ஏப்ரல் மாதம் டாடா கார்களின் விற்பனை உயர்வு... இவ்ளோ பெரிய வளர்ச்சியா?
நடப்பாண்டு ஏப்ரல் மாதம் டாடா கார்களின் விற்பனை உயர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் ஒட்டுமொத்தமாக 71,467 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 39,401 கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இது 81 சதவீத வளர்ச்சியாகும். இவ்வளவு பெரிய வளர்ச்சியை பதிவு செய்திருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான்.

இந்திய சந்தையை மட்டும் என எடுத்து கொண்டால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் உள்நாட்டு சந்தையில் 41,587 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 25,095 கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 16,492 கார்களை அதிகமாக விற்பனை செய்துள்ளது. இது 65.72 சதவீத வளர்ச்சியாகும்.

அதே நேரத்தில் பயணிகள் எலெக்ட்ரிக் வாகனங்கள் என எடுத்து கொண்டால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 2,322 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 581 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 300 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலில் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. டாடா மோட்டார்ஸ் என்ற அளவில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்தமாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலிலும் கூட டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்தான் தொடர்ந்து முன்னிலை வகித்து கொண்டுள்ளது. வரும் ஆண்டுகளில் டாடா விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை அதிகரிக்கவுள்ளது.

உதாரணத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் கர்வ் மற்றும் அவின்யா எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்களை காட்சிப்படுத்தியது. இந்த எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்கள் அடுத்த சில ஆண்டுகளில் இறுதி வடிவம் பெற்று விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக நடப்பு மே மாதம் 11ம் தேதி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் லாங்-ரேஞ்ச் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் 2022 மாடலானது, 40 kWh லித்தியம்-அயான் பேட்டரியை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலில் இதை காட்டிலும் சிறிய பேட்டரி தொகுப்புதான் வழங்கப்பட்டு வருகிறது. 2022 மாடலில் வழங்கப்படும் பெரிய பேட்டரி தொகுப்பை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வமான தகவல்கள் வரும் மே 11ம் தேதி வெளியிடப்படும். இதை தொடர்ந்து டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் 2022 மாடலும், அல்ட்ராஸ் மற்றும் பன்ச் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை சீராக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நிறுவனத்தை போல், மஹிந்திரா நிறுவனமும் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் வரும் மாதங்களில் தீவிர கவனம் செலுத்தவுள்ளது. தற்போதைய நிலையில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் எலெக்ட்ரிக் கார்கள் எதுவென்றால், அவை 2022 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் 2022 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்கள்தான். புதிய மாடல்களின் வருகைக்கு பின் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications







