'புதுமை' என்கிற பெயரில் டாடாவின் புதிய எலெக்ட்ரிக் கார்... உண்மையிலேயே காருக்கு ஏற்ற பெயருங்க இது!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அவின்யா எனும் எலெக்ட்ரிக் காரை உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது. இக்காரின் சிறப்பு வசதிகள் குறித்த முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் மின்சார வாகன விற்பனையில் வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கின்றது என கூறலாம். நிறுவனத்தின் நெக்ஸான் இவி மற்றும் டிகோர் இவி ஆகிய இரு எலெக்ட்ரிக் கார்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த மின்சார கார்களை தனிநபர் பயணிகள் வாகன பிரிவில் டாடா விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

இவ்விரு எலெக்ட்ரிக் கார்களின் வரிசையில் இன்னும் சில மின்சார கார் மாடல்களை டாடா மோட்டார்ஸ் சேர்க்க இருக்கின்றது. ஜென்2 தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் அல்ட்ராஸ் இவி எலெக்ட்ரிக் காரை அடுத்ததாக விற்பனைக்கு வழங்க இருக்கின்றது, டாடா. இதுமட்டுமின்றி இன்னும் சில மின்சார கார் மாடல்களையும் டாடா விரைவில் அறிமுகப்படுத்த இருக்கின்றது.

அந்தவகையில், தனது எதிர்கால வாகன மாடல் ஒன்றை டாடா மோட்டார்ஸ் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. அவின்யா (AVINYA Concept) எனும் எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலையே நிறுவனம் இன்று (ஏப்ரல் 29) உலகளவில் வெளியீடு செய்துள்ளது. அவின்யா என்பது சமஸ்கிருத வார்த்தை ஆகும். இதற்கு தமிழில் புதுமை என்பது பொருள் ஆகும்.

பெயருக்கு ஏற்பவே புதுமையான தோற்றம் மற்றும் அம்சங்களுடன் அவின்யா கான்செப்ட் உருவாக்கப்பட்டுள்ளது. டாடா நடப்பாண்டில் வெளியீடு செய்யும் இரண்டாவது கான்செப்ட் மாடல் இதுவாகும். சமீபத்தில் கர்வ் எனும் எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலை அது அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து மேலும் ஓர் புதிய மாடலாக அவின்யவை புதிய டாடா லோகோவுடன் வெளியீடு செய்திருக்கின்றது. டாடா நிறுவனம் இவ்வாறு தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல்களை வெளியீடு செய்து வருவது, நிறுவனம் விரைவில் மின் வாகன உற்பத்தியை முழுமையாக கையிலெடுக்க இருப்பதை தெரியப்படுத்துகின்றது.

டாடா மோட்டார்ஸ் அவின்யா எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலை ஜென்3 ஆர்கிடெக்சரில் உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், விரைவில் அறிமுகத்தைக் காணவிருக்கும் அல்ட்ராஸ் இவி-யைக் காட்டிலும் அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அதிக திறனை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார்கள் இடம் பெற்றிருக்கும் என்பது தெரிகின்றது.

இதுமட்டுமின்றி தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி இக்கார் ஓர் முழுமையான சார்ஜில் 500 கிமீ தூரம் வரை ரேஞ்ஜ் தரும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், அவின்யா முற்றிலும் அட்டகாசமான மற்றும் ப்யூர் எலெக்ட்ரிக் காராக உருவாகியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

டாடா மோட்டார்ஸ் புதிய எலெக்ட்ரிக் காரை 2025ம் ஆண்டிற்குள் உற்பத்தி நிலைக்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இதைச் சாலையில் காணும் தூரம் வெகு தொலைவில் இல்லை என்பது தெளிவாக தெரிகின்றது. மேலும், இதனை இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்குக் கொண்டு செல்ல இருக்கின்றது, டாடா.

இதன் வெளிப்பாடாக அவின்யாவை தற்போது உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது. மேலும், சர்வதேச சந்தைக்கு ஏற்ப காரை வடிவமைத்திருக்கின்றது. இக்காரின் உட்புறத்தில் எஸ்யூவி கார்களுக்கு இணையான தொழில்நுட்பம் மற்றும் பிரீமியம் வசதிகளும், எம்பிவி கார்களுக்கான இணையான இட வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

அவின்யாவின் 4.3 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதை வைத்தே கூறிவிடலாம், இக்கார் மிக தாராளமான இடவசதியை கொண்டிருக்கும் என்பதனை. இதுமட்டுமின்றி அவின்யா எல்இடி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. முகப்பு பகுதியில் நீளமான வடிவத்தில் எல்இடி லைட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுவே டாடாவின் 'டி' லோகோவாக பிரதிபலிக்கின்றது. இதற்கு கீழே செதுக்கியதைப் போன்று பம்பர் பெரிய அளவில் இடம் பெற்றிருக்கின்றது. இவை அனைத்தும் டாடா அவின்யாவிற்கு வேற லெவல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்குகின்றன. மேலும், காரில் சுலபமாக ஏறி-இறங்குவதற்கு ஏதுவாக ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் இடம் பெறுவதைப் போன்ற கதவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இக்கதவுகள் கட்டி அணைக்க கைகளை விரிப்பதைப் போல் திறக்கும். முன் பக்கம், பக்கவாட்டு பகுதியைப் போலவே அவின்யாவின் பின் பகுதியும் அதிக கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது. முகப்பு பகுதியில் இருப்பதைப் போலவே பின் பக்கத்திலும் மின் விளக்கினாலான 'டி' லோகோ பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இது சிவப்பு நிறத்தில் எரியும்.

காரின் வெளிப்புறங்களே இவ்வளவு சிறப்பாக இருக்கின்றதே. அப்படினா உட்புறம் எப்படி இருக்கும்?, என கேட்கிறீர்களா., உண்மையில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் அது இருக்கின்றது. வழக்கமான கார்களைப் போல் இதன் உட்புறம் இல்லை. அதாவது, அதிக திரைகளை அவின்யாவின் டேஷ்போர்டில் காண முடியவில்லை.

மாறாக, காரின் ஸ்டியரிங் வீலில் ஓர் திரையும், கே டிரைவர் பயணிக்கான ஓர் திரை இடது பக்கத்திலும், டிரைவர் பக்கத்தில் ஓர் திரையும் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, பின்னிருக்கையாளர்களுக்கென தனி தனி திரைகள் இருக்கைள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், சவுண்ட் பார் ரக ஸ்பீக்கர்கள் அனைத்து திரைக்கும் தனிதனியாகவும் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வெளிப்புறத்தக் காண உதவும் கண்ணாடிகளுக்கு பதிலாக கேமிராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை டிரைவரின் கவனத்தை திசை திருப்பாமல் வெளிப்புறத்தில் நடக்கும் அனைத்தையும் காருக்குள் இருக்கும் திரையின் வாயிலாகவே காண்பித்துக் கொடுக்கும். இத்தகைய சூப்பரான வசதிகளுடனேயே அவின்யா கான்செப்ட் எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் வெளியீடு எப்போது இக்கார் விற்பனைக்கு வருமோ என்கிற எண்ணத்தை இந்தியர்கள் மத்தியில் தூண்டியிருக்கின்றது. குறிப்பாக மின்சார கார் பிரியர்கள் மற்றும் டாடா கார் பிரியர்கள் மத்தியில் சொல்லிலடங்கா ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
குறிப்பு: கடைசி ஐந்து படங்கள் சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்ட டாடா கர்வ் கான்செப்ட் மாடலின் படங்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








