திருமணத்திற்கு ஹெலிகாப்டர் காரை புக்கிங் செய்ய போட்டி போடும் மக்கள்! வாடகை எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
வாடகை மிகவும் குறைவு என்பதால், திருமணத்திற்கு ஹெலிகாப்டர் காரை முன்பதிவு செய்வதற்கு மக்கள் போட்டி போட்டு வருகின்றனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

திருமணத்திற்கு மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் போன்ற சொகுசு கார்களில் வந்து இறங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உள்ளது. ஆனால் அனைவராலும் சொகுசு கார்களை சொந்தமாக வாங்கி விட முடியாது. எனவே திருமணம் போன்ற விசேஷங்களுக்கு, சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

இன்னும் சிலருக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்க வேண்டும் என்ற கனவு கூட இருக்கிறது. சொகுசு கார்களை கூட வாடகைக்கு எடுத்து விடலாம். ஆனால் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுப்பது மிகவும் சிரமமான காரியம். இந்தியாவில் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு தற்போது ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு கிடைக்கவே செய்கின்றன.

ஆனால் ஒரு மணி நேரத்தில் 50 ஆயிரம், 60 ஆயிரம் என மிகவும் அதிக கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். நாங்கள் இங்கே கூறியிருப்பது குறைந்தபட்ச தொகைதான். இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையும் கூட சில ஹெலிகாப்டர்களுக்கு வாடகையாக வசூல் செய்யப்படுகிறது.

எனவே ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுப்பது என்பது அனைவருக்கும் சாத்தியப்படாது. இருப்பினும் நடுத்தர வர்க்க மக்களின் ஹெலிகாப்டர் ஆசையை நிறைவேற்றுவதற்காக மெக்கானிக் ஒருவர் வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார். நாடு முழுவதும் அனைவரின் கவனத்தையும் இது ஈர்த்துள்ளது.

பீஹார் (Bihar) மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் பகாஹா (Bagaha). இந்த பகுதியை சேர்ந்தவர் குடு சர்மா (Guddu Sharma). இவர் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர் தனது டாடா நானோ (Tata Nano) காரை தற்போது மாடிஃபிகேஷன் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

அப்படி என்ன பெரிதாக மாடிஃபிகேஷன் செய்து விட்டார்? என நீங்கள் நினைக்கலாம். குடு சர்மா தனது டாடா நானோ காரை ஹெலிகாப்டராக (Helicopter) மாற்றியமைத்துள்ளார். சமூக வலை தளங்களில் தற்போது வைரல் ஆகி வரும் புகைப்படங்களின் மூலம், இந்த டாடா நானோ காரின் மேற்கூரையில் இறக்கைகள் பொருத்தப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.

எனவே இது பார்ப்பதற்கு ஹெலிகாப்டர் போல காட்சியளிக்கிறது. இந்த காரின் பின் பகுதியிலும் இறக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஹெலிகாப்டரின் தோற்றத்துடன் இந்த கார் நன்றாக பொருந்தி போகிறது. தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த ஹெலிகாப்டர் காரை திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு குறைவான கட்டணத்தில் வாடகைக்கு விடலாம் என குடு சர்மா திட்டமிட்டுள்ளார்.

தற்போதே இந்த ஹெலிகாப்டர் காருக்கு முன்பதிவுகள் குவிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்த ஹெலிகாப்டர் காரை தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதற்கு மக்கள் ஆர்வமுடன் இருப்பது தெரியவருகிறது. மக்களின் ஹெலிகாப்டர் கனவை நிறைவேற்றுவதற்காக தனது டாடா நானோ காரை ஹெலிகாப்டர் போல் மாற்றியமைத்ததாக குடு சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''திருமண நிகழ்ச்சிகளுக்கு ஹெலிகாப்டர்களை முன்பதிவு செய்வதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக ஹெலிகாப்டர்களுக்கு அதிக 'டிமாண்ட்' உள்ளது. தங்களின் திருமணத்திற்கு ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்ற ஆசை பலரிடம் இருக்கிறது. ஆனால் கட்டணம் அதிகம் என்பதால், அனைவராலும் இந்த கனவை சாத்தியமாக்க முடியாது.

இதன் காரணமாகதான் எனது டாடா நானோ காரை ஹெலிகாப்டரின் டிசைனில் மாற்றியமைத்தேன். எனவே மக்கள் தங்கள் கனவை குறைந்த செலவில் நிறைவேற்றி கொள்ள முடியும்'' என்றார். ஆனால் இந்த ஹெலிகாப்டர் கார் வானத்தில் பறக்காது. ஹெலிகாப்டரின் டிசைனில் மட்டுமே இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாடா நானோ காரை ஹெலிகாப்டர் போல் மாற்றியமைப்பதற்கு சுமார் 2 லட்ச ரூபாயை குடு சர்மா செலவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹெலிகாப்டர் காரை திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு சுமார் 15 ஆயிரம் ரூபாய் என்ற குறைவான கட்டணத்தில் வாடகைக்கு விடுவதற்கு குடு சர்மா திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த கட்டணம் குறைவாக இருப்பதாலும், ஹெலிகாப்டர் காரின் டிசைன் மிகவும் வித்தியாசமாக இருப்பதாலும்தான் தற்போதே இந்த காரை முன்பதிவு செய்வதற்கு பலரும் போட்டி போட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் டாடா நானோ கார் ஹெலிகாப்டர் போன்ற தோற்றத்தில் மாற்றம் செய்யப்படுவது இது முதல் முறை கிடையாது.

இதற்கு முன்பாக இதே பீஹார் மாநிலத்தை சேர்ந்த மற்றொரு இளைஞரும் டாடா நானோ காரை ஹெலிகாப்டர் போல் மாற்றியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குடு சர்மாவின் ஹெலிகாப்டர் காரை போலவே, அந்த ஹெலிகாப்டர் காரும் வானத்தில் பறக்காது. அதுவும் ஹெலிகாப்டரின் தோற்றத்தில் டிசைன் மட்டுமே செய்யப்பட்டிருந்தது.

பைலட் ஆக வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறாத காரணத்தால், டாடா நானோ காரை ஹெலிகாப்டர் போன்று மாற்றியமைத்ததாக அந்த இளைஞர் கூறியிருந்தார். அந்த ஹெலிகாப்டர் காரை போலவே, தற்போது குடு சர்மாவின் ஹெலிகாப்டர் காரும் அனைவருடைய கவனத்தையும் கவர்ந்துள்ளது. இந்த வித்தியாசமான முயற்சிக்காக சமூக வலை தளங்களில் குடு சர்மாவிற்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








