அனைவரும் பயன்படுத்தலாம்... டாடா பவர், அப்பல்லோ டயர்ஸ் கூட்டணியில் உருவாக இருக்கும் சார்ஜிங் மையங்கள்!
டாடா பவர் (Tata Power) மற்றும் அப்பல்லோ டயர்ஸ் (Apollo Tyres) ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா பவர் (Tata Power) மற்றும் அப்பல்லோ டயர்ஸ் (Apollo Tyres) ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றன. இந்தியாவில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இரு நிறுவனங்களும் இணைந்திருக்கின்றன. ஆம், இரு பிரமாண்ட நிறுவனங்களும் இணைந்து நாட்டில் உள்ள சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருக்கின்றன.

டாடா பவர் நிறுவனம் மின்சாரம் சார்ந்த பணிகளை நாட்டில் மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் கருவி உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. இது டிசி001, ஏசி, டைப்2 மற்றும் 50 kWh திறன் வரையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை உருவாக்கி வருகின்றது.

இதுமாதிரியான சார்ஜிங் மையங்களையே தனக்கு சொந்தமான இடங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அப்பல்லோ டயர்ஸ் திட்டமிட்டிருக்கின்றது. இந்த பணியை இணைந்து செய்யும் பொருட்டே இரு முன்னணி நிறுவனங்களும் தற்போது ஒன்று சேர்ந்திருக்கின்றன.

நாடு முழுவதும் உள்ள முக்கியமான பகுதிகளில் சார்ஜிங் மையங்கள் கட்டமைக்கப்பட இருக்கின்றன. அதாவது, அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வர்த்தக மையங்கள் மற்றும் பாசஞ்ஜர் வாகனங்களுக்கான ஜோன்களிலேயே எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான வசதி உருவாக்கப்பட இருக்கின்றது.

மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் தட்டுப்பாடு உள்ள இடங்களில் அவற்றின் வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் வகையில் அந்த சார்ஜிங் மையங்கள் பன்பாட்டிற்கு வர இருக்கின்றன. சமீப காலமாக இந்தியர்கள் மத்தியில் மின் வாகனங்களுக்கு நல்ல டிமாண்ட் கிடைத்து வருகின்றது.

ஆனால், அவற்றை சார்ஜ் செய்வதற்கான பொது சார்ஜிங் மையங்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை. இதன் விளைவாக ஒரு சிலர் மின் வாகன பயன்பாட்டிற்கு மாற தயக்கம் காட்டி வருகின்றனர். இத்தகைய சூழலை தவிர்க்கும் பொருட்டு நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பல செயல்பட தொடங்கியிருக்கின்றன.

இந்த நிலையிலேயே அப்பல்லோ டயர்ஸ், டாடா பவர் நிறுவனத்துடன் சேர்ந்து மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை உருவாக்க இருப்பதாக அறிவித்திருக்கின்றன. இது உருவாக்கும் சார்ஜிங் மையங்கள் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் என அனைத்து ரக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும்.

ஏற்கனவே டாடா பவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சார்ஜிங் மையங்களை 200க்கும் அதிகமான நகரங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றது. அவை இஇசட் (EZ) எனும் பிராண்ட் பெயரில் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையிலேயே மேலும் 150 சார்ஜிங் மையங்களை உருவாக்க அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்துடன் டாடா பவர் கை கோர்த்திருக்கின்றது.

இந்த புதிய மையங்கள் அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களால் மட்டுமின்றி பொதுமக்கள் பலராலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. கிரீன் மொபிலிட்டி மற்றும் டூ-கிரீன் எனும் தத்துவத்தின் அடிப்படையில் இரு நிறுவனங்களும் இப்பணியைக் கையிலெடுத்துள்ளன.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான மன நிலை மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரூ. 100 ஐக் கடந்து விற்பனைச் செய்யப்படுகின்றன. இந்த நிலையே மக்களை மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்த தொடங்கியிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயனளிக்கும் வகையில் நாட்டில் பொது சார்ஜிங் மையங்களை அதிகரிக்கச் செய்ய இரு பிரமாண்ட நிறுவனங்களும் திட்டமிட்டிருப்பது மின்சார வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








