காரில் பிரேக் பேட்களின் ஆயுட்காலம் முடிய உள்ளதை இதை வைத்து கண்டுப்பிடிச்சிடலாம்!! வீணா எல்லாத்தை மாற்றாதீங்க!
கார் ஒன்றின் பிரேக் பேட்களுக்கு ஆயுட்காலம் எவ்வளவு? பிரேக் பேட் பழுதடைந்துள்ளதை எவ்வாறு கண்டுப்பிடிப்பது? என்பது குறித்த கேள்விகளுக்கு பதில்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

கார் ஒன்றில் பொருத்தப்படும் மிக முக்கிய பாகங்களில் பிரேக் பேட்களும் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இது இல்லையெனில் உங்களால் காரை நிறுத்த முடியாது. ஒவ்வொரு நிறுவனத்தாலும் ஒவ்வொரு விதமாக பிரேக் பேட்கள் வடிவமைக்கப்படுகின்றன. இவற்றின் ஆயுட்காலத்தை அறிந்துக்கொள்ள எந்தவொரு ஓட்டுனர்களும் விரும்புவர்.

ஒரு தரமான பிரேக் பேட் ஆனது அதிகப்பட்சமாக 80 ஆயிரம் கிமீ தொலைவு பயணத்திற்கு தாங்கும். மற்ற கார் பாகங்களை போன்று இதன் ஆயுட்காலமும், நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள், கார் இயங்கும் பயணச்சூழல் மற்றும் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உலோகங்களை பொறுத்து மாறக்கூடியது.

சரி முதலில் பிரேக் பேட்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை பார்த்துவிடுவோம். காரின் பிரேக் பேட்களை நம்மால் வெளியே பார்க்க முடியாது, அவை சக்கரங்களுக்கு பின்னால் அமைந்திருக்கும். ஆதலால் உங்களுக்கு தெளிவாக விளங்க, பை-சைக்கிள்களின் காலிபர் பிரேக்குகளை கருத்தில் எடுத்து கொள்வோம். சைக்கிளில் நீங்கள் பிரேக்கை கொடுக்கும்போது, அதே விசையில் சக்கரங்களுக்கு அருகே இருக்கும் இரு பேட்கள் சக்கரங்களின் ரிம்களை அழுத்தும்.

இதனால் சுழன்று கொண்டிருக்கும் ரிம்களின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு, ஒரு கட்டத்திற்கு மேல் சக்கரம் சுழல்வது முற்றிலுமாக நின்றுவிடும். கார்களிலும் சக்கரங்களின் சுழற்சி கிட்டத்தட்ட இதே செயல்முறையில் தான் குறைக்கப்படுவதும், நிறுத்தப்படுவதும். என்ன... சைக்கிளில் கைகளினால் பிரேக் கொடுப்பீர்கள், காரில் காலினால் பிரேக் பெடலை அழுத்துவீர்கள். மற்றப்படி கான்செப்ட் எல்லாம் ஒன்றுதான்.

பிரேக் பேட்கள் பழுதடைந்ததை எவ்வாறு அறிவது?
காரை வாங்குவதை காட்டிலும் அதனை பராமரிப்பதுதான் முக்கியம் என்பதை பலர் கூற கேள்விப்பட்டீருப்பீர்கள். ஏனெனில் இயக்கத்தின்போது காரில் ஏதேனும் ஒரு சத்தத்தை புதியதாக கேட்டீர்கள் எனில், அது பழுதிற்கான அறிகுறியாகவே பெரும்பாலும் இருக்கும். அதேபோல், பிரேக் பேட்கள் பழுதானதையும் கீழ்காணும் அறிகுறிகள் வைத்து கண்டறிந்துவிடலாம்.

இரும்போடு இரும்பு உராயும் சத்தம்
பிரேக் கொடுக்கும்போது இரு இரும்பிலான பாகங்கள் உராய்வது, கீறலிடுவது போன்று ஏதேனும் சத்தத்தை கேட்க நேர்ந்தால், அது பிரேக் பேட்கள் பழுதானதை குறிப்பதாகவே இருக்கும். அதாவது உங்களது காரின் பிரேக் பேட்களில் ஒன்று (அல்லது இரண்டும்) தனது குறைந்தப்பட்ச பாதுகாப்பான நிலையை எட்டிவிட்டது என்பது அத்தகைய சத்தத்தின் எச்சரிக்கையாகும்.

பிரேக் பேட்களை பொறியியலாளர்கள் உலோக தட்டு ஒன்றை மையத்தில் வைத்து வடிவமைக்கிறார்கள். பிரேக் பேட்களை நீண்ட காலத்திற்கு பயன்படுத்திவர, மையத்தில் பொருத்தப்படும் உலோகம் நேரடியாக பிரேக் ரோடார்களின் மீது படும்போது இத்தகைய இரைச்சல்கள் பிரேக்கிங்கின் போது ஏற்படும். இத்தகைய இரைச்சலை கேட்க நேர்ந்தால், உடனடியாக பிரேக் பேட்களை மாற்ற பாருங்கள்.

எலக்ட்ரானிக் இண்டிகேட்டர்
இது ஓர் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சமாகும். அதாவது எலக்ட்ரானிக் இண்டிகேட்டர் தற்போதைக்கு விலை கொண்ட கார்களில் மட்டுமே பொருத்தப்படுகிறது. எலக்ட்ரானிக் இண்டிகேட்டர் ஆனது ஒரு சென்சார் ஆகும். இது பிரேக் ரோடார்களில் பொருத்தப்படுகிறது. எப்போது பிரேக் பேட்களின் தடிமன் குறைய ஆரம்பிக்கிறதோ அப்போது அதுகுறித்த எச்சரிக்கையை இது திரையின் வாயிலாக ஓட்டுனருக்கு தெரிவிக்கும்.

இந்த எச்சரிக்கை வெளிவந்தால், நீங்கள் பிரேக் பேட்களை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது அர்த்தமாகும். எலக்ட்ரானிக் இண்டிகேட்டர் ஆனது ரோட்டாரின் பழுத்திற்கும் எச்சரிக்கும். ஆதலால் இத்தகைய எச்சரிக்கை வந்தால் உடனடியாக காரை அருகில் உள்ள மெக்கானிக் ஷாப்பிற்கு எடுத்து சென்று, பிரேக் பேட்கள் & ரோடார்கள் என இரண்டையும் சோதனை செய்யுங்கள். பின்னர் எலக்ட்ரானிக் இண்டிகேட்டர் சென்சாரையும் மேனுவலாக பொருத்த வேண்டியிருக்கும்.

பிரேக் பெடல் அதிர்வுறுவது
பிரேக் கொடுக்கும்போது, பிரேக் பெடல் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக அதிர்வுறுவது போல் உணர நேர்ந்தால், அது பிரேக் பேட்களில் ஏற்பட்டுள்ள பழுதினால் கூட இருக்கலாம். ஆனால், பிரேக் பெடல் அதிர்வுற்றால், பிரேக் பேட்களில் தான் பிரச்சனை இருக்கும் என்று உறுதியாக கூறிவிட முடியாது.

ஏனெனில் பிரேக் பேடிற்கும், ரோடாருக்கும் இடையே சிறு கற்கள் அல்லது மற்ற ஏதேனும் திடமான பொருட்கள் சென்று சிக்கிக்கொண்டாலும் அல்லது பிரேக் பெடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும், பிரேக் பெடல் அதிர்வுற ஆரம்பிக்கும். அத்துடன், காரின் ஏபிஎஸ் செயல்பாட்டிற்கு வந்தாலும் பிரேக் பெடல் அதிர்வுறும் என்பதை மறந்துவிட வேண்டாம்.


Click it and Unblock the Notifications








