ரொம்ப நாள் எதிர்பார்ப்பு நிறைவேற போகுது... மார்ச் 21ம் தேதி தரமான சம்பவத்தை செய்ய போகும் டாடா! என்ன தெரியுமா?
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் மார்ச் 21ம் தேதி தரமான சம்பவத்தை செய்யவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) கார் இந்திய சந்தையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகளுடன் டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு இன்ஜின்களுடனும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து டாடா அல்ட்ராஸ் காரில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. டாடா அல்ட்ராஸ் காரின் டர்போ பெட்ரோல் மாடல் கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் டாடா அல்ட்ராஸ் கார் இன்னமும் ஒரே ஒரு 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வுடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் போட்டி அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இது டாடா அல்ட்ராஸ் காரின் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த குறையை சரி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது தயாராகி விட்டது. ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் காரில், புதிய ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வை வழங்கவுள்ளது.

டாடா அல்ட்ராஸ் காரின் ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் வரும் மார்ச் 21ம் (March 21) தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த கியர் பாக்ஸை 'டிசிஏ' என குறிப்பிடுகிறது. ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் (Dual Clutch Automatic) என்பதன் சுருக்கம்தான் 'டிசிஏ' (DCA) ஆகும்.

ஆனால் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தேர்வுடன் மட்டுமே, இந்த ட்யூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

மறுபக்கம் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகளுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸே தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியான வரும் மார்ச் 21ம் தேதிதான் நமக்கு தெரியவரும்.

டாடா அல்ட்ராஸ் காரின் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் இந்த காரின் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வகையில் 'ட்யூனிங்' செய்யப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸ் ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடலுக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. அதே நேரத்தில் முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு கார்களை டெலிவரி செய்யும் பணிகள் நடப்பு மார்ச் மாத இறுதியிலேயே தொடங்கி விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடலின் விலை, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளான மார்ச் 21ம் தேதிதான் அறிவிக்கப்படும். இதற்கிடையே அல்ட்ராஸ் காரின் ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வை அறிமுகம் செய்வதுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நின்று விடப்போவதில்லை.

இதற்கு அடுத்தபடியாக அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பார்ப்பு, நடப்பாண்டிலேயே நிறைவேறி விடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

நெக்ஸான் எலெக்ட்ரிக் கார், டிகோர் எலெக்ட்ரிக் கார் ஆகியவற்றுக்கு கிடைத்துள்ள பெரும் வரவேற்பால், இந்தியாவின் நம்பர்-1 எலெக்ட்ரிக் கார் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் தற்போது திகழ்ந்து வருகிறது. எலெக்ட்ரிக் கார் சந்தையில் தனது ஆதிக்கத்தை மேலும் விரிவுபடுத்தி கொள்ளும் வகையில், அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் நடப்பாண்டிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தெரிகிறது.

இதற்கிடையே பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி பலேனோ மற்றும் டொயோட்டா க்ளான்சா கார்களின் 2022 மாடல்கள் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதன் காரணமாக அதிகரித்துள்ள போட்டியை, அல்ட்ராஸ் ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் மூலம் டாடா மோட்டார்ஸ் சமாளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








