கெத்து காட்டும் டாடா... ஒரே நாளில் இத்தனை எலெக்ட்ரிக் கார்கள் டெலிவரியா? எவ்ளோனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரே நாளில் 712 எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரே நாளில் 712 எலெக்ட்ரிக் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது. மஹாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களில், இந்த எலெக்ட்ரிக் கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமையன்று (ஏப்ரல் 2), 712 எலெக்ட்ரிக் கார்கள் டெலிவரி செய்யப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார் டெலிவரியில் இது ஒரு சாதனையாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த சனிக்கிழமையன்று, 564 நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களையும், 148 டிகோர் எலெக்ட்ரிக் கார்களையும் டெலிவரி செய்து அசத்தியுள்ளது. இதில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 312 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும்.

இது அராய் சான்று வழங்கிய ரேஞ்ச் ஆகும். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில், 30.2 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மறுபக்கம் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 306 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும். இந்த எலெக்ட்ரிக் காரில் 26 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போதைய நிலையில் இந்த 2 எலெக்ட்ரிக் கார்களும்தான் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. இதுதவிர எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் எலெக்ட்ரிக் கார் என எடுத்து கொண்டால், இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார் என ஏற்கனவே 2 வெற்றிகரமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து விட்டது.

அத்துடன் வரும் காலங்களில் நிறைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே எதிர்காலத்திலும் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமே முழுமையாக ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் வரும் ஏப்ரல் 6ம் தேதி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அது என்ன கார்? என்பதை தெரிந்து கொள்வதற்கு, வாடிக்கையாளர்கள் பலரும் ஆர்வமாக உள்ளனர். இதன் டீசர் ஏற்கனவே வெளியாகி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிற செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமல்லாது, சிஎன்ஜி கார்களிலும் தற்போது கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மற்றும் டிகோர் கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பது இதற்கு ஒரு உதாரணம் ஆகும். கடந்த ஜனவரி மாதம்தான் இந்த 2 புதிய கார்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இதன் மூலம் ஐசி இன்ஜின், எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி என 3 வடிவங்களில் கிடைக்கும் கார் என்ற பெருமையை டாடா டிகோர் பெற்றுள்ளது. இதன் காரணமாக டாடா டிகோர் காரின் விற்பனை தற்போது உயர்ந்து கொண்டே வருகிறது. டாடா டிகோர் காரானது, செடான் ரகத்தை சேர்ந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகவும் டிகோர் திகழ்கிறது.

புதியதாக எலெக்ட்ரிக் கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் அனைவரின் கண்களும் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மீதுதான் குவிந்துள்ளன. வரும் ஏப்ரல் 6ம் தேதி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் என்ன செய்ய போகிறது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்தான் இதற்கு முக்கியமான காரணம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கியமான போட்டியாளரும், இந்தியாவை சேர்ந்ததுமான மஹிந்திரா நிறுவனமும் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்களில்தான் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








