டாடாலாம் ஓரமா நில்லு! பாதுகாப்பில் பின்னுக்கு தள்ளிய ரெண்டு புது கார்கள்! உலகமே இந்தியாவை அண்ணாந்து பாக்குது!
2 புதிய இந்திய கார்கள் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளன. இதுகுறித்த பிரம்மிப்பான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது கார்களின் பாதுகாப்பிற்கு வாடிக்கையாளர்கள் மிக அதிக முக்கியத்துவத்தை வழங்க தொடங்கியுள்ளனர். எனவே கார் உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு, பாதுகாப்பு வசதிகளை அதிகரித்து வருகின்றன. பாதுகாப்பை பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முன்னணியில் இருக்கிறது.

ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக தற்போது மற்றொரு நிறுவனம் வந்து விட்டது. அதை தெரிந்து கொள்வதற்கு முன்னதாக இதுவரை குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கிய 'மேட் இன் இந்தியா' கார்களை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வது நன்றாக இருக்கும்.

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் இதுவரை 5 'மேட் இன் இந்தியா' கார்கள் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியுள்ளன. அவை டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz), டாடா பன்ச் (Tata Punch), மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) ஆகும்.

இந்த 5 கார்களுமே பெரியவர்களுக்கான பாதுகாப்பில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கி அசத்தியுள்ளன. எனினும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் இந்த கார்கள் எதுவுமே 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக வாங்கியதில்லை. 4 அல்லது அதற்கும் குறைவான ரேட்டிங்கை மட்டுமே இந்த கார்கள் வாங்கியுள்ளன.

இதன்படி குழந்தைகளுக்கான பாதுகாப்பில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆகிய 2 கார்களும் 4 ஸ்டார் ரேட்டிங்கை வாங்கியுள்ளன. மறுபக்கம் டாடா பன்ச் காரும் கூட குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் ரேட்டிங்கை வாங்கியுள்ளது. ஆனால் டாடா அல்ட்ராஸ் மற்றும் டாடா நெக்ஸான் கார்கள் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார்களை மட்டுமே வாங்கியுள்ளன.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார்களுக்கு எல்லாம் போட்டியாக இரண்டு கார்கள் தற்போது உருவெடுத்துள்ளன. அவை ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகும். இவை இரண்டும் மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இவை இரண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்த கார்கள் ஆகும். அதாவது உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஃபோக்ஸ்வேகன் திகழ்கிறது. இந்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஒரு அங்கமாகதான் ஸ்கோடா நிறுவனம் செயல்பட்டு கொண்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா நிறுவனங்கள் தற்போது இந்திய சந்தையில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

இதற்காக இந்தியா 2.0 என்ற திட்டத்தை அந்த நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன. ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய 2 கார்களும் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டவை ஆகும். ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய 2 கார்களும் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த சூழலில் இந்த 2 கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளன. இந்த 2 கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என இரண்டு பிரிவுகளிலும் முழுமையாக 5 ஸ்டார் ரேட்டிங்கை தன்வசப்படுத்தியுள்ளன.

இதுவரை எந்தவொரு மேட் இன் இந்தியா காரும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என 2 பிரிவுகளிலும் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியதில்லை. முதல் முறையாக தற்போதுதான் ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய 2 கார்களும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளன.

இதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டதிலேயே மிகவும் பாதுகாப்பான கார்கள் என்ற பெருமையை அவை இரண்டும் பெற்றுள்ளன. ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய இரு கார்களும் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 34க்கு தலா 29.64 புள்ளிகளை ஸ்கோர் செய்திருக்கின்றன. மறுபக்கம் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு தலா 42 புள்ளிகளை ஸ்கோர் செய்துள்ளன.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 83க்கு 71.64 புள்ளிகளை அவை பெற்றுள்ளன. இந்த 2 கார்களும் இந்தியாவிற்கு புது வரவுகள் ஆகும். இதில் ஸ்கோடா குஷாக் கார் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மறுபக்கம் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்திய சந்தையில் இந்த இரண்டு கார்களின் விற்பனையும் ஏற்கனவே மிகவும் சிறப்பாக இருந்து வருவதாக ஃபோக்ஸ்வேகன் குழுமம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில், 'மேட் இன் இந்தியா' கார்களிலேயே மிகவும் பாதுகாப்பானவை என்ற பெருமையை அவை தற்போது பெற்றுள்ளன. இதன் மூலமாக இந்த இரண்டு கார்களின் விற்பனையும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








