ஒரே நாளில் 101 டாடா எலெக்ட்ரிக் கார்கள் டெலிவரி... எங்கேயோ இல்லைங்க நம்ம சென்னையில்தான் இது அரங்கேறியிருக்கு!
டாடா (Tata) கார் விற்பனையாளர் ஒருவர் ஒரே நாளில் 101 டாடா எலெக்ட்ரிக் கார்களை டெலிவரிக் கொடுத்திருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாட்டின் ஜாம்பவான் வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இந்தியாவில் நெக்ஸான் இவி (Nexon EV) மற்றும் டிகோர் இவி (Tigor EV) என இருவிதமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவ்விரு எலெக்ட்ரிக் கார்களுக்கும் நாட்டில் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிற மின்சார கார்களைக் காட்டிலும் இவை இரண்டும் சற்று குறைந்த விலைக் கொண்டவை ஆகும்.

நெக்ஸான் இவி ரூ. 14.54 லட்சம் ஆரம்ப விலையிலும், டிகோர் இவி ரூ. 12.24 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இரு கார்களிலும் அதிக சிறப்பு வசதிகளை டாடா வாரி வழங்கியிருக்கின்றது. அத்துடன், பாதுகாப்பு திறன்மிக்க வாகனமாகவும் அவைக் காட்சியளிக்கின்றன. இதுபோன்று பல்வேறு காரணங்களால் மக்கள் மத்தியில் புகழ்மிக்க மின்சார கார்களாக நெக்ஸான் இவி மற்றும் டிகோர் இவி மாறியிருக்கின்றது.

இந்த நிலையில், இந்தியாவில் டாடாவின் இரு மின்சார கார்களுக்கும் மிக சிறப்பான டிமாண்டை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் நிகழ்வு நாட்டில் அரங்கேறியிருக்கின்றது. ஒரே நாள், ஒரே நேரத்தில் 101 டாடா எலெக்ட்ரிக் கார்கள் டெலிவரிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தரமான சம்பவம் நம்ம சென்னையில் அரங்கேறியிருப்பது கூடுதல் ஆச்சரியமளிக்கும் தகவலாக அமைந்திருக்கின்றது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை டாடா மோட்டார்ஸும் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது. வேறு எந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களும் ஒரே நேரத்தில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரி கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

70 நெக்ஸான் இவி மற்றும் 31 டிகோர் இவி ஆகிய மின்சார கார்களே சென்னை டீலர் வாயிலாக டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் இதுபோன்று அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி கொடுப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் 712 நெக்ஸான், டிகோர் இவி கார்களை மஹாராஷ்டிரா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் டெலிவரிக் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்தே தற்போது சென்னையில் இந்த தரமான சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இதுபோன்ற மிக சூப்பரான விற்பனை வளர்ச்சியின் காரணமாக இந்தியாவின் ஒட்டுமொத்த மின் வாகன சந்தையில் 85 சதவீத பங்கை டாடா மோட்டார்ஸ் கை பற்றியிருக்கின்றது.

சென்ற மாதம்கூட டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகபட்சமாக 3,357 யூனிட் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைச் செய்திருக்கின்றது. இதற்கு முன்னதாக இந்தளவு அதிக எண்ணிக்கையில் நிறுவனம் எலெக்ட்ரிக் காரை விற்பனைச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர் வளர்ச்சியே இதற்கு காரணம் ஆகும். இதேபோல், சென்ற ஆண்டு விற்பனையிலும்கூட நிறுவனம் மிக சிறப்பான விற்பனை வளர்ச்சியைப் பெற்றது. 19,106 யூனிட்டுகள் வரை சென்ற ஆண்டு விற்பனையாகிருக்கின்றன.

டாடா நிறுவன நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை அப்டேட் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. தற்போதைய நெக்ஸான் இவியில் 30.2 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதைக் காட்டிலும் கூடுதல் ரேஞ்ஜ் தரும் வாகனமாகவே நெக்ஸான் இவி புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.

இதேபோல் மிக சிறந்த எலெக்ட்ரிக் காராக டிகோர் இவி இருக்கின்றது. இக்காரில் 26kWh IP 67 தர பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 306 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இக்காரில் இடம் பெற்றிருக்கும் மின் மோட்டார் 74 பிஎச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. டாடா நிறுவனம் வரும் ஏப்ரல் 29ம் தேதி அன்று ஓர் புதுமுக எலெக்ட்ரிக் காரை உலகளவில் வெளியீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








