புதிய அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் அறிமுகத்தை உறுதிப்படுத்தியது டாடா!! அறிமுகம் எப்போது?
டாடா அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் வருகையினை உறுதிப்படுத்தும் வகையில் புதியதொரு டீசர் படத்தினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

கடந்த 2021ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸுக்கு சிறப்பான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, 2021 டிசம்பர் மாத விற்பனையில் ஹூண்டாயை முந்தி மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை டாடா மோட்டார்ஸ் பிடித்திருந்தது. இதன் மூலம் அடைந்திருந்த உத்வேகத்தின் மூலமாக 2022ஆம் ஆண்டை அதிரடியாக துவங்கியுள்ளது.

நடப்பு 2022ஆம் ஆண்டிற்காக பல திட்டங்களை டாடா மோட்டார்ஸ் கையில் வைத்துள்ளது. இதில் அட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் அறிமுகமும் ஒன்றாகும். டாடா மோட்டார்ஸின் பிரிமீயம் ரக ஹேட்ச்பேக் காராக விளங்கும் அல்ட்ராஸ் தற்போதைக்கு மாதம் ஒன்றுக்கு சராசரியாக 6,000 யூனிட்கள் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக அறிமுகம் செய்யப்பட்டு வெறும் 20 மாதங்களில் விற்பனையில் 1 லட்சம் என்கிற மைல்கல்லை அல்ட்ராஸ் கடந்துள்ளது. இவ்வாறு வாடிக்கையாளர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்துவரும் காருக்கு அவ்வப்போது அப்டேட்களை வழங்க வேண்டியது தயாரிப்பு நிறுவனத்தின் கடமையாகும். இதன்படி கடந்த 2021ஆம் ஆண்டில் ஐ-டர்போ வேரியண்ட் புதியதாக அல்ட்ராஸுக்கு வழங்கப்பட்டது.

ஆனால் தற்போதுவரையில் ஆட்டோமேட்டிக் தேர்வில் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார் கிடைப்பதில்லை. இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வில் விரைவில் அல்ட்ராஸை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் வருகையினை உறுதிப்படுத்தும் வகையில் டாடா மோட்டார்ஸ் கார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள டீசர் படத்தினை கீழே காணலாம்.

தற்சமயம் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரில் மொத்தம் 3 விதமான என்ஜின் தேர்வுகளை டாடா நிறுவனம் வழங்குகிறது. இதில் ஒன்றான 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் ரெவோடார்க் டர்போ-டீசல் என்ஜின் 89 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 1.2 லிட்டர் ஐ-டர்போ பெட்ரோல் என்ஜின் 108 எச்பி மற்றும் 140 என்எம் டார்க் திறன் வரையில் வழங்கக்கூடியதாக உள்ளது.

இவை அனைத்துடனும் தற்போதைக்கு 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வாக அல்ட்ராஸில் இரட்டை க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுவதினால் இந்த ஹேட்ச்பேக் காரின் எடை 20 கிலோ வரையில் அதிகரிக்கும். புதிய ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வை தவிர்த்து அல்ட்ராஸில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்பட வாய்ப்பில்லை.

அதிகப்பட்சமாக காரின் பின்கதவில் ஆட்டோமேட்டிக் கார் என்பதை குறிக்கும் விதமாக ‘Auto' முத்திரை மட்டும் வழங்கப்படலாம். தற்போதைக்கு அல்ட்ராஸிற்கு 2022 மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20, டொயோட்டா க்ளான்ஸா மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் போட்டியாக உள்ளன. இவை அனைத்திலும் மேனுவல் & ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

அதிலிலும் குறிப்பாக ஐ20 மாடலில் ஹூண்டாய் நிறுவனம் பிரத்யேகமான இண்டெலிஜண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வை வழங்குகிறது. புதிய அல்ட்ராஸ் டிசிடி வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஃபோக்ஸ்வேகன் போலோ 1.0 லி டிஎஸ்ஐ மற்றும் ஹூண்டாய் ஐ20 டர்போ கார்களும் டாடா அல்ட்ராஸிற்கு விற்பனையில் போட்டியாக விளங்கவுள்ளன. இருப்பினும் மற்றவை அனைத்தை காட்டிலும் டாடா அல்ட்ராஸ் பாதுகாப்பான ஹேட்ச்பேக் காராக பெயர் பெற்றுள்ளது.

பொதுவாகவே டாடா மோட்டார்ஸின் கார்கள் பாதுகாப்பானவைகளாக என்சிஏபி மோதல் சோதனைகளில் அங்கரீக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் அல்ட்ராஸிற்கு உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளில், பயணிகளின் பாதுகாப்பில் முழு ஐந்து நட்சத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட் மட்டுமின்றி, ஏகப்பட்ட புதிய வேரியண்ட்களையும் அல்ட்ராஸில் அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு வருகிறதாம்.

இதன்படி அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் வெளிவரவுள்ளது ஏற்கனவே நமக்கு தெரிந்த விஷயம்தான். நடப்பு 2022ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில் வழக்கமான நேச்சுரலி அஸ்பிரேட்டட் என்ஜின் தேர்வு வழங்கப்படவே வாய்ப்புள்ளது. டர்போ என்ஜின் தேர்வு வழங்கப்படாது. ஏனெனில் பொதுவாகவே சிஎன்ஜி கார்களை வாங்குவோர் மைலேஜ் விஷயத்தில் கவனமாக இருப்பர் என்பது டாடா மோட்டார்ஸுக்கு நன்றாகவே தெரியும்.


Click it and Unblock the Notifications








