பின்னி பெடலெடுக்கும் டாடா எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை! இந்த விலையில் கிடைத்தால் யாருக்குதான் வாங்க ஆசை வராது
டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் மிக சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் எலெக்ட்ரிக் வாகனங்களின் (எலெக்ட்ரிக் கார்கள்) அதிகபட்ச விற்பனை எண்ணிக்கையை கடந்த ஜனவரி மாதம் பதிவு செய்து அசத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2,892 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இது 462.65 சதவீத வளர்ச்சியாகும். ஏனெனில் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெறும் 514 எலெக்ட்ரிக் கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவன எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருவதை இதன் மூலமாக புரிந்து கொள்ளலாம்.

தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெறும் இரண்டே இரண்டு எலெக்ட்ரிக் கார்களை மட்டும்தான் விற்பனை செய்து வருகிறது. அவை நெக்ஸான் எலெக்ட்ரிக் மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார்கள் ஆகும். இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் இன்னும் மிகப்பெரிய அளவில் பிரபலமாகவில்லை. தற்போதுதான் மெல்ல மெல்ல பிரபலமடைந்து வருகின்றன.

அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டே இரண்டு எலெக்ட்ரிக் கார்களை மட்டும்தான் விற்பனை செய்து வருகிறது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு பார்த்தால், கடந்த ஜனவரி மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ள எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை எண்ணிக்கை மிக பிரம்மாண்டமானது என்பதில் சந்தேகமில்லை.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார்கள் ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைப்பதும், வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை போலவே நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றவையாக இருப்பதும்தான் முக்கியமான காரணங்கள்.

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் தன்வசம் வைத்துள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 14.29 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 16.90 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில், 30.2 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது, டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் மிகவும் குறைவான விலையில் கிடைக்கிறது. டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 11.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.14 லட்ச ரூபாயாக உள்ளது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான் என்பது குறிப்பிடத்தக்கது. டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் 26 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த 2 எலெக்ட்ரிக் கார்களையும் தவிர்த்து விட்டு பார்த்தால் இன்னும் 2 எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளன.

ஆனால் இந்த 2 எலெக்ட்ரிக் கார்களுடன் ஒப்பிடும்போது அவை மிகவும் விலை உயர்ந்தவையாகும். எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகியவற்றை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். இதுதவிர ஒரு சில சொகுசு எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களும் இந்திய சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றின் விலை மிக மிக அதிகம்.

எனவே டாடா நெக்ஸான் மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார்கள் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவையாக உள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதற்கு அடுத்தபடியாக அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. வழக்கமான ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட நெக்ஸான் மற்றும் டிகோர் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள்தான் தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதேபாணியில் ஏற்கனவே விற்பனையில் உள்ள அல்ட்ராஸ் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் நடப்பாண்டு இறுதிக்குள்ளாகவோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








