டாடா நெக்ஸானில் புது ட்ரிம் விற்பனைக்கு அறிமுகம்! இதன் விலை எவ்வளவு? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கு தெரியுமா?
விற்பனையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் டாடா காராக நெக்ஸான் எஸ்யூவி கார் உள்ளது. இந்த கார் மாடலிலேயே புதிய தேர்வு ஒன்றை டாடா மோட்டார்ஸ் தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தேர்வு என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் மற்றும் விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் நெக்ஸான் (Nexon) கார் மாடலில் புதிய ட்ரிம்மை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நெக்ஸான் எக்ஸ்எம் பிளஸ் (எஸ்) (Nexon XM+ S) எனும் ட்ரிம்மையே நிறுவனம் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ரூ. 9.75 தொடங்கி ரூ. 11.70 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

டாடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக நெக்ஸான் இருக்கின்றது. இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். ஒவ்வொரு மாதமும் பத்தாயிரத்திற்கும் அதிகமான யூனிட் நெக்ஸான் கார்கள் இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. கடந்த ஜூன் மாதம் இந்த கார் 14,295 யூனிட்டுகள் விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இதே கார் கடந்த 2021ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் வெறும் 8,033 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது நெக்ஸான் காருக்கு டிமாண்ட் பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுவதை இந்த எண்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. இந்த நிலையிலேயே காரின் பக்கம் கூடுதல் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு புதிய எக்ஸ்எம் பிளஸ் (எஸ்) ட்ரிம்மை டாடா அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

இந்த ட்ரிம்மை பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் பெற்றுக் கொள்ள முடியும். இத்துடன், மேனுவல் மற்றும் தானியங்கி ஆகிய இருவிதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எக்ஸ்எம் (எஸ்) ட்ரிம்மைக் காட்டிலும் கூடுதல் சிறப்பு அம்சங்களைக் கொண்டதாகவும் புதிய ட்ரிம் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

நெக்ஸான் எக்ஸ்எம் பிளஸ் (எஸ்) ட்ரிம்மில் 7.0 அங்குல தொடுதிரை ஹர்மேன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது. இத்துடன், கூல்டு குளோவ் பாக்ஸ், பின் பக்கத்திற்கு ஏசி வெண்டுகள், 12 வோல்ட் சார்ஜர் சாக்கெட் மற்றும் சுறா துடுப்பு அமைப்புக் கொண்ட ஆன்டென்னா ஆகிய அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

டாடா நெக்ஸான் - எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்எம் (எஸ்), எக்ஸ்எம் பிளஸ், எக்ஸ்இசட், எக்ஸ்இசட் பிளஸ் (எச்எஸ்), எக்ஸ்இசட் பிளஸ் (ஓ) மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் (பி) ஆகிய ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைத்து வந்தது. இவற்றிலேயே புதியதாகக எக்ஸ்எம் பிளஸ் (எஸ்) ட்ரிம் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரிம்மை இணைத்த கையோடு எக்ஸ்இசட் ட்ரிம்மை டாடா மோட்டார்ஸ் விற்பனையில் இருந்து அகற்றியிருக்கின்றது. ஆமாங்க, புதிய தேர்வின் வருகைக்கு இடம் கொடுக்கும் விதமாக எக்ஸ்இசட் ட்ரிம் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டிருக்கின்றது.

டாடா நிறுவனம் சமீபத்தில் அதன் அனைத்து கார்களின் விலையையும் உயர்த்துவதாக தகவல் வெளியிட்டிருந்தது. வாகன உற்பத்தி பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதைக் காரணம் காட்டி விலையுயர்வு நடவடிக்கை அது மேற்கொண்டது. இந்த நடவடிக்கையால் டாடா நெக்ஸான் காரின் விலை ரூ. 15 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.

டாடா நெக்ஸானுக்கு சமீப சில காலமாகவே வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்கு இக்காரில் டாடா வழங்கும் சிறப்பு வசதிகள் ஓர் காரணமாக இருந்தாலும், அது 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற வாகனம் என்பதே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது.

ஆமாங்க, குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இக்கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்று நாட்டின் அதீத பாதுகாப்பு திறன் கொண்ட எஸ்யூவி என்கிற மகுடத்தைச் சூடியது. இந்த தருணம் டாடா மோட்டார்சுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்தது. இதனைத்தொடர்ந்து, போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்குமளவிற்கு இந்தியாவில் நெக்ஸான் விற்பனையைப் பெற தொடங்கியது.


Click it and Unblock the Notifications








