ஸ்கோடா ஸ்லாவியா காருக்கு முன்பதிவு குவிகிறது... ஒரே மாசத்துல இவ்ளோ பேர் புக்கிங் பண்ணியிருக்காங்களா?
ஸ்கோடா ஸ்லாவியா காருக்கு முன்பதிவுகள் குவிந்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) கார் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாத கால அளவிலேயே ஸ்கோடா ஸ்லாவியா காருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது.

விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட முதல் 4 வாரங்களிலேயே ஸ்கோடா ஸ்லாவியா கார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா ஸ்லாவியா கார், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் என இரண்டு இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கும்.

இந்திய சந்தையில் ஸ்கோடா ஸ்லாவியா காரின் ஆரம்ப விலை 10.69 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 17.79 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு ஸ்கோடா ஸ்லாவியா மிக சிறப்பான காராக பார்க்கப்படுகிறது.

ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என ஸ்கோடா ஸ்லாவியா கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த காரின் முன் பகுதியில் அறுகோண வடிவ க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை சுற்றிலும் க்ரோம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், எல்இடி பனி விளக்குகள் ஆகியவற்றையும் ஸ்கோடா ஸ்லாவியா கார் பெற்றுள்ளது.

மேலும் 16 இன்ச் அலாய் வீல்கள், 10 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, முழு டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, முன் பகுதியில் வெண்டிலேட்டட் இருக்கைகள், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், கூல்டு க்ளவ் பாக்ஸ் உள்பட பல்வேறு வசதிகளும் ஸ்கோடா ஸ்லாவியா காரில் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் ஏற்கனவே கூறியபடி ஸ்கோடா ஸ்லாவியா காரில் 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகிறது.

இதில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் அதிகபட்சமாக 113 பிஹெச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் அதிக சக்தி வாய்ந்த 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஸ்கோடா ஸ்லாவியா கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 10 வினாடிகளுக்கு உள்ளாக எட்டி விடும்.

அதே நேரத்தில் ஸ்லாவியா கார் ஒரு லிட்டருக்கு 18 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான மைலேஜை வழங்கும் என ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கோடா நிறுவனம் தற்போது விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இதற்கு ஸ்லாவியா மற்றும் ஸ்கோடா நிறுவனத்தின் மற்றொரு புதிய தயாரிப்பான குஷாக் மிட்-சைஸ் எஸ்யூவி ஆகியவையே காரணமாகும்.

ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு மார்ச் மாதம் 5,608 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 1,159 கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. இது மிகப்பெரிய வளர்ச்சி என்பதில் துளியும் சந்தேகமில்லை.

இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்கு ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய கார்கள்தான் காரணம். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி சியாஸ், ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட கார்களுக்கு எதிராக ஸ்கோடா ஸ்லாவியா போட்டியிட்டு வருகிறது. ஆனால் ஸ்கோடா ஸ்லாவியாவிற்கான போட்டி இன்னும் ஒரு சில வாரங்களில் அதிகரிக்கவுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன், ஸ்கோடா ஸ்லாவியா காருக்கான போட்டி அதிகரித்து விடும். ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் கார் வரும் மே மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்த கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரின் உற்பத்தி பணி சமீபத்தில்தான் தொடங்கப்பட்டது. ஸ்கோடா ஸ்லாவியா காரை போல், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காருக்கும் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை சரியாக நிர்ணயம் செய்யப்பட்டால், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் விற்பனையில் சாதிப்பது உறுதி.


Click it and Unblock the Notifications








