புதிய ராயல் நீல நிறத்தில் டாடா நெக்ஸான்!! கூடுதலாக பல புதிய தொழிற்நுட்ப அம்சங்கள்!
புதிய ராயல் நீல நிறத்தில் டாடா நெக்ஸான் (Tata Nexon) கார் ஒன்று டீலர்ஷிப் ஷோரூமில் காட்சி தந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா மோட்டார்ஸின் சிறந்த விற்பனை மாடல்களுள் நெக்ஸானும் ஒன்று என சொல்லலாம். ஏனெனில் போட்டிமிகுந்த சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் பிரிவில் டாடா நெக்ஸான் மாடல் நிலைநிறுத்தப்படுகிறது. இதன் தயாரிப்பில் வெற்றிக்கரமாக 3 லட்சம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் கட்ந்த ஆண்டு அறிவித்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

அதனை தொடர்ந்து தற்போது சந்தையில் நெக்ஸான் சப்-காம்ப்கெட் எஸ்யூவி காரின் வரிசை பலப்படுத்தப்படுகிறது. புதிய நீல நிற பெயிண்ட் தேர்வு மட்டுமின்றி, நெக்ஸானுக்கு புதியதாக 4 வேரியண்ட்களும் வழங்கப்பட்டுள்ளன. எக்ஸ்.இசட்+ (பி), எக்ஸ்.இசட்.ஏ+ (பி), எக்ஸ்.இசட்+ (எச்.எஸ்) மற்றும் எக்ஸ்.இசட்.ஏ+ (எச்.எஸ்) என்கிற பெயர்களில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய 4 வேரியண்ட்களில் 2 மேனுவல் & 2 ஆட்டோமேட்டிக் வெர்சன்கள் உள்ளன.

கூடுதல் ஆக்ஸஸரீகளுடன் கொண்டுவரப்படும் இவை நான்கும் நெக்ஸானின் தற்போதைய டாப் வேரியண்ட்டான எக்ஸ்.இசட்+(ஒ) -விற்கும் மேலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதாவது தற்போதைய நெக்ஸான் வேரியண்ட்களை காட்டிலும் இவை விலைமிக்கதாக இருக்கும். நெக்ஸானின் இந்த புதிய வேரியண்ட்கள் நான்கும் டார்க் எடிசனிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கில் எக்ஸ்.இசட்.ஏ+ (பி) வேரியண்ட் தொடர்பாக டீலர்ஷிப் ஷோரூமில் இருந்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். நெக்ஸானிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய ராயல் நீல நிறமானது அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரில் கொடுக்கப்படும் ஒபெல் நீல நிறத்திற்கு இணையானதாக உள்ளது. மேலுள்ள வீடியோவில் புதிய நெக்ஸான் எக்ஸ்.இசட்.ஏ+ (பி) வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை காண முடிகிறது.

தன்னிச்சையாக டிம்-ஆகக்கூடிய பின்பக்கத்தை காட்டும் உட்புற கண்ணாடி மற்றும் சூடான காற்றை வெளிப்படுத்தக்கூடிய முன் இருக்கைகள் உள்ளிட்டவற்றை இந்த வேரியண்ட் கொண்டுள்ளது. இந்த வேரியண்ட் மட்டுமின்றி மற்ற மூன்று புதிய வேரியண்ட்களிலும் இந்த அம்சங்களை எதிர்பார்க்கலாம். எக்ஸ்.இசட்+ (பி) மற்றும் எக்ஸ்.இசட்.ஏ+ (பி) வேரியண்ட்களில் மட்டுமே கூடுதலாக பெனெக்கெ காலிகோ லெதர் உள்ளமைவு வழங்கப்பட்டுள்ளது.

இதே கேபின் லெதர் உள்ளமைவுதான் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நெக்ஸான் கஸிரங்கா எடிசனில் வழங்கப்பட்டு இருந்தது. அதேநேரம் எச்.எஸ் வேரியண்ட்களில் இவற்றுடன் கூடுதலாக தொழிற்சாலையிலேயே பொருத்தப்படும் காற்று சுத்திகரிப்பானை பெறலாம். இந்த கூடுதல் அம்சங்களை தவிர்த்து இந்த புதிய வேரியண்ட்கள் அனைத்திலும் நெக்ஸான் முந்தைய டாப் வேரியண்ட்டான எக்ஸ்.இசட்+ (ஒ)-வில் வழங்கப்படுபவையே வழங்கப்பட்டுள்ளன.

இந்த வகையில் நெக்ஸானின் டாப் வேரியண்ட்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளேவை ஏற்கக்கூடிய 7-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், தானியங்கி க்ளைமேட் கண்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள், எலக்ட்ரிக் சன்ரூஃப், பின் இருக்கை பயணிகளுக்கு ஏசி துளைகள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஐஆர்ஏ இணைப்பு கார் தொழிற்நுட்பம் உள்ளிட்டவற்றை பெறலாம்.

பயணிகளின் பாதுகாப்பிற்கு இரட்டை முன்பக்க காற்றுப்பைகள், ரிவர்ஸில் வருவதற்கு உதவியாக பார்க்கிங் சென்சார்கள், இபிடி உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி பிரோகிராம் (இஎஸ்பி) மற்றும் ஐசோஃபிக்ஸ் (ISOFIX) குழந்தை இருக்கைக்கான கொக்கி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. நெக்ஸானின் புதிய வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.87 லட்சங்களில் இருந்து ரூ.12.23 லட்சங்கள் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு புதிய வேரியண்ட்கள் பெட்ரோல் & டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளிலும் கிடைக்கும். நெக்ஸானில் வழங்கப்படும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 109 பிஎச்பி மற்றும் 260 என்எம் வரையிலும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

இவற்றுடன் டிரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. புதிய வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.87 லட்சத்தில் இருந்தே துவங்குகிறது என்றாலும், ரூ.7.39 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் டாடா நெக்ஸான் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








