யாரும் எதிர்பார்க்காத ரேஞ்ச்! டாடா நானோ இவி கார் வரப்போவது உறுதி?
டாடா நிறுவனம் முழு சார்ஜில் 200 கி.மீ பயணிக்கும் திறன் கொண்ட டாடா நானோ காரை அடிப்படையாகக் கொண்ட ஒரு மைக்ரோ இவி செக்மெண்ட் காரை அறிமுகப்படுத்தப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்!
இன்று இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் மிகப்பெரிய ஜாம்பவானாக இருக்கும் நிறுவனம் டாடா தான். தான் தயாரித்த கார்களில் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் விற்பனையாகும் 100ல் 80க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் கார் டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் தான். இந்நிறுவனம் சமீபத்தில் இந்தியாவிலேயே குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக டியாகோ இவி காரை அறிமுகப்படுத்தியது.

இந்த டியாகோ இவி கார் வரும் ஜனவரி மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இந்நிலையில் எம்ஜி நிறுவனம் சீனாவில் அந்நிறுவனத்தின் துணை பிராண்டாக வூலிங் என்ற பிராண்டில் உள்ள ஏர் என்ற இவி காரை இந்தியாவிற்குக் கொண்டு வர முடிவு செய்திருந்ததாகச் செய்திகள் வெளியானது அந்த கார் இந்தியாவிற்கு வந்தால் அது தான் இந்தியாவின் விலை குறைந்த எலெக்ட்ரிக் காராக இருக்கும் எனக் கூறப்படுகிறது. சீனாவில் தற்போது சிறிய ரக எலெக்ட்ரிக் கார் மிகப்பெரிய டிரெண்டாக மாறியுள்ளது.
இந்தியாவிலும் இந்த டிரெண்ட் ஒர்க்கவுட் ஆகலாம் எனப் பேசப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் சிறிய ரக கார், விலை குறைந்த கார் இந்த இரண்டையும் ஒரே காரில் வெளியிட்ட நிறுவனம் டாடா தான். கடந்த 2008ம் ஆண்டு டாடா நிறுவனம் வெறும் ரூ1 லட்சத்தில் காரை விற்பனைக்குக் கொண்டு வரப்போவதாக அறிவித்தது. ஆனால் இது பெரிய அளவில் சாத்தியப்படவில்லை. ஆனால் டாடா நானோ கார் விற்பனைக்கு வந்தது.
கார் விமர்சன ரீதியாகக் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இந்த காரை அறிமுகப்படுத்தும் போது விலை குறைந்த கார் என்ற பிரபலப்படுத்தியதே இந்த காரின் விற்பனைக்கு பெரும் பாதகமாக அமைந்துவிட்டது. இந்த காரை வாங்குவதைக் கவுரவ குறைச்சலாகப் பார்க்கத் துவங்கினர். பலர் இந்த காரை வாங்க விரும்பவில்லை. மேலும் விலையும் ரூ1 லட்சத்தையும் தாண்டி இருந்தது. இதனால் இந்த கார் மார்கெட்டில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில் 2018ம் ஆண்டு முதல் இந்த காரின் தயாரிப்பை டாடா நிறுவனம் குறைக்கத் துவங்கிவிட்டது. இந்நிலையில் மீண்டும் இந்தியாவில் சிறிய ரக கார்களுக்கான மவுசு அதிகமாகி வருவதாகப் பேச்சு எழுந்துள்ளதால் டாடா நிறுவனம் மீண்டும் நானோ காரை களத்தில் இறக்கத் தயாராகி வருகிறது. ஆனால் இந்த முறை பழைய தவற்றைத் திரும்பச் செய்யாமல் புதிய யுக்தியைக் கையாளவுள்ளது. இதற்காக நானோ காரை பெட்ரோல் காராக இல்லாமல் எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
டாடா நிறுவனம் ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் கொடி கட்டி பறந்து வரும் நிலையில் நானோ இவி காரை இந்தியாவில் விற்பனை செய்ய இது சிறந்த நேரமாக இருக்கிறது. அப்படி நானோ இவி கார் இந்திய மார்கெட்டிற்கு வந்தால் அது தான் அந்நிறுவனத்தின் மைக்ரோ இவி செக்மெண்டில் முதல் காராக இருக்கும். நானோ காரின் வடிவமைப்பை மாற்றி பழைய கார் தான் இவியாக மாறியுள்ளது என்ற தோற்றம் மக்களுக்குக் கிடைக்காமல் முற்றிலுமாக புதிதாகத் தெரியும்படியான காரை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கார் குறித்த மற்றொரு முக்கியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த கார் உருவாக்கப்பட்டால் இந்த கார் முழு சார்ஜில் 200 கி.மீ ரேஞ்ச் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்ற தகவல் மட்டும் உருவாகியுள்ளது. 200-250 கி.மீ ரேஞ்ச் கிடைக்கும் அளவிற்கு இந்த காரின் பேட்டரி மற்றும் மோட்டாரை வடிவமைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. நெக்ஸான், டிகோர், காரை தொடர்ந்து தற்போது டியாகோ காரை எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் ஜனவரி மாதம் இதன் விற்பனை மற்றும் டெலிவரி துவங்குகிறது.
இந்த காரை தொடர்ந்து டாடா நிறுவனத்தின் அடுத்த இவி கார் டாடா பஞ்ச் இவி கார் தான். டாடா பஞ்ச் கார் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. அதனால் அதன் இவி வெர்ஷனிற்கும் மக்கள் காத்திருக்கின்றனர். இந்த காரை தொடர்ந்து அடுத்தாக டாடா நானோவை அடிப்படையாகக் கொண்ட ஒரு இவி கார் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த காருக்கு டாடா நிறுவனம் நானோ என்று தான் பெயர் வைக்குமா அல்லது வேறு பெயரை வைக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் காலம் தான் இது குறித்த தகவல்கள் எல்லாம் பரபரப்பாக வெளியாகத் துவங்கிவிடும்.


Click it and Unblock the Notifications








