இதுக்காகதான் வெயிட் பண்ணீட்டு இருந்தோம்... Skoda Slavia கார் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஸ்கோடா ஸ்லாவியா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia). இது செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஸ்கோடா ஸ்லாவியா கார் இந்திய சந்தையில் இன்று (பிப்ரவரி 28) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி ஸ்கோடா ஸ்லாவியா கார் இன்று முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஸ்கோடா ஸ்லாவியா காரின் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதே சமயம் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் வரும் மார்ச் 3ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.

ஸ்கோடா ஸ்லாவியா கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும். அவை ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் ஆகும். அதே சமயம் மொத்தம் 5 வண்ண தேர்வுகளில் ஸ்கோடா ஸ்லாவியா கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவை கார்பன் ஸ்டீல், கேண்டி ஒயிட், பிர்லியண்ட் சில்வர், டொராண்டோ ரெட் மற்றும் க்ரிஸ்டல் ப்ளூ ஆகும்.

ஸ்கோடா ஸ்லாவியா காரின் 1.0 லிட்டர் மூன்று-சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 114 பிஹெச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் இந்த காரின் 1.5 லிட்டர் நான்கு-சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 148 பிஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

ஸ்கோடா ஸ்லாவியா காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் ஆகியவை ஆப்ஷனலாக வழங்கப்படுகின்றன. சக்தி வாய்ந்த இன்ஜின் தேர்வுகளுடன், கவர்ந்து இழுக்க கூடிய டிசைனையும் ஸ்கோடா ஸ்லாவியா கார் பெற்றுள்ளது.

ஸ்கோடா ஸ்லாவியா காரில், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 'L' வடிவ எல்இடி பகல் நேர விளக்குகள், பனி விளக்குகள், ஸ்கோடா நிறுவனத்திற்கே உரித்தான பட்டாம்பூச்சி வடிவ க்ரில் அமைப்பு, எல்இடி டெயில்லைட்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் ஸ்கோடா ஸ்லாவியா காரில் வசதிகளுக்கும் பஞ்சமில்லை.

இதன்படி ஸ்கோடா ஸ்லாவியா காரில், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், மிரர்லிங்க் கனெக்டிவிட்டி, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், முன் பகுதியில் வெண்டிலேட்டட் இருக்கைகள் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியண்ட் லைட்டிங், ரியர் ஏசி வெண்ட்கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகளையும் ஸ்கோடா ஸ்லாவியா கார் பெற்றுள்ளது. கவர்ந்து இழுக்க கூடிய டிசைன், சக்தி வாய்ந்த இன்ஜின் தேர்வுகள் உள்ளிட்ட காரணங்களால் ஸ்கோடா ஸ்லாவியா காருக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா ஸ்லாவியா காரின் விலை இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், வாடிக்கையாளர்களுக்கு காரை டெலிவரி செய்யும் பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளன. அத்துடன் வாடிக்கையாளர்கள் ஸ்லாவியா காரை ஓட்டி பார்ப்பதற்கான டெஸ்ட் டிரைவ் பணிகளையும் ஸ்கோடா நிறுவனம் உடனடியாகவே தொடங்கி விட்டது.

ஸ்கோடா ஸ்லாவியா காரின் 1.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல்களின் விலை 10.69 லட்ச ரூபாய் முதல் 15.39 லட்ச ரூபாய் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா ஸ்லாவியா காரின் 1.0 லிட்டர் மாடல்களின் விரிவான விலை விபரத்தை கீழே உள்ள பட்டியலில் நீங்கள் காணலாம். இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
| Model | 1.0 TSI (MT) | 1.0 TSI (AT) |
| Active | ₹10,69,000 | - |
| Ambition | ₹12,39,000 | ₹13,59,000 |
| Style (Non-Sunroof Version) | ₹13,59,000 | - |
| Style | ₹13,99,000 | ₹15,39,000 |

ஸ்கோடா நிறுவனம் குஷாக் மிட்-சைஸ் எஸ்யூவி காருக்கு அடுத்தபடியாக ஸ்லாவியா காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. தற்போது இதன் 1.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல்களின் விலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 1.5 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல்களின் விலை வரும் மார்ச் 3ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications








