புதிய ஸ்கோடா ஸ்லாவியா செடானின் விலைகள் இணையத்தில் லீக்!! ஆரம்ப விலை இதுதானா!
புதிய ஸ்கோடா ஸ்லாவியா செடான் காருக்கு நிர்ணயிக்கப்பட உள்ள எக்ஸ்-ஷோரூம் விலைகள் குறித்த விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா கூட்டணி நிறுவனம் இந்திய சந்தைக்காக பிரத்யேகமாக உருவாக்கிய எம்க்யூபி-ஏ0-இன் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் புதியதாக அறிமுகமாகவுள்ள ஸ்கோடா கார் ஸ்லாவியா ஆகும். முன்னதாக இதே மாடர்ன் இயக்குதளத்தில் உருவாக்கப்பட்ட குஷாக் மற்றும் டைகுன் எஸ்யூவி கார்கள் கடந்த ஆண்டில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

செடான் காரான ஸ்லாவியா கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் இருந்து உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் வேரியண்ட்கள் வாரியாக இணையத்தில் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக டீம்பிஎச்பி செய்திதளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ள படத்தினை கீழே காணலாம்.

Source: Team BHP
இந்த படம் டீலர்ஷிப் மையம் ஒன்றின் வெப்சைட்டில் இருந்து கசிந்ததுபோல் உள்ளது. ஏனெனில் இதில் எக்ஸ்-ஷோரூம் விலை உடன், சாலை வரி, பதிவு கட்டணங்கள், இன்ஸ்சூரன்ஸ் & ஃபாஸ்டேக் உள்ளிட்டவை எல்லாம் சேர்த்து ஸ்லாவியாவின் ஆன்-ரோடு விலைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆன்-ரோடு விலை ஆனது மாநிலத்திற்கு மாநிலம் மாறக்கூடும். ஆதலால் இந்த படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்லாவியாவின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை மட்டும் பார்ப்போம்.

இந்திய சந்தையில் ஆக்டிவ், அம்பிஷன் மற்றும் ஸ்டைல் என்கிற 3 விதமான வேரியண்ட்களில் இந்த புதிய செடான் கார் விற்பனை செய்யப்பட உள்ளது. இவை மூன்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கவுள்ளன. அதேநேரம் டாப் ஸ்டைல் வேரியண்ட்டை மட்டும் சற்று ஆற்றல்மிக்க 1.5 லிட்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்விலும் வாங்கலாம் என இந்த படம் தெரிவிக்கிறது.

அதேபோல் ஆரம்ப நிலை ஆக்டிவ் வேரியண்ட்டை தவிர்த்து மற்றவை இரண்டை மட்டுமே ஆட்டோமேட்டிக் தேர்வில் பெற முடியுமாம். இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் & மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடனான ஸ்லாவியாவின் ஆக்டிவ், அம்பிஷன் மற்றும் ஸ்டைல் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.10,80,000, ரூ.12,60,000 மற்றும் ரூ.14,50,000 ஆக குறிப்பிடப்பட்டுள்ளன.

1.5 லிட்டர் பெட்ரோல் & மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடனான ஸ்டைல் வேரியண்ட்டின் விலை ரூ.16.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட உள்ளது. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடனான 1.0 லிட்டர் அம்பிஷன் & ஸ்டைல் வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.14 லட்சம் மற்றும் ரூ.15.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட உள்ளன.

1.5 லிட்டர் பெட்ரோல் & ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடனான ஸ்லாவியா வேரியண்ட்டின் விலை இருப்பதிலேயே அதிகப்பட்சமாக ரூ.17.70 லட்சங்களாக நிர்ணயிக்கப்பட உள்ளது. இதனை ஆன்-ரோடு விலையில் வாங்க வேண்டுமென்றால், கிட்டத்தட்ட ரூ.21.5 லட்சங்கள் வரையில் தேவைப்படுமாம். இதே வேரியண்ட்டின் விலை மேனுவல் தேர்வில் இதனை காட்டிலும் ரூ.1 லட்சம் வரையில் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கசிந்த விபரங்களின்படி பார்க்கும்போது ஸ்கோடா ஸ்லாவியாவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.80 லட்சங்களில் இருந்து ரூ.17.70 லட்சங்கள் வரையில் நிர்ணயிக்கப்பட உள்ளன. ஸ்லாவியாவில் வழங்கப்பட உள்ள 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 113 பிஎச்பி மற்றும் 178 என்எம் டார்க் திறன் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

இதனை காட்டிலும் அளவில் பெரிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 148 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த இரு என்ஜின் தேர்வுகளும் ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காரிலும் வழங்கப்படுகின்றன. இவை இரண்டுடன் டிரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் & டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளன.

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் முதற்கட்டமாக 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் உடனான ஸ்லாவியா செடான் காரை வருகிற பிப்.28ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த மார்ச் 3ஆம் தேதி இந்த செடான் மாடலின் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ வெர்சன் களமிறக்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாக டெஸ்ட் ட்ரைவ்கள் இந்த பிப்ரவரி மாத இறுதியில் துவங்கவுள்ள நிலையில், ஸ்லாவியா கார்கள் டீலர்ஷிப் மையங்களை வந்தடைய துவங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications








