இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவு தொடங்கியது... இவ்ளோ மட்டும் கட்டினால் போதுமா!
இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV) வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை 8.49 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் அக்டோபர் 10ம் தேதியில் இருந்து தொடங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன்படி டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக இன்று முதல் தொடங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து கொள்ள முடியும். டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் மொத்தம் நான்கு வேரியண்ட்களிலும், இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடனும் விற்பனை செய்யப்படும். 19.2kWh மற்றும் 24kWh என 2 பேட்டரி ஆப்ஷன்களில் நீங்கள் இந்த புதிய எலெக்ட்ரிக் காரை தேர்வு செய்ய முடியும்.

இதில், 19.2kWh பேட்டரி ஆப்ஷனின் ரேஞ்ச் 250 கிலோ மீட்டர்கள் எனவும், 24kWh பேட்டரி ஆப்ஷனின் ரேஞ்ச் 315 கிலோ மீட்டர்கள் எனவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், 24kWh பேட்டரி ஆப்ஷன் பொருத்தப்பட்ட மாடல்களின் உற்பத்தி மற்றும் டெலிவரி பணிகளுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

சரி, இந்த புதிய எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் எப்போது தொடங்கப்படும்? என்ற சந்தேகம் தற்போது உங்களுக்கு வந்திருக்கலாம். டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கப்படும். அதற்கு முன்னதாக நீங்கள் விருப்பப்பட்டால், டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க முடியும்.

ஆனால் அதற்கு நீங்கள் வரும் டிசம்பர் மாதத்தின் இறுதி வரை காத்திருக்க வேண்டும். அப்போதுதான் இந்த புதிய எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கவுள்ளது. இதற்கெல்லாம் முன்னதாக டியாகோ எலெக்ட்ரிக் காரை நடப்பு அக்டோபர் மாதத்திலேயே இந்தியாவின் முன்னணி நகரங்களில் எல்லாம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிக்கு வைக்கவுள்ளது.

முக்கியமான நகரங்களில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் காட்சிக்கு வைக்கப்படும். இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருந்தாலும் கூட, டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில், வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகளுடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சிட்டி மற்றும் ஸ்போர்ட் டிரைவ் மோடுகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் நெக்ஸான் எலெக்ட்ரிக் மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார் என 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் மூன்றாவது எலெக்ட்ரிக் காராக தற்போது டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் இணைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரிப்பதற்கு டியாகோ எலெக்ட்ரிக் கார் உதவி செய்யும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

டியாகோ எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து, அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் மற்றும் பன்ச் எலெக்ட்ரிக் கார் ஆகிய 2 புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த 2 புதிய எலெக்ட்ரிக் கார்களும் வெகு விரைவிலேயே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








