போட்டி நிறுவனங்களை குலை நடுங்க வைத்த டாடா... நம்ம பேச்சு மட்டும்தான் சைலென்டா இருக்கும்... ஆனா அடி சரவெடி!
இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், நடப்பு 2022ம் ஆண்டில், அரை மில்லியன் கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்து அசத்தியுள்ளது. அரை மில்லியன் என்பது, 5 லட்சம் கார்கள் ஆகும். நடப்பு டிசம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களிலேயே, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த மைல்கல்லை கடந்து விட்டது.
2022ம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் 11 நாட்கள் இருக்கின்றன. எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2022ம் ஆண்டின் வருடாந்திர கார் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக 5.25 லட்சம் கார்கள் விற்பனை என்ற சாதனை எண்ணிக்கையுடன், நடப்பு 2022ம் ஆண்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிறைவு செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையிலேயே மிகவும் பிரம்மாண்டமான எண்ணிக்கைதான்.

அத்துடன் கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார் விற்பனையில் சுமார் 59 சதவீத வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த 2021ம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெறும் 3.31 லட்சம் கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் நடப்பு 2022ம் ஆண்டு, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த வளர்ச்சியின் மூலம் ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் 2வது இடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) முதலிடத்தில் உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை விட ஹூண்டாய் நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை ஒரு ஆண்டுக்கு 30 ஆயிரம் - 40 ஆயிரம் கார்கள் மட்டுமே அதிகமாக உள்ளது.
ஏற்கனவே நடப்பு 2022 மற்றும் கடந்த 2021ம் ஆண்டின் ஒரு சில மாதங்களில், ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு 2 எஸ்யூவி கார்கள்தான் முக்கியமான காரணமாக அமைந்துள்ளன. அவை டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) ஆகியவை ஆகும்.
இதில், டாடா நெக்ஸான் காரானது, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அதே நேரத்தில் டாடா பன்ச் காரானது, மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. இதில், டாடா நெக்ஸான் காரின் ஆரம்ப விலை வேரியண்ட்டின் விலை 7.70 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 14.18 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். அதே நேரத்தில் டாடா பன்ச் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 6 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 9.54 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவையும் எக்ஸ் ஷோரூம் விலைதான்.
டாடா நெக்ஸான் காரின், எலெக்ட்ரிக் வெர்ஷன் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பன்ச் காரில் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வெர்ஷன் இல்லை. எனினும் 2023ம் ஆண்டில் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அல்ட்ராஸ் (Altroz) காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இதன் மூலம் எலெக்ட்ரிக் கார் சந்தையில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த கார் விற்பனையிலும் போட்டி நிறுவனங்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே இந்த எலெக்ட்ரிக் கார்களின் அறிமுகத்துடன், ஏற்கனவே விற்பனையில் உள்ள ஒரு சில கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களையும், இந்திய சந்தையில் வரும் 2023ம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிரடி திட்டங்களை வகுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








