ஜாக்பாட்.... டாடாவிற்கு கிடைத்த பிரம்மாண்ட ஆர்டர்... மொத்தமா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி போடும் பிரபல நிறுவனம்!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு பிரம்மாண்டமான ஆர்டர் கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் எக்ஸ்பிரஸ்-டி (Xpres-T) எலெக்ட்ரிக் கார் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த சூழலில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு தற்போது மிகப்பெரிய ஜாக்பாட் ஒன்று அடித்துள்ளது.

எவேரா (Evera) நிறுவனத்திற்கு 2 ஆயிரம் எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்யும் ஆர்டர் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு தற்போது கிடைத்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் தற்போது முறைப்படி கையெழுத்தாகியுள்ளது. எவேரா என்பது ஓலா, உபேர் போன்று 'கேப்' சேவையை வழங்கி வரும் நிறுவனங்களில் ஒன்றாகும்.

ஆனால் இந்த நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே பயன்பாட்டில் வைத்துள்ளது. எவேரா நிறுவனம் ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களை வைத்துள்ளது. இந்த வரிசையில் 2 ஆயிரம் புதிய டாடா எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் கார்கள் எவேரா நிறுவனத்தின் கார்களுடன் இணையவிருக்கின்றன.

டாடா எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் கார், கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம்தான் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் ஃப்ளீட் (Fleet) வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான், டாடா எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும். அதாவது 'கேப்' போன்ற நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கார் விற்கப்படும்.

தனி நபர்களால் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க முடியாது. இது செடான் ரகத்தை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் ஆகும். 213 கிலோ மீட்டர்கள் மற்றும் 165 கிலோ மீட்டர்கள் என 2 ரேஞ்ச் ஆப்ஷன்களுடன் இந்த எலெக்ட்ரிக் காரை டாடா நிறுவனம் விற்பனை செய்கிறது. இது அராய் அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் கார் 21.5 kWh மற்றும் 16.5 kWh என 2 பேட்டரி ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், 21.5 kWh பேட்டரி பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரம்புவதற்கு 90 நிமிடங்களை மட்டுமே எடுத்து கொள்ளும். மறுபக்கத்தில் 16.5 kWh பேட்டரி இதை செய்வதற்கு 110 நிமிடங்களை எடுத்து கொள்ளும்.

இது ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் சார்ஜ் செய்வதற்கு ஆகும் நேரம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த காரில் ஏராளமான வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதில், 2 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகியவை முக்கியமானவை. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் பஸ்களையும் விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பஸ்களுக்கு குவிந்த ஆர்டர்கள் தொடர்பான செய்திகளை கடந்த மாதங்களில் நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். இந்த சூழலில்தான், எவேரா நிறுவனத்திற்கு 2 ஆயிரம் எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்யும் ஆர்டர் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

எனவே டாடா நிறுவனத்திற்கு கிடைத்துள்ள மற்றொரு ஜாக்பாட் என்றுதான் இதை சொல்ல வேண்டும். வரும் காலங்களிலும் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கைதான் ஓங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை டாடா எடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications








