இப்படி ஒரு கார் ஷோரூமை அவ்ளோ ஈஸியா எங்கயும் பாக்க முடியாது... டாடா நிறுவனத்திற்கு குவியும் பாராட்டு!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதுமையான கார் ஷோரூம் ஒன்றை திறந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வெங்கட்ரமணா மோட்டார்ஸ் (Venkataramana Motors) நிறுவனத்துடன் இணைந்து, தென் இந்தியாவில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டும் பணியாற்ற கூடிய தனது முதல் பயணிகள் வாகன ஷோரூமை, அதாவது கார் ஷோரூமை, டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் திறந்துள்ளது. ஐதராபாத் நகரில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இந்த பெண்கள் கார் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த கார் ஷோரூமில் 20 பெண்கள் பணியாற்றுகிறார்கள். விற்பனை, விற்பனைக்கு பிந்தைய சேவைகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய அனைத்து அம்சங்களுக்கும் இவர்களே பொறுப்பு. எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய கார் ஷோரூம் தற்போது அனைவருடைய கவனத்தையும் கவர்ந்துள்ளது.

5,000 சதுர அடி பரப்பளவில் இந்த புதிய கார் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார்களை இந்த ஷோரூம் மூலமாக வாங்கி கொள்ளலாம். இந்த புதிய ஷோரூம் தொடர்பாக டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன நிறுவனத்தின் விற்பனை, சந்தைப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் நலன் பிரிவின் துணை தலைவரான ராஜன் ஆம்பா பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''முழுக்க முழுக்க பெண்களே பணியாற்ற கூடிய தென் இந்தியாவின் முதல் பயணிகள் வாகன ஷோரூமிற்காக வெங்கட்ரமணா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைத்ததில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. எங்களது பெண் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்து கொண்டே வருகிறது.

பெண் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மட்டும் 30 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் எங்களது பெண் வாடிக்கையாளர்களின் சராசரி வயது 37ல் இருந்து 34ஆக குறைந்துள்ளது. இது இளம் வயது பெண்கள் கார் வாங்க அதிகம் முன்வருவதை எடுத்து காட்டுகிறது'' என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''ஐதராபாத் எங்களது முக்கியமான சந்தைகளில் ஒன்று. ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களும் எங்களின் வளர்ச்சி யுக்திகளுக்கு மிகவும் முக்கியமானவை'' என்றார். முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணியாற்ற கூடிய கார் ஷோரூமை திறந்ததற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும், வெங்கட்ரமணா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் டியாகோ, டிகோர், பன்ச், அல்ட்ராஸ், நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், டிகோர் மற்றும் நெக்ஸான் ஆகிய 2 கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது.

இந்த முதல் இடத்தை தக்க வைத்து கொள்வதற்காக வரும் காலங்களில் இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து வெளிவரவுள்ள எலெக்ட்ரிக் கார்களில், அல்ட்ராஸ் மற்றும் பன்ச் ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதில், அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அனேகமாக நடப்பு 2022ம் ஆண்டின் இறுதிக்கு உள்ளாகவோ அல்லது அடுத்த 2023ம் ஆண்டின் தொடக்கத்திலோ டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இதை தொடர்ந்து பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கியமான போட்டி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா நிறுவனமும் தற்போது எலெக்ட்ரிக் கார் சந்தையில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறது.

எனவே இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மஹிந்திரா நிறுவனம் வலுவான போட்டியை அளிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த போட்டியை சமாளிக்கும் வகையிலும், எலெக்ட்ரிக் கார் சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி கொள்வதற்காகவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிறைய திட்டங்களை கைவசம் வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications