டாடா நெக்ஸான் காருக்கு இப்படி ஒரு வரவேற்பா?.. எல்லாத்துலையும் டாப்புல இருக்கு! டாடா தயாரிப்புனா சும்மாவா!
டாடா நெக்ஸான் உற்பத்தியில் புதிய மைல் கல்லை எட்டியிருக்கின்றது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் முக்கிய தகவலையும், இந்த மாடலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நான்கு புதிய தேர்வுகள் பற்றிய தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இந்தியாவில் விற்பனைக்கு வழங்கும் மிக முக்கியமான கார் மாடலாக நெக்ஸான் (Nexon) இருக்கின்றது. இது எஸ்யூவி ரக காராகும். இந்த காரை மிக முக்கியமான தயாரிப்பாக கருதுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இது ஓர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு திறன் பெற்ற கார் என்பதே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் காராகவும் நெக்ஸான் தற்போது மாறியிருக்கின்றது. இதன் விளைவாக உற்பத்தியில் இக்கார் புது புது சாதனைகளை படைத்த வண்ணம் இருக்கின்றது. அண்மையில் 2 லட்சம் யூனிட் உற்பத்தி என்ற புதிய மைல் கல்லை சாதனையை எட்டியிருந்த நிலையில், தற்போது, 3 லட்சம் யூனிட் உற்பத்தி எனும் மைல் கல்லையும் எட்டியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இக்காரை தனது ரஞ்ஜன்கான் உற்பத்தி ஆலையில் வைத்து கட்டமைத்து வருகின்றது. இந்த ஆலையின் வாயிலாகவே 3 லட்சம் யூனிட் வரை உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றது. இரண்டு லட்சம் யூனிட் உற்பத்தி மைல் கல் எனும் சாதனையை 2021 ஜூன் மாதத்திலேயே நெக்ஸான் அடைந்திருந்தது.

இந்த சாதனை நடைபெற்று 8 மாதங்கள் மட்டுமே ஆகின்ற நிலையில், மிக விரைவில் 3 லட்சம் யூனிட் எனும் மற்றுமொரு சாதனையையும் நெக்ஸான் படைத்திருக்கின்றது. தொடர்ச்சியாக வரவேற்பு அதிகரித்துக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் நாட்டின் நான்காவது அதிகம் விற்பனையாகும் காராக நெக்ஸான் மாறியிருக்கின்றது.

அதேவேலையில் நிறுவனத்தின் முதல் அதிகம் விற்பனையாகும் கார் இதுதான் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது நான்கு புதிய ட்ரிம்களை நிறுவனம் இக்காரில் அறிமுகம் செய்திருக்கின்றது. எக்ஸ்இசட்-ப்ளஸ் (பி) - XZ+ (P), எக்ஸ்இசட்ஏ-ப்ளஸ் (பி) - XZA+ (P), எக்ஸ்இசட்-ப்ளஸ் (எச்எஸ்) - XZ+ (HS) மற்றும் எக்ஸ்இசட்ஏ-ப்ளஸ் (எச்எஸ்) - XZA+ (HS) ஆகிய தேர்வுகளே புதிதாக அறிமுகம் செய்யப்பட்டவை ஆகும்.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் இந்த ட்ரிம்கள் விற்பனைக்குக் கிடைக்கும். புதிய ட்ரிம் ரூ. 11.59 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும். இவை சற்று உயர் நிலை ட்ரிம்கள் என்பதால் கூடுதல் சிறப்பம்சங்களுடன் அவைக் காட்சியளிக்கின்றன.

வெண்டிலேட்டட் இருக்கைகள், காற்று தூய்மையாக்கும் கருவி, தானியங்கி டிம்மிங் ஐஆர்விஎம், பிரீமியம் பெனெக்கே கலிக்கோ லெதர் இருக்கை உள்ளிட்டவை இந்த ட்ரிம்களில் கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த அம்சங்கள் காசிரங்கா எடிசனில் டாடா மோட்டார்ஸ் வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

புதிய ட்ரிம்களின் அறிமுகத்தால் தற்போது நெக்ஸானில் கிடைக்கும் தேர்வுகளிலும் அதிகரித்துக் காணப்படுகின்றது. 22 விதமான பெட்ரோல் எஞ்ஜின் தேர்வும், 18 விதமான தேர்வுகள் டீசல் எஞ்ஜினிலும் வழங்கப்படுகின்றது. டாடா நெக்ஸான் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமில்லைங்க மின்சார தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதுவும் நாட்டில் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றது. நெக்ஸான் இவி இதுவரை 13,500 யூனிட் வரை விற்பனையாகியிருக்கின்றது. இது மிக சிறப்பான விற்பனை வளர்ச்சியாகும். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே விற்பனையிலும், உற்பத்தியிலும் மகத்தான வளர்ச்சியை நெக்ஸான் எஸ்யூவி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாடா நெக்ஸான ரூ. 7.4 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த காரில் கூடுதல் தேர்வை வழங்கும் விதமாக டார்க் எடிசன் எனும் சிறப்பு தேர்வையும் டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.


Click it and Unblock the Notifications








