டாடாவிற்கு வந்த 'பல்க் ஆர்டர்'... 1,300 வாகனங்களை ஒரே நிறுவனம் வாங்க போகுது... எந்த நிறுவனம்னு தெரியுமா?
1,300 வாகனங்களுக்கான மிகப்பெரிய ஆர்டர் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் திகழ்ந்து வருகிறது. கார் போன்ற பயணிகள் வாகனங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்திய சந்தையில் கார் விற்பனையில், மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக டாடா மோட்டார்ஸ் 3வது இடத்தில் இருந்து வருகிறது.

பயணிகள் வாகனங்கள் தவிர, லாரி மற்றும் பஸ் போன்ற வர்த்தக வாகனங்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. வர்த்தக வாகனங்கள் என எடுத்து கொண்டால், இந்தியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் திகழ்கிறது. இந்த சூழலில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு தற்போது மிகப்பெரிய 'ஆர்டர்' ஒன்று கிடைத்துள்ளது.

விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் (VRL Logistics) நிறுவனம் தற்போது 1,300 வர்த்தக வாகனங்களுக்கு, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்துள்ளது. ஒரே நிறுவனத்திடம் இருந்து, 1,300 என்ற மிகப்பெரிய எண்ணிக்கையில் வர்த்தக வாகனங்களுக்கு ஆர்டர் கிடைத்துள்ளதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மகிழ்ச்சியடைந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களுக்கும், இலகு ரக வர்த்தக வாகனங்களுக்கும், விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஆர்டர் கொடுத்துள்ளது. இந்தியா முழுவதும் விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையிலான வர்த்தக வாகனங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பான ஓட்டுதல் திறன், அதிக மைலேஜ் மற்றும் குறைவான பராமரிப்பு செலவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வாகனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகன விற்பனை பிரிவின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துணை தலைவர் ராஜேஷ் கவுல் கூறுகையில், ''விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 1,300 வர்த்தக வாகனங்களுக்கான மதிப்பு வாய்ந்த ஆர்டரை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

அவர்களின் (விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ்) செயல்பாடுகளுக்கு, எங்கள் வாகனங்கள் நல்ல மதிப்பை வழங்கும் என உறுதியாக கூறுகிறேன். அவர்களின் செயல்பாடுகளுக்கு எங்களது சிறந்த ஆதரவை வழங்குவோம்'' என்றார். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகனங்களை பொறுத்தவரையில் தற்போது எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி கார்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஹேட்ச்பேக் மற்றும் டிகோர் செடான் ஆகிய கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்கள் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கர்வ் என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி கூபே (Tata Curvv Electric SUV Coupe) கான்செப்ட்டையும் வெகு சமீபத்தில் காட்சிப்படுத்தியுள்ளது.

இந்த காரின் தயாரிப்பு நிலை வெர்ஷன் வரும் 2024ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக நடப்பு ஏப்ரல் மாதத்திலேயே, ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

அதை தொடர்ந்து ஏற்கனவே விற்பனையில் உள்ள அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் ஐசி இன்ஜின் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி, இந்திய சந்தையில் விற்பனையில் நம்பர்-1 ஆக இருந்து வருவதற்கு அதன் குறைவான விலையே முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை காட்டிலும் குறைவான விலையில் அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் பிரீமியம் ஹேட்ச்பேக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியுள்ளது. அல்ட்ராஸ் காரின் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. அதை தொடர்ந்து அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications








