டெஸ்லாவிற்கே சிறப்பான சம்பவம் செய்துவிட்ட சீன நிறுவனம்!! காப்பி அடிக்குறதுல என்னங்க பெருமை...
வெறும் ரூ.21 லட்சம் என்ற மதிப்பில் டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரின் போலி மாடல் சீனாவில் வேறொரு பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்த மாதிரியான எலக்ட்ரிக் கார் அது? அதன் பெயர் என்ன? என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார்கள் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் வாடிக்கையாளர்களை கொண்டவைகளாக வேகமாக பிரபலமாகி வருகின்றன. இவ்வளவு ஏன், நம் அண்டை நாடான சீனாவில் கூட எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா முன்னிலையில் உள்ளது. இதனாலேயே சீனாவில் ஜிகா தொழிற்சாலையை டெஸ்லா செயல்படுத்தி வருகிறது.

டெஸ்லாவிற்கு உலகம் முழுவதிலுமே வெறும் 6 உற்பத்தி தொழிற்சாலைகள் மட்டுமே உள்ளன. அதில் ஒன்று சீனாவில் உள்ளது. பொதுவாக சீனாவில் வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கோலோச்ச முடியாது என்கிற கருத்து பல காலமாக உள்ளது. மிகவும் சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டுமே சீன சந்தையில் சில காலத்திற்கு நீடிக்கின்றன. இதில் டெஸ்லாவும் ஒன்று.

ஏனெனில் சீனாவில் ஏகப்பட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உள்ளன. அங்கு நிலவும் கடும் போட்டியின் காரணமாகவே, பல சீன நிறுவனங்கள் பல்வேறு நாடுகளுக்கு தங்களது சந்தையை கொண்டு செல்கின்றன. இத்தகைய கடுமையான விற்பனை போட்டிமிகுந்த சந்தையில் ஓர் வெளிநாட்டு நிறுவனம், அதிலிலும் குறிப்பாக ஓர் அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் சாதித்து காட்டுகிறது என்றால் அது சாதாரணமான விஷயமல்ல.

இதில் மற்றொரு ஹைலைட் என்னவென்றால், டெஸ்லா தயாரிப்பது உலகிற்கே புதியதான எலக்ட்ரிக் கார்களை ஆகும். ஆனால் அத்தகைய டெஸ்லா நிறுவனத்திற்கே ஓர் சீன ஆட்டோமொபைல் நிறுவனம் டுமிக்கி கொடுத்துள்ளது என்றால் நம்ப முடிகிறது. ஆம், உலகம் முழுவதும் பிரபலமான டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றான மாடல் 3 -ஐ அப்படியே காப்பியடித்து சீனாவில் ஓர் நிறுவனம் தனது காரை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதில் காமெடி என்னவென்றால், இதை செய்திருப்பது சீனாவின் சாங்கான் மாகாணத்தின் அரசு ஆட்டோமொபைல் நிறுவனமாகும். சாங்கான் ஆட்டோமொபைல் என பெயர் கொண்ட அந்த நிறுவனம் அதன் புதிய ஷென்லன் எஸ்.எல்03 காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் கிட்டத்தட்ட டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரை ஒத்ததாக உள்ளது.

அதாவது, மாடல் 3 -ஐ போன்று சிறிய அளவிலான எலக்ட்ரிக் செடான் காரான சாங்கான் ஷென்லன் எஸ்.எல்03-இல் குறிப்பாக முன்பக்க கீழ் பாகங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பொனெட் உள்ளிட்டவை கிட்டத்தட்ட டெஸ்லா மாடலில் இருந்து காப்பியடிக்கப்பட்டவைகளாக காட்சி தருகின்றன. அதேபோல் நீளம், அகலம் & உயரம் போன்ற பரிமாண அளவுகளும் இவை இரண்டிலும் ஒத்து போகின்றன.

இன்னும் சரியாக சொல்லப்போனால், நீளத்தில் மட்டுமே 10 செ.மீ ஷென்லன் கார் அதிகமாக உள்ளது. மற்றப்படி அகலம், உயரம் ஒன்றே. நீளம் 10 செ.மீ அதிகப்பட்டிருப்பினும், காரின் வீல்பேஸில் எந்த வித்தியாசமும் இல்லை. அப்படியென்றாலே உட்புற கேபினிலும் எந்த வித்தியாசமும் இருக்காது என்றே அர்த்தம். இந்த சீன போலி கார் டேஸ்போர்டில் மாடல் 3 காரில் உள்ளதை போன்று பெரிய அளவில் கிடைமட்டமாக தொடுத்திரையினை கொண்டுள்ளது.

இத்துடன் சாங்கான் ஆட்டோமொபைல் நிறுவனம் நின்றுவிடவில்லை. மாடல் 3 காரில் டெஸ்லா பிரத்யேகமாக வழங்கும் யூஸர் இண்டர்ஃபேஸையும் காப்பிடித்துள்ளது. யூஸர் இண்டர்ஃபேஸ் மட்டுமின்றி ஷென்லன் எஸ்.எல்03 காரில் வழங்கப்பட்டுள்ள பெரும்பான்மையான சாஃப்ட்வேர் தொழிற்நுட்பங்களும் காப்பியடிக்கப்பட்டவைகளாகவே உள்ளன.

சீன ஷென்லன் எஸ்.எல்03 எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் ஆனது 515கிமீ ஆக உள்ளது. இது சிறிய அளவிலான பேட்டரியை பெறும் ஆரம்ப நிலை வேரியண்ட்டில் கிடைக்க பெறும் ரேஞ்ச் ஆகும். அதுவே பெரிய அளவிலான பேட்டரி தொகுப்பை பெறும் உயர்நிலை வேரியண்ட்களில் 705கிமீ என்ற அளவில் ரேஞ்ச் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டர்கள் குறைந்ததினால், சீனாவில் டெஸ்லா மாடல் 3 காரின் நீண்ட ரேஞ்ச் வேரியண்ட்களின் விற்பனை ஏற்கனவே நிறுத்தி கொள்ளப்பட்டுவிட்டது.

அந்த சமயத்தில் மாடல் 3 எலக்ட்ரிக் காரின் அதிகப்பட்ச ரேஞ்ச்சும் 700கிமீ என்ற அளவிலேயே இருந்தது. சீனாவில் ஷென்லன் எஸ்.எல்03 எலக்ட்ரிக் விலை 183,900 யுவான்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்திய ரூபாயில் இதன் மதிப்பானது ஏறக்குறைய 21 லட்ச ரூபாய் ஆகும். அமெரிக்க டாலர்களில் 26,000 USD. அதுவே சீனாவில் டெஸ்லா மாடல் 3 கார் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களில் விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








