விற்பனையில் தூள் கிளப்பும் டாடா நெக்ஸான் இவி! நம்பவே முடியல இவ்ளோ சீக்கிரத்துல இத்தன யூனிட் விற்பனையாயிடுச்சா!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) விற்பனைக்கு வழங்கி வரும் நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனம் என்றழைக்கப்படும் டாடா மோட்டார்ஸ் நாட்டில் விற்பனைச் செய்து வரும் மிக முக்கியமான மின்சார கார் மாடல்களில் நெக்ஸான் இவி-யும் ஒன்று. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது அனைவரும் ஒன்றே. இந்த டிமாண்ட் தற்போது இன்னும் பல மடங்கு உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது மக்கள் மத்தியில் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காருக்கு செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் விற்பனையில் புதிய மைல் கல்லை அக்கார் எட்டியிருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் வெளியிட்டிருக்கும் புதிய தகவலின்படி, 13,500 யூனிட்டிற்கும் அதிகமாக டாடா நெக்ஸான் விற்பனையாகி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இதுகுறித்த தகவலையே நிறுவனம் தனது சமூக வளை தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டிருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு முதல் தனி நபர் பயன்பாட்டு பயணிகள் வாகனம் ஆகும். இது விற்பனைக்கு வந்த போது நாட்டின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராகவும் இருந்தது.

ஆனால், இந்த பட்டத்தை தற்போது டாடா நிறுவனத்தின் மற்றுமொரு மின்சார காரான டிகோர் இவி பிடித்திருக்கின்றது. நெக்ஸானைக் காட்டிலும் சற்று குறைவான விலையில் இக்கார் விற்பனைக்கு வந்த காரணத்தினால் தானாக இப்பட்டம் டிகோரை நோக்கி சென்றுவிட்டது.

ஆகையால், தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக டிகோர் இவி மாறியிருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் தற்போது ரூ. 11.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேநேரத்தில் தற்போது புதிய விற்பனை மைல் கல்லை எட்டியிருப்பதாகக் கூறப்படும் நெக்ஸான் இவி ரூ. 14 லட்சம் 29 ஆயிரம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இத்துடன் இக்காரை ரூ. 33,300 என்ற ஆரம்ப சந்தா கட்டணம் திட்டத்திலும் டாடா மோட்டார்ஸ் வழங்குகின்றது. டாடா நெக்ஸான் இவி இந்தியாவில் 2020 ஜனவரியிலேயே முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வு அரங்கேறி இரண்டாண்டுகள் ஆகின்றன. இந்த குறுகிய கால கட்டத்திலேயே 13,500 யூனிட் விற்பனையை நெக்ஸான் இவி பெற்றிருப்பது இந்தியாவின் மின் வாகன சந்தைக்கு கிடைத்திருக்கும் மிக பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.

டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார் ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எக்ஸ்எம், எக்ஸ்இசட்-ப்ளஸ், எக்ஸ்இசட்-ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்-ப்ளஸ் லக்ஸ் என்கிற வழக்கமான தேர்வுகளுடன் சேர்த்து எக்ஸ்இசட்-ப்ளஸ் டார்க் மற்றும் எக்ஸ்இசட்-ப்ளஸ் லக்ஸ் டார்க் எனும் சிறப்பு பதிப்புகளும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

டாடா நெக்ஸான் ஓர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற காராகும். இதே கட்டுமான யுக்தியைப்பயன்படுத்தியே நெக்ஸான் இவி-யும் தயாரிக்கப்படுகின்றது. இக்காரில் 30.2 kWh பேட்டரி தொகுப்பே பயன்படுத்தப்படுகிறது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 312 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சிங்க்ரோனஸ் மேக்னட் இன்டக்சன் மின் மோட்டார் 129 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க்கை வெளியேற்றும். டிரைவ் மற்றும் ஸ்போர்ட்ஸ் எனும் இரு விதமான டிரைவிங் மோட்களும் இக்காரில் வழங்கப்படுகின்றன. மேலும், வெறும் 9.9 செகண்டுகளிலேயே இக்கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இதுமட்டுமின்றி இக்காரில் ஸ்மார்ட் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் அஸ்செண்ட் அசிஸ்ட், ஹில் டெசன்ட் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் ஸ்மார்ட் டிரைவ் சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் காரை வழக்கமான 15 A திறன் கொண்ட எந்த பிளக் பாயிண்டிலும் வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இதில் வைத்து சார்ஜ் செய்யும் பட்சத்தில் எலெக்ட்ரிக் காரை முழுமையாக சார்ஜ் செய்ய 8.5 மணி நேரங்கள் தேவைப்படும். அதே நேரத்தில் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களில் சார்ஜ் செய்தால் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை வெறும் 60 நிமிடங்களிலேயே பெற்றுவிடும். இதுமாதிரியான சூப்பர் திறன்களுடனேயே டாடா நெக்ஸான் இவி இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.


Click it and Unblock the Notifications








