சீனாவை உதறி விட்டு இந்தியா பக்கம் சாயும் பிரபல கார் நிறுவனம்... அவங்களை ஒரே அடியா கை கழுவ போறாங்களாம்!
உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஸ்கோடா (Skoda). இதன் தலைமையகம் செக் குடியரசு (Czech Republic) நாட்டில் அமைந்துள்ளது. இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் ஸ்கோடா நிறுவனம் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், சீனாவும் ஒன்று.
இந்த சூழலில் சீன சந்தையில் இருந்து வெளியேறுவது குறித்து ஸ்கோடா நிறுவனம் தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பான இறுதி முடிவை ஸ்கோடா நிறுவனம் வெகு விரைவில் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக வரும் 2023ம் ஆண்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டு விடும் என கூறப்படுகிறது. ஸ்கோடா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான க்ளாஸ் ஜெல்மர் இந்த தகவலை கூறியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

மிகவும் கடுமையான போட்டி நிலவுவதன் காரணமாகவே, சீன சந்தையில் இருந்து வெளியேறுவது குறித்து ஸ்கோடா நிறுவனம் பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சீனாவிற்கு பதிலாக இந்திய சந்தையில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு ஸ்கோடா நிறுவனம் விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனம் தற்போது நிறைய கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) ஆகியவை முக்கியமான கார்கள் ஆகும்.
இந்திய சந்தையில் தத்தளித்து கொண்டிருந்த ஸ்கோடா நிறுவனத்தை, குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகிய 2 கார்களும் தூக்கி நிறுத்தியுள்ளன என்றால் மிகையாகாது. இந்தியாவில் கார் விற்பனையை அதிகரிப்பதற்காக இந்தியா 2.0 (India 2.0) என்ற திட்டத்தை ஸ்கோடா நிறுவனம் கையில் எடுத்துள்ளது. குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகிய 2 கார்களும். இந்த திட்டத்தின் கீழ் ஸ்கோடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தவை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஸ்கோடா குஷாக் கார், கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன. தற்போதைய நிலையில் ஸ்கோடா குஷாக் காரின் ஆரம்ப விலை 11.59 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.69 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
மறுபக்கம் ஸ்கோடா ஸ்லாவியா காரானது, செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். நடப்பாண்டு பிப்ரவரி மாதம்தான் ஸ்கோடா ஸ்லாவியா கார், இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கூடிய விரைவில் இந்தியாவில் ஒரு வருடத்தை இந்த கார் நிறைவு செய்யவுள்ளது. தற்போதைய நிலையில் ஸ்கோடா ஸ்லாவியா காரின் ஆரம்ப விலை 11.29 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 18.40 லட்ச ரூபாயாக உள்ளது. இவையும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகிய 2 புதிய கார்களுக்கும் கிடைத்துள்ள வரவேற்பு, இந்திய சந்தையில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கான உத்வேகத்தை ஸ்கோடா நிறுவனத்திற்கு வழங்கியிருக்கலாம் என தெரிகிறது. இந்த சூழலில் இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் (Electric Car) வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவே ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டு வருகிறது.
அடுத்த 12ல் இருந்து 18 மாதங்களுக்குள், அதாவது அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள், ஸ்கோடா நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, இந்த புதிய எலெக்ட்ரிக் காரும் பிரீமியமான ஒன்றாக இருக்கும். எனவே இந்தியாவில் உள்ள ஸ்கோடா ரசிகர்கள் மத்தியில், இந்த எலெக்ட்ரிக் கார் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








