மாருதி பலேனோவிற்கு போட்டியாக, புதிய நீல நிறத்தில் டாடா அல்ட்ராஸ்!! ஸ்பை வீடியோ வெளியீடு!
புதிய நீல நிறத்தேர்வில் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரை விரைவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள ஸ்பை வீடியோவினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் ஹேட்ச்பேக் கார்கள் மட்டுமின்றி, சற்று விலைமிக்க பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களும் நல்லப்படியாகவே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போதைக்கு நம் நாட்டு சந்தையில் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களாக மாருதி சுஸுகியின் பலேனோ, டாடா மோட்டார்ஸின் அல்ட்ராஸ் மற்றும் ஹூண்டாயின் ஐ20 உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதில், விற்பனை குறைய துவங்கியுள்ளதை அடுத்து பலேனோவிற்கு மிக விரைவில் மாருதி சுஸுகி நிறுவனம் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினை வழங்க உள்ளது. இதனால் பலேனோவின் விற்பனை வரும் மாதங்களில் புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் அதிகளவில், மாதத்திற்கு சராசரியாக 15,000- 20,000 யூனிட்கள் விற்பனையாகக்கூடிய கார்களுள் பலேனோவும் ஒன்றாகும்.

இதனுடன் ஒப்பிடுகையில் டாடா அல்ட்ராஸ் கார்களின் விற்பனை சற்று குறைவுதான். இருந்தாலும், அல்ட்ராஸை தொடர்ந்து புத்துணர்ச்சியானதாக வைத்திருக்க டாடா மோட்டார்ஸ் முயல்கிறது. இந்த முயற்சிகளின் வெளிப்பாடாக, அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காருக்கு விரைவில் புதிய நிறத்தேர்வு வழங்கப்பட உள்ளது. இதன் வருகையினை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள ஸ்பை வீடியோவினை கீழே காணலாம்.
அல்ட்ராஸிற்கு வழங்கப்பட உள்ள இந்த புதிய நிறத்தேர்வு ஒபெல் நீலம் என அழைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். தற்சமயம் டாடா அல்ட்ராஸினை ஹை-ஸ்ட்ரீட் கோல்டு, டவுன்டவுன் சிவப்பு, அர்கட் க்ரே, காஸ்மோ டார்க், ஹார்பர் நீலம் மற்றும் அவென்யூ வெள்ளை என்கிற 6 விதமான நிறத்தேர்வுகளில் வாங்கலாம். இதில் ஹை-ஸ்ட்ரீட் கோல்டு மற்றும் ஹார்பர் நீல நிறத்தேர்வுகள் அல்ட்ராஸின் எக்ஸ்.எம்+ வேரியண்ட்டிற்கு மட்டுமே கொடுக்கப்படுகின்றன.

அதேபோல் காஸ்மோ க்ரே ஆனது அல்ட்ராஸ் டார்க் எடிசனுக்கு வழங்கப்படுகிறது. இந்த புதிய ஒபெல் நீல நிறத்தேர்வில் அல்ட்ராஸின் டிசைன் & ஸ்டைலில் எந்த அப்டேட்டும் கொண்டுவரப்பட்டுள்ளது போல் மேலுள்ள வீடியோவில் தெரியவில்லை. ஆதலால், காரின் என்ஜின் அமைப்பிலும் எந்த மாற்றமும் வழங்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

டாடா அல்ட்ராஸில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மாருதி சுஸுகி பலேனோ & ஹூண்டாய் ஐ20 மட்டுமின்றி, ஹோண்டா ஜாஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ என மற்ற ஹேட்ச்பேக் கார்களும் அல்ட்ராஸிற்கு போட்டியாக விளங்குகின்றன.

புதிய ஒபெல் நீல நிறத்தேர்வை அல்ட்ராஸில் வழங்கும் அதேநேரத்தில் தனது எஸ்யூவி கார்களில் புதிய கஸிரங்கா எடிசனை கொண்டுவரும் பணியிலும் தற்சமயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. இதன்படி, நெக்ஸான், பஞ்ச், ஹெரியர் & சஃபாரி என டாடாவின் எஸ்யூவி கார்கள் புதிய கஸிரங்கா எடிசனை பெறவுள்ளன.

அஸ்ஸாம் தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள காண்டாமிருகம் ஒன்றை முன்னுறுத்தி கொண்டுவரப்படும் இந்த கஸிரங்கா எஸ்யூவி கார்கள் தான் விரைவில் நடைபெறவிருக்கும் 2022 ஐபிஎல் போட்டிகளின்போது மைதானங்களில் நிறுத்தப்பட உள்ளன. ஏனெனில் 2022 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதன்மையான ஸ்பான்சராக டாடா க்ரூப் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

புதிய நீல நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட இந்த அல்ட்ராஸ் காரை போன்று சமீபத்தில், ஹெரியர் & சஃபாரியின் புதிய கஸிரங்கா எடிசன்களும் டீலர்ஷிப் ஷோரூம்களில் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டு இருந்தன. இந்த கஸிரங்கா எஸ்யூவி கார்கள் அனைத்தும் புதிய பழுப்பு -கருப்பு என்கிற ட்யுல்-டோன் பெயிண்ட் தேர்வில் வழங்கப்பட உள்ளன. மேலும், வெளிப்புறத்தில் முன் ஃபெண்டரில் காண்டாமிருகத்தின் உருவ லோகோ கொடுக்கப்பட உள்ளது.

அதேபோல் இவற்றின் உட்புறத்திலும் சூடான காற்றை வெளிப்படுத்தக்கூடிய முன் இருக்கைகள் மற்றும் காண்டாமிருகத்தின் உருவம் பொறிக்கப்பட்ட முன் இருக்கைகளின் தலையணைகள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இவை தவிர்த்து மற்ற இயந்திர & என்ஜின் பாகங்களில் வழக்கமான கார்களில் இருந்து இந்த கஸிரங்கா எடிசன்களில் எந்த வித்தியாசமும் இருக்காது.


Click it and Unblock the Notifications








