கார் பிரேக்கில் இந்த 6 பிரச்சனைகள் இருந்தால் அசால்ட்டாக எடுத்து கொள்ள வேண்டாம்!! அறிகுறிகளை பாருங்க...
தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்தில் காரின் பாதுகாப்பு அம்சங்களில் ஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால் முதல்முறையாக கார் உருவாக்க ஆரம்பித்த போது அதில் கண்டுப்பிடிப்பாளர்கள் வைத்த முதல் பாதுகாப்பு அம்சம் பிரேக்கே ஆகும். பிரேக் அமைப்பில் பயன்படுத்தப்படும் உலோகங்கள் காலத்திற்கு ஏற்ப அவ்வப்போது மாற்றம் கண்டு வந்தாலும், காருக்கு பிரேக் தேவை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால், ADAS உள்பட தற்கால மாடர்ன் தொழிற்நுட்பங்கள் பலவும் பிரேக் அமைப்பையே சார்ந்திருக்கின்றன. ஆகையால் அத்தகைய பிரேக் அமைப்பில் ஏதேனும் பழுது ஏற்பட்டதுபோல் உணர்ந்தால், அதனை சாதாரணமான விஷயமாக எடுத்து கொள்ளக்கூடாது. ஆதலால் பிரேக் அமைப்பில் பழுது இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகளை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்டேரிங் சக்கரம் அல்லது பிரேக் பெடலில் அதிர்வு
பிரேக் ரோடர்களில் ஏதேனும் பிரச்சனை இருப்பின், ஸ்டேரிங் சக்கரம் அல்லது பிரேக் பெடல் அதிர்வுற துவங்கும். இதற்கு பிரேக் ரோடார்களின் வேறுப்பட்ட செயல்பாடுகளே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ரோடார்களின் பரப்பு சமமாக இல்லாத போது பிரேக் பேட்களில் இருந்து அதிர்வானது காரின் கேபினுக்குள் உள்ள பிரேக் பெடலுக்கும், ஸ்டேரிங் சக்கரத்திற்கும் அனுப்பப்படுகிறது. பிரேக் ரோடார்களில் ஏற்படும் இந்த பிரச்சனையை அருகில் உள்ள மெக்கானிக்கிடம் சென்று சரிப்பார்ப்பதே சிறந்தது.

பிரேக் கொடுக்கும்போது எரிந்த வாசனை
பிரேக் பெடலை அழுத்தும்போது எரிந்த வாசனை வெளிவருவதற்கு காரணம், பிரேக் டிஸ்க் அல்லது பிரேக் திரவம் அதிக வெப்பமடைவதினால் ஆகும். இவ்வாறு வாசனையை நுகர நேர்ந்தால், உடனடியாக காரை நிறுத்தி விடுவது நல்லது. பின்னர் காரில் இருந்து இறங்கி, பிரேக் டிஸ்க்கில் இருந்து புகை வெளிவருகிறதா என்பதை சரிப்பார்க்கவும்.

புகை வெளிவருகிறது எனில், உடனடியாக அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு காரை கொண்டுசெல்வது நல்லது. புகை வெளிவராவிடினும், பிரேக் திரவத்தை குளிர்ச்சியடைய செய்வதற்காக பொனெட் மூடியை சில நிமிடங்களுக்கு திறந்து வைத்திருத்தல் அவசியம். மீண்டும் மீண்டும் இவ்வாறான வாசனை வெளிவருகிறது எனில், மெக்கானிக்கை அணுகவும். பொதுவாக, மலைப்பாதைகளில் இருந்து இறங்கு முகமாக இறங்கும்போது ஓட்டுனர் வேகத்தை கட்டுப்படுத்த அடிக்கடி கொடுக்கும் பிரேக்கினால் இந்த பிரச்சனை உருவாகிறது.

பிரேக்கிங் போது கார் ஒரு பக்கமாக சாய்தல்
பிரேக் காலிபர்கள் அழுத்தத்தை டிஸ்க்குகளுக்கு சரி சமமாக வழங்காத போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு இரு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று, ஒருபக்க பிரேக் குழாய் பழுதாகி இருந்தாலோ அல்லது முற்றிலுமாக உடைந்திருந்தாலோ இவ்வாறு கார் ஒரு பக்கமாக சாயும். இந்த காரணமும் மிகவும் அபாயகரமானதாக பார்க்கப்படுகிறது.

மற்றொரு காரணம் என்னவென்றால், தூசி, மண் துகள்கள் அல்லது துருப்பிடித்து அதனால் உண்டாகும் துகள்கள் உள்ளிட்டவற்றால் காலிபரில் அடைப்பு ஏற்படுவதினால் ஆகும். இவ்வளவு ஏன், காலிபர் பிஸ்டன் வளைந்தால் கூட இவ்வாறான பிரச்சனை உண்டாகும். பழுதான காலிபர் உடன் பயணிக்கும்போது, பிரேக் கொடுத்தோமேயானால், மொத்த அழுத்தமும் ஒரு பக்க காலிபருக்கு மட்டுமே செல்லும்.

பிரேக் எச்சரிக்கை விளக்கு அல்லது ஏபிஎஸ் எச்சரிக்கை விளக்கு ஒளிர்தல்
இப்போது உள்ள எல்லா கார்களிலும் ஏபிஎஸ் அமைப்பிற்கான எச்சரிக்கை விளக்கு உள்ளது. வழக்கமாக இந்த விளக்கு ஆனது ஹைட்ராலிக் அழுத்தம் குறைந்தாலோ அல்லது முற்றிலுமாக இல்லாமல் போனாலோ ஒளிர ஆரம்பிக்கிறது. மேலும் இது காரின் ஏபிஎஸ் அமைப்பில் பிரச்சனை உள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு ஏபிஎஸ் எச்சரிக்கை விளக்கு ஒளிர்வதை கண்டால், உடனே காரை மெக்கானிக் கடைக்கு எடுத்து செல்வது நல்லது என்கின்றனர் கார் ஆர்வலர்கள்.

பிரேக் கொடுக்கும்போது இரைச்சல்
பிரேக் பேட்களும், பிரேக் டிஸ்க்கும் உலோகத்தினால் செய்யப்படுபவைகளாக உள்ளதால், பிரேக் கொடுக்கும்போது சற்று சத்தம் எழுவது அனைத்து கார்களிலும் இயல்பானதே. இருப்பினும், பிரேக் பேடில் மேற்பகுதி முற்றிலுமாக தேய்ந்து, உலோக பகுதி நேரடியாக டிஸ்க்கில் படும்போது இரைச்சல் இன்னும் அதிகமாக எழும்.

இது பிரேக் பேட்-ஐ மாற்ற வேண்டும் என்பதை குறிக்கிறது. அதேநேரம் சில கார்களில் பின்பக்க ட்ரம் பிரேக்குகளின் குறைந்த உயவு நிலைகளினாலும் இரைச்சல் ஏற்படுவது உண்டு. இந்த விஷயத்தில், காரை மெக்கானிக்கிடம் எடுத்து சென்று பரிசோதிப்பதே ஒரே வழி.

பஞ்சு போன்ற அல்லது மென்மையான பிரேக் பெடல்
பிரேக் கொடுக்கும்போது அதற்கான எதிர்வினை முற்றிலுமாக கிடைக்காவிட்டாலோ அல்லது பிரேக் பெடலை அழுத்தும்போது பஞ்சை அழுத்துவது போன்று உணர்ந்தாலோ நீங்கள் உங்களது காரை மெக்கானிக் கடைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று அர்த்தமாகும். தினமும் காரை இயக்குபவர்களுக்கு இந்த உணர்வு தெளிவாக புலப்படும். மேலும், இது மாஸ்டர் சிலிண்டர் அமைப்பில் பிரச்சனை உள்ளதை குறிக்கிறது. ஏனெனில் இதனாலேயே பிரேக் டிஸ்க்கிற்கு செல்லும் அழுத்தம் தடைப்படுவதற்கு வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








