ளவுள்ளன.

இருப்பினும் தோற்றத்தில் இவை இரண்டிற்கும் இடையே நிச்சயாமாக வித்தியாசம் இருக்கும். தற்போதைக்கு மாருதி ஒய்.எஃப்.ஜி மற்றும் டொயோட்டா டி22 என்ற குறியீட்டு பெயர்களால் அழைக்கப்படும் இந்த புதிய எஸ்யூவி கார்களில் 1.5 லிட்டர் கே15பி நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட உள்ளதாகவும், அதேநேரம் இவை ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடனும் அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








