எலெக்ட்ரிக் காருக்கு பதிலா இதையே வாங்கிடலாம் போல! டாடா ஏஸ் இவி-ல இவ்ளோ சிறப்பம்சங்களா?.. மிரள வைக்குது!
டாடா (Tata Motors) நிறுவனம் அதன் ஏஸ் இவி (ACE EV)-யின் அட்டகாசமான விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது. வாகனத்தின் அனைத்து சிறப்பு வசதிகளையும் விளக்கும் வகையில் அந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதுகுறித்த முழுமையான விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

குட்டி யானை என பலரால் செல்லமாக அழைக்கப்படும் வாகனம் ஏஸ் (ACE) மினி லோடு வேன். டாடா மோட்டார்ஸ் (Tata Motors) தயாரித்து வரும் பிரபலமான வர்த்தக வாகன மாடல்களில் இதுவும் ஒன்று. இந்த வாகனத்தை தற்போது டாடா மின்சார வெர்ஷனிலும் உருவாக்கியிருக்கின்றது. இதனையே மிக சமீபத்தில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

ஏஸ் இவி (ACE EV) எனும் பெயரில் மே 5-ஆம் தேதி அன்று முதல் முறையாக அது நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வாகனத்தை வெகு விரைவில் வர்த்தக வாகன பிரிவில் விற்பனைக்கு வழங்கவும் இருக்கின்றது, டாடா. ஆகையால், ஏஸ் இவி வாகனத்தின் பக்கம் மக்களை ஈர்க்கும் பணியில் டாடா களமிறங்கியிருக்கின்றது.

இதன் அடிப்படையில் ஓர் விளம்பர வீடியோவை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளஇயிட்டுள்ளது. டாடா நிறுவனம் அதன் முன்னணி மின்சார கார் மாடல்களை போலவே ஏஸ் இவி-யையும் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கியிருக்கின்றது.

இதனை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலேயே புதிய விளம்பர வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் டாடா ஏஸ் இவி-யின் அனைத்து சிறப்பு வசதிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் தேவையை எவ்வாறு ஏஸ் இவி பூர்த்தி செய்யும் என்பதை விளக்கும் வகையிலும் அந்த விளம்பர வீடியோ அமைந்துள்ளது.

ஏற்கனவே ஏஸ் இவிக்கான புக்கிங் தொடங்கிவிட்டதாகவும், தற்போது வரை 39 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகளுக்கான புக்கிங்குகள் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமேசான், ஃப்ளிப்கார்ட், பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்தே மிக பெரிய ஆர்டர்கள் குவிந்துள்ளன.

இந்த மாதிரியான சூழ்நிலையில் பிற வர்த்தக நிறுவனங்களையும் ஈர்க்கும் வகையில் தற்போது விளம்பர வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 1 நிமிடம் 41 செகண்டுகள் அடங்கிய அந்த வீடியோவில் டாடா ஏஸ் இவியின் பின் பகுதி, சைடு இண்டிகேட்டர், ஸ்டாப் லைட், முன்பக்க ஹெட்லைட், சின்னம், க்ரில் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து, காருக்குள் இடம் பெற்றிருக்கும் 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த சிஸ்டத்தின் வாயிலாக என்ன மாதிரியான பலன்களை எல்லாம் ஏஸ் இவி-யின் பயன்பாட்டாளர்கள் பெற முடியும் என்பதும் வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, டயர் பிரஷ்ஷர் மானிட்டர், புதிய தலைமுறை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், காரின் கவர்ச்சிகரமான உட்பகுதி அமைப்பு ஆகியவையும் காட்சிகளாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன் பின்னர் டாடா ஏஸ் இவி சாலையில் மிக சிறந்த வேகத்தில் இயங்குவது போன்று காட்சிகளும் வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றது. டாடா ஏஸ் இவி வெறும் 7 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 30 கிமீ எனும் வேகத்தை எட்டக் கூடியது திறனைக் கொண்டுள்ளது.

மேலும், ஐபி67 வாட்டர்ப்ரூஃப் தர சான்றை இவ்வாகனம் பெற்றிருக்கின்றது. ஆகையால், தண்ணீரால் எந்த பாதிப்பையும் இது சந்திக்காது. இத்துடன், வெயிக்கிள் டிராக்கிங், ஃப்ளீட் டெலிமேட்டிக்ஸ், ஜியோ ஃபென்ஸிங் போன்ற சிறப்பு தொழில்நுட்ப வசதிகளும் ஏஸ் இவி-யில் வழங்கப்பட்டுள்ளன.

இதனை ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் 105 நிமிடங்களிலேயே முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தகைய மிக சிறப்பான வசதிகளுடனேயே டாடா ஏஸ் இவி உருவாக்கப்பட்டு, தற்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.
மேலே பார்த்தவை மட்டுமில்லைங்க இன்னும் பல சிறப்பு வசதிகளை இந்த எலெக்ட்ரிக் வாகனம் தாங்கியிருக்கின்றது. மிக குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் இதனை ஈவோஜென் எனும் பவர்டிரெயினைக் கொண்டு உருவாக்கியிருக்கின்றது. தொடர்ந்து, இவ்வாகனத்தில் முழுமையான சார்ஜில் 154 கிமீ தூரம் ரேஞ்ஜ் வழங்கக் கூடிய 21.3 kWh லித்தியம் அயன் ஃபாஸ்பேட் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார் 36 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. ஏஸ் இவி 600 கிலோ வரை எடைக் கொண்ட பொருட்களை கையாளும் திறனைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், அட்வான்ஸ்ட் பேட்டரி கூலிங் சிஸ்டம், அனைத்து காலை நிலைகளிலும் பாதுகாப்பை வழங்கும் வசதி, குண்டும்-குழியுமான சாலைகளைச் சமாளிக்கும் திறன் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அதாவது, தற்போது விற்பனையில் உள்ள எரிபொருள் எஞ்ஜின் கொண்ட ஏஸ்-ஐ போலவே மிக சிறப்பாக செயல்படும் ஓர் வாகனமாகவே ஏஸ் இவி-யையும் டாடா உருவாக்கியிருக்கின்றது. சொல்லப்போனால், ஐசிஇ ஏஸ்-ஐக் காட்டிலும் அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாகவே மின்சார வெர்ஷன் காட்சியளிக்கின்றது.

ஏஸ் வர்த்தக வாகன பிரிவில் மிக சிறப்பான வரவேற்பைப் பெற்றும் டாடா தயாரிப்பாக இருக்கின்றது. இதில், மின்சார வெர்ஷனை நிறுவனம் அறிமுகம் செய்திருப்பது அனைத்து வர்த்தக வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. டாடா ஏஸ் இந்திய வர்த்தக வாகன பிரிவில் 17 ஆண்டுகளுக்கும் அதிகமாக விற்பனையில் உள்ளது.

இந்த நீண்ட நாட்கள் பயணத்திற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக நிறுவனம் ஏஸ் வாகனத்தின் மின்சார வெர்ஷனை உருவாக்கி, அதை வெளியீடு செய்திருக்கும். விரைவில் இவ்வாகனம் விற்பனைக்கு வர இருப்பதனால், தற்போது ஏஸ் இவி-யை விளம்பரப்படுத்தும் முயற்சியில் டாடா மிக தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications