சூப்பரு... புதிய டாடா Blackbird காரின் தோற்றம் இப்படியா இருக்க போகுது!! எஸ்யூவி கூபே...!
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான டாடா மோட்டார்ஸில் இருந்து அடுத்ததாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படும் ப்ளாக்பேர்டு காரின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதியதொரு நடுத்தர-அளவு எஸ்யூவி காரின் வடிவமைப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. டாடாவின் இந்திய கார்கள் வரிசையில் ஹெரியருக்கும், நெக்ஸானுக்கும் இடைப்பட்ட இடத்தில் இந்த புதிய மாடல் நிலைநிறுத்தப்பட உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸானுக்கு தற்சமயம் கிடைத்துவரும் வரவேற்பினை பற்றி நான் கூற வேண்டிய அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன். ஏனெனில் தற்சமயம் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எஸ்யூவி கார்களுள் நெக்ஸானே முதலிடத்தில் உள்ளது. அதேபோன்று, ஹெரியர் மற்றும் சஃபாரி கார்களும் பிரபலமான டாடா எஸ்யூவி கார்களாக விளங்குகின்றன. இதனாலேயே இவற்றிற்கு இடையில் புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி காரினை கொண்டுவர டாடா மோட்டார்ஸ் விரும்புகிறது.

மேலும் இந்த காரின் பெயர் "ப்ளாக் பேர்டு (Black bird) என சூட்டப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பெயரானது உலகளவில் பிரபலமான பைரட்ஸ் ஆஃப் கரீபியன் என்கிற ஹாலிவுட் படத்தில் வரும் கப்பலின் பெயரில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி காரினை உருவாக்கும் திட்டத்தில் கடந்த 2018இல் இருந்தே டாடா மோட்டார்ஸ் ஈடுப்பட்டு வருகிறது.

2018இல் காட்சிப்படுத்தப்பட்ட டாடா நடுத்தர-அளவு எஸ்யூவி காருக்கு முறையான அனுமதி கிடைக்க சற்று தாமதமாகியது என்றுதான் சொல்ல வேண்டும். நெக்ஸான் அடிப்படையில் உருவாக்கப்பட உள்ள டாடாவின் இந்த புதிய 5-இருக்கை எஸ்யூவி காருக்கு ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஆஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் உள்ளிட்டவை போட்டியாக விளங்கவுள்ளன.

அதுமட்டுமின்றி இந்த எஸ்யூவி கார்கள் வரிசையில் தங்களது புதிய தயாரிப்புகளையும் களமிறக்க மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இவ்வாறு இந்த பிரிவில் ஒவ்வொரு பிராண்டும் குறைந்தது ஒரு மாடலையாவது வைத்திருக்க விரும்புகின்றன. ஏனெனில் கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து வருகிறது.

காம்பெக்ட் எஸ்யூவி காரை காட்டிலும் பெரிய அளவில், சற்று கூடுதல் பயணிகள் பயணிக்கும் வகையிலான காரை விரும்புவோர் மற்ற வளர்ந்த நாடுகளை போல் நம் இந்தியாவிலும் பரவலாக அதிகரிக்க துவங்கியுள்ளனர். இதனால் இத்தகைய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவே எந்தவொரு ஆட்டோமொபைல் நிறுவனமும் விரும்பும்.

டாடா ப்ளாக்பேர்டு ஆனது இண்டிகா விஸ்டா-வில் இருந்து வரையறுக்கப்பட்ட எக்ஸ்1 ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட உள்ளது. மாடிஃபிகேஷன் மாற்றங்களுக்கு வித்திடுவது மட்டுமின்றி, இந்த இயக்குத்தளத்தில் உருவாக்கப்படும் கார்களின் நீளத்தினை 4.3 மீட்டர்களுக்கு குறையாமல் கொண்டுவரலாம். இதனால் நெக்ஸானை காட்டிலும் நீளமான வீல்பேஸை ப்ளாக்பேர்டில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

இதனை காட்டிலும் முக்கிய அம்சமாக, கூபே போன்றதான ஸ்டைலில் இந்த எஸ்யூவி காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வடிவமைக்க உள்ளதாம். எஸ்யூவி கூபே என்பது நமது இந்திய சந்தைக்கு மிகவும் புதியது. வழக்கமான எஸ்யூவி கார்களுடன் ஒப்பிடுகையில், எஸ்யூவி கூபே கார்களின் பின்பக்க பி-பில்லர்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. ஸ்டைலை பொறுத்தவரையில், நெக்ஸானை காட்டிலும் ப்ளாட்பேர்டு வித்தியாசமானதாக இருக்கும்.

இயக்க ஆற்றலை வழங்க டாடா ப்ளாட்பேர்டு கூபே ரக காரில் மற்ற டாடா கார்களில் பொருத்தப்படும் தற்போதைய 1.2 லிட்டர் டர்போ ரெவோட்ரான் என்ஜினில் இருங்து தருவிக்கப்பட்ட 1.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 1.2 லிட்டர் டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 160 எச்பி இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

அதேநேரம் தற்போதைய 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு ரெவோடார்க் டீசல் என்ஜினும் கூடுதல் ஆற்றல் மற்றும் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் அப்கிரேட் செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாம். டாடாவின் இந்த புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி காரின் அறிமுகத்தினை அடுத்த 2023ஆம் ஆண்டில் எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








