டாடாவின் இந்த 3 கார்களைதான் இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்குறாங்க.. காரணம் தெரிஞ்சா நீங்களும் வாங்குவீங்க!
இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கக் கூடிய மூன்று டாடா கார்களைப் பற்றிய தகவலையும், அவற்றை இந்தியர்கள் விரும்பி வாங்குவதற்கான காரணத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸின் தயாரிப்புகளுக்கு கடந்த சில மாதங்களாக வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, நிறுவனத்தின் நெக்ஸான் எனும் தயாரிப்பிற்கு மக்கள் மத்தியில் டிமாண்ட் நம்ப முடியாத அளவிற்கு வளர்ந்துக் காணப்படுகின்றது. இதேபோல், லேட்டஸ்ட் அறிமுகமான பஞ்ச் மற்றும் டியாகோ உள்ளிட்ட கார் மாடல்களுக்கும் மக்கள் நல்வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஆகையால், இந்த மூன்று மாடல்களே நிறுவனத்தின் டாப் செல்லிங் மாடல்களாக மாறியிருக்கின்றன. அதாவது மிக மிக அதிகம் விற்பனையாகும் டாடா கார்களாக காட்சியளிக்கின்றன. இவை கடந்த 2022 ஆகஸ்டில் எத்தனை யூனிட்டுகள் விற்பனையாகின என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்த தகவலை கடந்த 2021ம் ஆண்டின் ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிட்டு வழங்கியிருக்கின்றோம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா நெக்ஸான் (Tata Nexon)
டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் நான்கு எஸ்யூவி ரக கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. பஞ்ச், நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகியவையே அவை ஆகும். இவற்றில், டாடா நெக்ஸான் கார் மாடலுக்கு இந்தியர்கள் நல்ல வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் இந்த காரை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவிற்கு இந்தியர்கள் நல்வரவேற்பை வழங்கி வருகின்றனர்.

இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே 2022 ஆகஸ்டு மாதத்தில் யாரும் நம்ப முடியாத விற்பனை வளர்ச்சியை நெக்ஸான் பெற்றிருக்கின்றது. 15,085 யூனிட்டுகள் நெக்ஸான் கார்கள் 2022 ஆகஸ்டில் விற்பனையாகியிருக்கின்றன. இது 2021 ஆகஸ்டைக் காட்டிலும் 51 சதவீதம் அதிகம் விற்பனை எண்ணிக்கையாகும். சென்ற ஆண்டு ஆகஸ்டில் 10,006 யூனிட்டுகள் மட்டுமே இந்த நெக்ஸான் விற்பனையாகியிருந்தது.

டாடா நெக்ஸானுக்கு அதிகரித்துக் காணப்படும் வரவேற்பால் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் வாகன தயாரிப்பாளர்களின் பட்டியலில் பின்தங்கியிருந்த டாடா மோட்டார்ஸ் தற்போது முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்திருக்கின்றது. இந்த வாகனம் தற்போது இந்திய சந்தையில் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. விரைவில் இந்த காரை டாடா மோட்டார்ஸ் சிஎன்ஜி மோட்டார் தேர்விலும் விற்பனைக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா பஞ்ச் (Tata Punch)
டாடா மோட்டார்ஸின் லேட்டஸ்ட் லாஞ்சாக பஞ்ச் இருக்கின்றது. இந்த காரை நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட மிகக் குறுகிய காலத்திலேயே (ஓராண்டுகள்கூட ஆகாதநிலையில்) ஒரு லட்சம் யூனிட் விற்பனை எனும் வரலாற்று சாதனையைப் படைத்தது. ஆகஸ்டு மாதத்திலேயே தரமான சம்பவத்தை பஞ்ச் கார் செய்தது.

இத்தகைய சூப்பரான வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே நிறுவனத்தின் இரண்டாம் அதிகம் விற்பனையாகும் காராக பஞ்ச் மாறியிருக்கின்றது. பஞ்ச் ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். மலிவு விலைக் கொண்ட காராகவும் அது காட்சியளிக்கின்றது. இதன் விளைவாக விற்பனையில் பஞ்ச் கார் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருக்கின்றது.

மிக துள்ளியமாகக் கூற வேண்டும் என்றால் டாடா பஞ்ச் கடந்த 2022 ஆகஸ்டில் 12,006 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. இந்த வாகனம் தற்போது இந்திய சந்தையில் மாருதி சுஸுகி இக்னிஸ் போன்ற சிறிய கார்களுக்கு போட்டியாக இருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 5.93 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா டியாகோ (Tata Tiago)
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் டியாகோவும் ஒன்று. இந்த காரை வெகு விரைவில் நெக்ஸானைப் போல் மின்சார வெர்ஷனிலும் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது டாடா மோட்டார்ஸ். ஏற்கனவே கிடைத்துக் கொண்டிருக்கும் நல்ல விற்பனை வளர்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் மின்சார வெர்ஷன் டியாகோ அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

2022 ஆகஸ்டில் 7,209 யூனிட்டுகள் டியாகோ கார்கள் விற்பனையாகியிருக்கின்றது. இது கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டைக் காட்டிலும் 27 சதவீதம் அதிகம் விற்பனை எண்ணிக்கை ஆகும். இதே கார் மாடல் கடந்த 2021 ஆகஸ்டில் 5,658 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகின என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்படியான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருந்த இந்த ஹேட்ச்பேக் காருக்கே திடீரென வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

இவ்வாறு இந்த காருக்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுவதற்கு காரின் மலிவு விலை ஓர் காரணமாக இருந்தாலும், அதன் பாதுகாப்பு திறனே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. இந்த டியாகோ கார் பாதுகாப்பு ரேட்டிங்கில் ஐந்திற்கு நான்கு ஸ்டார்களைப் பெற்றிருக்கின்றது. இத்தகைய சூப்பரான தரமதிப்பு காரணத்தினாலேயே தற்போது விற்பனையில் வளர்ச்சியைக் காண தொடங்கியிருக்கின்றது.

இதேபோல், நெக்ஸான் மற்றும் பஞ்ச் கார் மாடல்களும் அதிக பாதுகாப்பான காராக இருக்கின்றன. சொல்லப்போனால் இவை இரண்டும் டியாகோவைவிட அதிக பாதுகாப்பான கார் மாடல்கள் ஆகும். இந்த இரு கார்களும் பாதுகாப்பு ரேட்டிங்கில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி, தொழில்நுட்ப வசதிகளிலும் இந்த கார் மாடல்கள் சிறந்து விளங்குகின்றன. இதன் விளைவாக இந்தியாவில் டாடாவின் இந்த மூன்று தயாரிப்புகளுக்கு வரவேற்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








