பலரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய இந்திய தயாரிப்பு! இப்படி ஒரு ஹெல்மெட்டுக்காகதான் எல்லாம் காத்து கெடக்குறாங்க!
வைரஸ் மற்றும் காற்று மாசு ஆகியவற்றில் காப்பாற்றக் கூடிய தலைக்கவசத்தை இந்திய நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இந்த சூப்பரான ஹெல்மெட் பற்றிய முக்கிய விபரங்களையே இந்த பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

காற்று மாசு, உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பேராபத்துகளில் ஒன்றாக மாறியிருக்கின்றது. வளர்ந்து வரும் தொழில்துறை, மக்கள் தொகைக்கு இணையாக அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவை நாளுக்கு நாள் காற்று மாசுபாட்டை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதுதவிர, சாலை விரிவாக்கம், நகரமயமாக்கல் உள்ளிட்ட காரணங்களுக்காக மரங்கள் மற்றும் வன பகுதிகள் அழிக்கப்பட்டு வருவதால் காற்று மாசுபாடு அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றது.

இதன் விளைவாக குறிப்பிட்ட சில நகரங்களில் காற்று சுவாசிப்பதற்கு தகுதி அற்றதாக மாறியுள்ளது. தலைநகர் டெல்லி போன்ற மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட நகரங்களில் இந்த நிலை சற்றே தீவிரமடைந்துக் காணப்படுகின்றது. இத்தகைய சூழலைச் சமாளிக்கும் பொருட்டே கார்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் வகையில் காற்றை வடிகட்டும் கருவிகளை மின்சாதன உற்பத்தி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்த கருவிகள் கற்றில் உள்ள மாசுகளை வடிகட்டி காற்றை சுவாசிக்க உகந்ததாக மாற்றிவிடும். இதுதவிர, காற்றில் பரவிக் காணப்படும் நுண்ணிய கிருமிகள் மற்றும் வைரஸ்களையும் அவை அழிக்க உதவும். இதனால்தான் சில பிரீமியம் தர கார்களில் கட்டாயம் இந்த கருவியை வாகன உற்பத்தியாளர்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சூப்பரான கருவியை இருசக்கர வாகன ஓட்டிகளும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, ஓர் ஹெல்மெட் உற்பத்தியாளர், அதன் புதுமுக ஹெல்மெட்டை காற்றை வடிகட்டும் கருவியுடன் உருவாக்கியிருக்கின்றது. இந்த ஹெல்மெட்டே தற்போது வெளியீடும் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த ஹெல்மெட்டை 80 சதவீதம் வரை காற்றை வடிகட்டி ரைடருக்கு வழங்கும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகையால், வழக்கமான ஹெல்மெட்டை பயன்படுத்துவதைக் காட்டிலும் இந்த ஹெல்மெட்டை பயன்படுத்துவோர் அதிக தூய்மையான காற்றை சுவாசிக்கும் வாய்ப்பை பெறுவர் என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஷெல்லியோஸ் டெக்னோலேப்ஸ் (Shellios Technolabss) எனும் நிறுவனமே காற்றை வடிகட்டும் கருவியுடன் ஹெல்மெட்டை தயாரித்திருக்கும் நிறுவனம் ஆகும். 2016ம் ஆண்டே இதன் உற்பத்தியில் நிறுவனம் களமிறங்கிவிட்டது குறிப்பிடத்தகுந்தது.

இந்த பணியை நிறுவனம் தொடங்கியபோது அரசு நிறுவனங்கள் சில நிறுவனத்தை ஊக்குவிக்கும் விதமாக முதலீட்டை வழங்கின. ஷெல்லியோஸ் டெக்னோலேப்ஸ், அமித் பதக் என்பவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தகுந்தது. மின்சார பொறியியளாலரான பதக், ஆண்டிற்கு ஆண்டு இந்தியாவின் முக்கிய நகரங்கள் மிக மோசமான காற்று மாசுபாட்டால் அவதிக்குள்ளாவதைக் காரணம் காட்டி இந்த ஹெல்மெட்டை உருவாக்கியிருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

இதுமட்டுமின்றி, தற்போது மக்கள் கார்களில் பயணிக்கும்போதும், வீடுகளில் இருக்கும்போதும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஏர் ப்யூரிஃபையர் கருவிகள் விற்பனையில் உள்ளன. ஆனால், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான காற்றை வடிக்கட்டும் கருவிகள் பயன்பாட்டில் இல்லை. இதன் காரணத்தினாலேயே இந்த ஹெல்மெட்டை தங்கள் நிறுவனம் உருவாக்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்தும் காற்று மாசுபாட்டால் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பனி காலத்தில் மக்கள் சுவாசிக்கவே அவதிப்படும் நிலை தென்படுகின்றது. பிப்ரவரி மாதம் வரையிலும் இந்த நிலையே காட்சியளிக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டே பொறியியளாலர் பதக் காற்று வடிகட்டி வசதியுடன் ஹெல்மெட்டை உருவாக்கியிருக்கின்றார்.

இந்த ஹெல்மெட் ரூ. 4,500 வரையிலான விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைவிட விலை குறைவாக விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஷெல்லியோஸ் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. குறிப்பாக, விலையைக் குறைக்கும் பொருட்டு ஹெல்மெட்டில் கண்ணாடிகளுக்கு தெர்மோபிளாஸிட்டிக்கை பயன்படுத்த நிறுவனம் முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றது.

ஆகையால், அனைவரும் பயன்படுத்தும் வகையில் சற்று குறைவான விலையில் விரைவில் இந்த காற்று வடிகட்டி வசதி உடன் உருவாக்கப்பட்டிருக்கும் கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஹெல்மெட்டில் ஏர் ப்யூரிஃபையர் மட்டுமின்றி யுஎஸ்பி ஸ்லாட் ஒன்றும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஏர் ப்யூரிஃபையரை சார்ஜ் செய்யும் விதமாக இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








